2020 ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள ஹஜ் யாத்திரிகர் எவரும் ஹஜ் முகவர்களுக்கு கடவுச்சீட்டை வழங்கவோ முற்பணம் செலுத்தவோ வேண்டாம். அவ்வாறு செலுத்தியிருந்தால் உடனடியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அறிவிக்கும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
ஹஜ் கட்டணத்தை திணைக்களம் சிபாரிசு செய்யும் அரச வங்கியொன்றில் கணக்கொன்றினைத் திறந்து அந்த வங்கிக் கணக்கிலே வைப்பிலிட வேண்டும் வங்கியின் பெயர் விபரம் ஓரிரு நாட்களில் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் 2020 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் ‘விடிவெள்ளி’க்கு மேலும் தெளிவுபடுத்துகையில் தெரிவித்ததாவது;
ஹஜ் யாத்திரிகர்கள் எந்த ஹஜ் முகவர் நிலையத்தையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஒரு வாரத்தினுள் 2020 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் முகவர் நிலையங்களின் பட்டியல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதுவரை ஹஜ் யாத்திரிகர்கள் காத்திருக்கும்படி வேண்டப்படுகிறார்கள்.
அத்தோடு சில ஹஜ் முகவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. சில ஹஜ் முகவர் நிலையங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சில தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. சில முகவர் நிலையங்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான ஹஜ் முகவர் நிலையங்களை ஹஜ் யாத்திரிகர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான முகவர் நிலையங்களின் பட்டியலும் ஒருவார காலத்துக்குள் வெளியிடப்படும்.
இவ்வருடம் ஹஜ் 3 பொதிகளின் கீழ் (Packages) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 இலட்சத்து 75 ஆயிரம், ரூபா 6 ½ இலட்சம் ரூபா, 7 ½ இலட்சம் ரூபா என மூன்று பொதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் முகவர்களைத் தெரிவுசெய்து கொள்ளும்போது முகவர் நிலையத்தினூடாக தாம் எந்தப்பொதியில் செல்வது என்பதை கடிதம் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.
திணைக்களம் அனுமதி வழங்கப்பட்டுள்ள முகவர் நிலையங்கிளின் பட்டியலை வெளியிட்டதும் தான் விரும்பும் முகவர் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
அதுவரை அவர்களிடம் கடவுச்சீட்டினைக் கொடுக்கவேண்டாம்.
ஹஜ் யாத்திரிகர்கள் எந்தக் காரணம் கொண்டும் முகவர் நிலையங்களுக்கு முற்பணம் செலுத்தக்கூடாது.
25 ஆயிரம் ரூபா செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ள ஹஜ் யாத்திரிகர்கள் திணைக்களம் விரைவில் அங்கீகரிக்கவுள்ள வங்கியொன்றில் புதிதாக ஹஜ் வங்கிக் கணக்கொன்றினை ஆரம்பித்து அக்கணக்கிலே ஹஜ் கட்டணத்தை வைப்பிலிட வேண்டும். திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் இக்கணக்கு செயற்படும். முகவர்களுக்கு இந்த வங்கிக் கணக்கின் ஊடாகவே பணம் செலுத்தப்படும். திணைக்களத்துக்கு ஹஜ் யாத்திரிகர்கள் அறிவித்தாலே பணம் முகவர்களுக்கு மாற்றப்படும்.
அத்தோடு இவ்வருடம் 50 கோட்டாவுக்குக் குறைவாக முகவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. 50 கோட்டாவுக்கு மேலதிகமாக கடந்த வருடங்களில் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொண்ட முகவர் நிலையங்களின் விபரங்கள் யாத்திரிகர்களின் நன்மைக்காக விளம்பரம் செய்யப்படும்.
எனவே, ஹஜ் யாத்திரிகர்கள் இன்னும ஓரிரு தினங்கள் பொறுமைகாக்கும்படி வேண்டப்படுகின்றார்கள் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்