ஹஸன் அலி கட்சியிலிருந்து விலகியதால் அதிகமதிகம் வருத்தப்பட்டவன் நான்தான்
அவர் உட்பட அனைவரையும் மீள இணையுமாறு அழைப்பு விடுக்கிறார் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிச் சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு மனப்பூர்வமாக அழைப்புவிடுப்பதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, கட்சியிலிருந்து விலகிச் சென்றதால் தான் அதிகம் வருத்தப்பட்டதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
கண்டி பொல்கொல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் 29 ஆவது பேராளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த இயக்கத்திலிருந்து சரியாகவோ, பிழையாகவோ தடுமாற்றத்தின் காரணமாகவோ அல்லது அவர்கள் சொல்கின்ற நியாயங்களின்பாற்பட்டோ பிரிந்து சென்றவர்கள் எங்கிருந்தாலும் இந்த இயக்கத்தில் வந்து மீண்டும் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு மிக மனப்பூர்வமாக அழைப்பு விடுக்கிறேன்.
இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து நானாக யாரையும் வலுக்கட்டாயமாக கட்சியிலிருந்து விரட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் செயற்பட்டது கிடையாது.
அவ்வப்போது ஒவ்வொருவரும் பல்வேறு விதமான காரண காரியங்களைச் சொல்லி இந்த இயக்கத்தை விட்டு விலகிச் சென்றாலும் இந்த நாட்டு முஸ்லிம்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்ற அரசியல் தலைமை, கட்சி இது என்பதை நாங்கள் மாறி மாறி பல தேர்தல்களிலே நிரூபித்து வந்திருக்கிறோம்.
எனது ஆதங்கம் ஒன்றை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். விலகிச் சென்ற எல்லோருக்கும் பரவலாக நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். ஆனால் குறிப்பாக கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்களை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். அவர் இந்தக் கட்சியின் ஆரம்ப காலப் போராளி மாத்திரமல்ல, அவர் இந்தக் கட்சியை விட்டும் தூர விலகியிருப்பதன் வருத்தம் என்னை விட வேறு யாருக்கும் அதிகம் இருக்க முடியாது.
ஆனால், அவருடைய செயற்பாடுகள் கட்சியின் தலைமையை மீறி சுயநல அரசியலை மையப்படுத்தியதாக இருந்தன என்று இட்டுக்கட்டப்பட்ட சில கதைகளை அவர் விலகிச் சென்றதன் பிற்பாடு ஒரு சிலர் சொல்லித்திரிவதான ஆதங்கம் அவருக்கும் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அவர் இந்தக் கட்சியில் இருந்த கடைசி நிமிடம் வரை தலைமைத்துவத்தின் கட்டளைகளை ஒருபொழுதும் மீறிச் செயற்படவில்லை என்பதை நான் மிகத் தெளிவாகக் இங்கு சாட்சியம்கூற விரும்புகிறேன். இந்தக் கட்சியிலிருந்து தூர விலகியிருந்து, கட்சிக்கு விரோதமான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட்டாலும்கூட அவர்களது மனம் புண்படுகின்ற வகையிலே நாங்கள் நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.-Vidivelli