அடிப்படைவாதத்தினால் கவரப்பட்ட முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலரினால் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட இலங்கைவாழ் முஸ்லிம்களுக்குப் பல்வேறு வகையான உரிமைகள் மற்றும் சலுகைகள் மன்னர் ஆட்சிக்காலம் தொட்டு இன்றும் வழங்கப்படுகின்றன.
முஸ்லிம்கள் அனுபவித்து வருகின்ற உரிமைகளையும், சலுகைகளையும் இல்லாமலாக்குவதற்கான நடவடிக்கைகளை சில கடும்போக்குக் குழுக்கள் முன்னெடுத்திருந்தன.
மிகத் திட்டமிட்ட வகையிலான இந்த முன்னெடுப்பு யுத்தத்திற்குப் பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையிலேயே கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல், குறித்த குழுக்களின் செயற்பாடுகளுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
இதன் ஓர் அங்கமாக, கடந்த 2019 ஏப்ரல் 30 ஆம் திகதி ஜனாதிபதியின் அவசர சட்ட ஏற்பாடுகளின் கீழ் வெளியிடப்பட்ட 2121/1ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி பத்திரிகை மூலம் புர்கா, நிகாப் தடை செய்யப்பட்டது. எனினும்,
நாட்டில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் இந்த புர்கா, நிகாபிற்கான தடையும் இல்லாமலாக்கப்பட்டது.
இந்நிலையில் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரினால் இவ்விடயம் தொடர்பில் பொது இடங்களில் முகத்தை மறைத்தலை தடை செய்தல் என்ற தலைப்பில் 2019.07.17 அன்று அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்ட போதும் அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பினால் அதற்கு அங்கீகாரம் கிடைக்காமையால் அது கைவிடப்பட்டது.
அது மாத்திரமல்லாமல், நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரஸாக்களை தடைசெய்ய வேண்டும், ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும், முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமலாக்கல் போன்ற பல பிரசாரங்கள் கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் சில பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் நேரடியாக முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில், முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை நாட்டில் தடை செய்ய வேண்டும். அதனை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற பரிந்துரையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 120 பக்கங்களைக் கொண்ட இந்தப் பரிந்துரை நாட்டின் உயர் சபையான பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவினால் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி சமர்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் பாராளுமன்றம் கலைக்கப்படலாமெனப் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி பாராளுமன்றத்தின் இறுதி அமர்வாகும். இந்த இறுதி அமர்விற்கு ஒரு நாள் முன்பதாக யாரும் எதிர்பாராத வகையில் இந்த சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை பாரிய கேள்வியை தோற்றுவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான மலித் ஜயதிலக தலைமையிலான இந்த தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவில் எம்.எஸ்.தௌபீக், எம்.ஐ.எம்.மன்சூர், வீரகுமார திஸாநாயக்க,
செஹான் சேமசிங்க, விஜிதஹேரத், பேராசிரியர் ஆசு மாரசிங்க, எம்.ஏ.சுமந்திரன், காவிந்த ஜயவர்தன, எஸ்.வியாழேந்திரன், புத்திக பத்திரன , பாலித தெவரப்பெரும, ஏ.ஏ.விஜேதுங்க, சித்தார்த்தன், சந்திம கமகே, மயந்த திஸாநாயக்க, பந்துலால் பண்டாரிகொட உள்ளிட்ட 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்கள் அனைவரினதும் ஒப்புதலுடனேயே குறித்த பரிந்துரைகள் வெளியிடப்பட்டதாக பாராளுமன்றத்தின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குழுவின் அறிக்கையில் மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன:
1. முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் விரிவாக கட்டமைப்பு ரீதியில் திருத்தப்பட வேண்டும். மணமகள் – மணமகன் இருவரும் திருமணத்தின் போது 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். திருமணங்கள் பதிவு செய்யப்படுவதோடு பொதுச் சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறக்கூடியவாறு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.
2. முஸ்லிம் சிவில் சமூகத்தை வலுவூட்ட வேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தை வலுவூட்ட வேண்டும்.
3. வக்பு சட்டத்தை திருத்தி பள்ளிவாசல்களில் இடம்பெறும் அனைத்து பிரசாரங்களையும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும். முஸ்லிம் இன விகிதாசாரத்திற்கு அமைய பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்.
4. இன அடிப்படையிலான மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவை இடைநிறுத்த வேண்டும். இலங்கை அடையாள இலக்கத்தினை கொண்ட பிறப்பு அத்தாட்சி பத்திரமொன்றை வெளியிட வேண்டும். சகல சமயங்களையும் இணைத்து சர்வமத அலுவல்கள் அமைச்சு உருவாக்க வேண்டும்.
இந்தக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் நாட்டில் சிறுபான்மையாக வாழும் ஒரு சமூகமான முஸ்லிம் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறானதொரு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்றக் குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரும் இருந்துள்ளனர்.
தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த குழுவினால் வெளியிடப்பட்ட பரிந்துரைகள் பற்றி அந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தும் மௌனம் காக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்த பரிந்துரைகள் தங்களிடம் காண்பிக்கப்படவில்லை எனவும் இதற்கு ஆதரவாக தாங்கள் கையொப்பமும் இடவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
“இக்குழுவில் நாங்கள் இரு முஸ்லிம் எம்.பிக்கள் இருந்தோம். ஆனால் அப்படி இருந்தும் அங்கு எடுக்கப்படும் முடிவுகளில் எமக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மன்சூர் எம்.பி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இது வேறொரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்டுத்தப்பட்டது. நாங்கள் பல முறை எதிர்த்து பேசிவிட்டு இறுதியாக எப்படியும் ஒப்பமிடும் சந்தர்ப்பத்தில் அத்தனைக்கும் பதம் பார்ப்போம் என்றெண்ணி மௌனமாக இருந்தோம்.
அச் சமயம் அத்தனையும் காய்நகர்த்தி விட்டு எம்மிடம் கையொப்பம் கூட எடுக்காமல் வெளியிடப்பட்ட அறிக்கை இது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். எந்தவொரு முஸ்லிமும் இவ்வாறான சட்டங்களுக்கு தலைசாய்ப்பார்களா? சற்று சிந்தனை செய்து பாருங்கள்” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கூறுவதுபோல், நடந்திருப்பின் பரிந்துரைகளை குழுவின் அங்கத்தவர்களிடம் காண்பிக்காமல் வெளியிடப்பட்டமை பல கேள்விகளை தோற்றுவிக்கின்றன. நாட்டின் உயர் சபையான பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குழுவினால் நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகமொன்று குறிவைக்கப்பட்டதன் மர்மம் என்ன?
இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் இந்தக் குழுவின் முஸ்லிம் உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் தொடர்ச்சியாக அமைதி பேணாமல் உண்மைத் தன்மையை முஸ்லிம் சமூகத்திற்கு அவசரமாகவும் உடனடியாகவும் வெளியிட வேண்டும். இது அவர்களின் தலையாய கடமையாகும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர்கள் இருவரும் பிரதிநிதிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, இதுபோன்ற முக்கியமான குழுக்களிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் கட்சிகள் சிபாரிசு செய்யும் போது குறித்த விடயத்தில் ஆர்வமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை கருத்திற்கொள்ள வேண்டும்.
“தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடக மாநாடொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்திற்கு சவால் விட்டிருந்தார்.
இதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடக அறிக்கையொன்றினையும் வெளியிட்டிருந்தார்.
தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழு போன்ற பாராளுமன்றத்திலுள்ள குழுக்களின் விடயங்களில் எதிர்காலத்திலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதேவேளை, இந்த குழுக்களினால் முன்வைக்கப்படும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பரிந்துரைகளின் போது கட்சி வேறுபாடுகளை மறந்து கூட்டாகப் போராட வேண்டும்.-Vidivelli
- றிப்தி அலி