இந்தியாவின் டில்லியிலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம்களை இலக்கு வைத்து கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளில் இதுவரை 48 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நூற்றுக் கணக்கான வீடுகளும் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பல பள்ளிவாசல்களும் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலையங்களுக்கு மிக அண்மித்த பிரதேசங்களிலேயே இந்த வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. சில இடங்களில் பொலிசார் நடத்திய தாக்குதலிலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகளால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் போன்றே டில்லியிலும் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தினால் கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராடி வருகின்றனர். குறிப்பாக வரலாற்றில் என்றுமில்லாதவாறு முஸ்லிம் பெண்கள் இப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இரவிரவாக குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வீதியில் அமர்ந்து இம் மக்கள் போராடி வருகின்றனர். இவ்வாறு போராடுவோருக்கு எதிராக, ஆளும் கட்சியின் ஆதரவாளர்களே திட்டமிட்ட வகையில் அண்மையில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். அதுவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் தங்கியிருந்த நாட்களிலேயே இந்த வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இதன் பின்னணியில் பி.ஜே.பி. அரசியல்வாதிகள் பலர் இருப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. சர்வதேச நாடுகளும் இந்த வன்முறைகளைக் கண்டித்துள்ளதுடன் இதனை முடிவுக்குக் கொண்டு வருமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
”டெல்லி வன்முறைச் சம்பவத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள் தான். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்துள்ளமை கவலை அளிக்கிறது. இவ்வாறான வன்முறை இனி இந்தியாவில் நிகழக்கூடாது‘‘ என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் சரீப் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘‘மூன்று நாட்கள் நடைபெற்ற வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர். இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு மதத்தை சேர்ந்தவர்களும் டெல்லி வன்முறையில் உயிரிழந்துள்ளனர், பலர் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டாலும், இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள் தான். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இடம் பெயர்ந்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த வன்முறைகளுக்குக் காரணமான குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு எதிரான வழக்குகளில் ஐக்கிய நாடுகள் சபையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இந்திய உயர்நீதிமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் மனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை இந்த விடயத்தின் பாரதூரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அந்த வகையில் சர்வதேசத்தின் கண்டனத்தையும் சம்பாதித்துள்ள இந்த வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வகைத்தன்மை கொண்ட நாடு எனும் பெயர் பெற்ற இந்தியாவின் தனது நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
மேலும் டில்லியிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீடு வழங்குவதுடன் இடம்பெயர்ந்தோர் உடன் மீளத்திரும்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli