சவூதி அரேபியாவைச் சேர்ந்தோரல்லாத அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் உம்ரா கடமையினை நிறைவேற்ற வருகை தருவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.
COVID–19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு அமைய மக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு வெளிநாட்டவர்கள் உம்ராவுக்கோ அல்லது சுற்றுலா நோக்கிலோ வருகை தருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்–19 வைரஸ் 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதையடுத்து சவூதி அரேபியாவில் மாத்திரமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் சுற்றுலாவுக்கு தடை விதிப்பதற்கும் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்று கூடலைத் தடுப்பதற்கும் அந்நாட்டின் தலைவர்கள் நேற்று முன்தினம் தீர்மானித்திருக்கிறார்கள். ஜப்பான் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்று கூடும் டிஸ்னி லேன்ட்டை இரு வாரங்களுக்கு மூடியுள்ளது.
சவூதி அரசாங்கம் உம்ரா கடமைக்கு கடந்த வியாழக்கிழமை திடீரென தடை விதித்ததால் உலகெங்குமிருந்து உம்ரா கடமைக்காக சவூதி நோக்கி பயணிக்கவிருந்த இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளானார்கள். அவர்களது பயணம் தடைப்பட்டதனையடுத்து கவலையுடன் திரும்பிச் சென்றார்கள்.
சவூதி சுகாதார அமைச்சின் சிபாரிசுக்கு அமைவாக வெளிவிவகார அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இத்தீர்மானம் தற்காலிகமானது எனவும் தொடர்ந்து நிலைமைகளை அவதானிக்கவுள்ளதாகவும் சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் நேற்று முன்தினம் வரை 3041 பேர் பலியாகியுள்ளதுடன் 89071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் ஈரானில் மாத்திரம் 54 பேர் மரணமாகியுள்ளதுடன் 978 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கொவிட்–19 வைரஸ் பரவுவதிலிருந்தும் யாத்திரிகர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சவூதி அரசாங்கம் மேற்கொண்டுள்ள இத்தீர்மானத்தை ஆதரிப்பதாக சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு (O.I.C) அமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு இந்த வைரஸ் தொற்றிலிருந்தும் யாத்திரிகர்களைப் பாதுகாக்கும் வகையில் உம்ராவுக்கு தற்காலிக தடை விதித்துள்ள இத்தீர்மானம் ஷரீஆ விதிகளுக்கு உட்பட்டது என எகிப்தை தளமாகக் கொண்டியங்கும் இஸ்லாமிய ஆய்வு நிறுவனமான தாருல் இப்தா தெரிவித்துள்ளது. இத்தீர்மானம் மனிதர்களைப் பாதுகாக்கும் நோக்கிலானது என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் புனித நகர்களான மக்கா மற்றும் மதீனாவில் ஒன்று கூடுகிறார்கள். அவ்வாறான மக்கள் வைரஸ் தொற்றுக்குள்ளான நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
இந்நிலையில் உம்ரா தடை செய்யப்பட்டிருக்காது விட்டால் வைரஸ் வேகமாக பல நாடுகளுக்கும் பரவும் நிலை உருவாகும். அத்துடன் இவ்வருட ஹஜ் யாத்திரையும் பாதிக்கப்படும். இந் நிலைமையினை உணர்ந்து சரியான நேரத்தில் சவூதி அரேபிய தீர்மானம் மேற்கொண்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது.
இதேவேளை சவூதி அரேபிய அரசின் உம்ராவுக்கான தடை உத்தரவு வெளியிடப்படுவதற்கு முன்பு பயண ஏற்பாடுகளை செய்திருந்த உம்ரா யாத்திரிகர்கள் செலுத்திய கட்டணங்களை மீள செலுத்துவதற்கு சவூதி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென இலத்திரனியல் செயல்முறையொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. உம்ரா யாத்திரிகர்கள் தங்கள் பயண முகவர் ஊடாக கட்டணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
உலக முஸ்லிம் சமூகம் விரைவில் தங்களது இறுதிக் கடமையான ஹஜ்ஜை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மக்காவிலும் மதீனாவிலும் ஒன்றுகூடவுள்ளனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே உம்ராவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
உம்ரா கட்டாயக் கடமையல்ல. ஆனால் ஹஜ் வசதியும்,
வாய்ப்புமுள்ளவர்களுக்கு கட்டாய கடமையாகும்.
மக்களை கடுமையாகத் தாக்கும் கொவிட்–19 வைரஸை முழுமையாக ஒழிப்பதற்கு நாமும் ஒத்துழைப்போம். பிரார்த்தனை புரிவோம். அதன் மூலமே எவ்வித அச்சமுமின்றி ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை இவ்வருடம் முஸ்லிம்கள் நிறைவேற்ற முடியுமாகவிருக்கும்.-Vidivelli