பாதுகாப்பு குழு அறிக்கை: முஸ்லிம் சமூகத்தின் மீது சந்தேகங்களை ஏற்படுத்தும்
தெளிவுபடுத்துமாறு முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள்
பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை பற்றிய செய்திகள் நாட்டு மக்கள் மத்தியில் அமைதியற்ற நிலையை உருவாக்கலாம். அத்தோடு முஸ்லிம் மக்கள் மீது ஏனைய இன மக்கள் பீதி மற்றும் சந்தேகங்கம் கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாம்.
எனவே அச் செய்திகளை உறுதிப்படுத்துவதற்கான அத்தாட்சிகள் உங்களிடம் இல்லாவிட்டால் அது தொடர்பில் ஊடகங்களைத் தெளிவுபடுத்தும்படியும் அத்தோடு குழுவின் அறிக்கை மற்றும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட செய்திகள் தவறானவை என்பதை திருத்தம் செய்து நிரூபிக்கும் படியும் வேண்டிக் கொள்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம கவுன்ஸில் தேசிய பாதுகாப்பு பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மலிக் ஜயதிலகவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 19 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு பற்றி பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் வெளிவந்த செய்திகள் பல எமது கவனத்தை ஈர்த்துள்ளன. அந்தச் செய்திகள் கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்பு வெளிநாட்டு அடிப்படைவாத பிரசாரங்களை மேற்கொள்ளும் இரு முஸ்லிம் பிரசாரகர்கள் இலங்கைக்கு வந்து அடிப்படைவாத பிரசாரங்களை மேற்கொண்டதாகத் தெரிவித்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
உங்களது தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு தயாரித்துள்ள அறிக்கையில் அடிப்படைவாத சிந்தனைகளைப் போதிக்கும் முஸ்லிம் பிரசாரகர்களான இந்தியர்கள் சாகீர் நாயக். பி. ஜெயினுல் ஆப்தீன் ஆகிய இருவரும் இலங்கை வந்து பிரசாரங்கள் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எமது நாட்டில் முஸ்லிம் மக்கள் அறியாது முஸ்லிம் சமய பிரசாரகர்கள் இலங்கைக்கு எவ்விதத்திலும் வரமுடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை.
எவ்வாறாயினும் ஏதோ ஒரு முறையில் அவ்வாறான பிரசாரகர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வந்திருந்தால் அவர்கள் இந்நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு விசா வழங்குவதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு மாத்திரமே உள்ளது. தேசிய பாதுகாப்பினை ஆபத்திலிருந்தும் தவிர்க்கும் பொறுப்பு மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறது என்பதே எமது நிலைப்பாடாகும். அந்த பிரசாரகர்கள் இலங்கைக்கு வருகை தந்த கால எல்லை, அவர்கள் பிரசாரங்களை மேற்கொண்ட இடம், அவர்களது பிரசாரங்களில் உள்ளடங்கியிருந்த சாராம்சம் தொடர்பிலான விபரங்களையும் வெளியிட்டால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்குமெனக் கருதுகிறோம்.
ஊடகங்களில் வெளியான குறிப்பிட்ட செய்திகள் மக்கள் மத்தியில் சலசலப்பினை ஏற்படுத்தலாம். அத்தோடு முஸ்லிம் மக்கள் பற்றி ஏனைய இன மக்கள் மத்தியில் பீதி மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தலாம்.
எனவே, இஸ்லாமிய பிரசாரகர்கள் தொடர்பான உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் உங்களிடம் இல்லாதுவிட்டால் அது தொடர்பில ஊடகங்களைத் தெளிவுபடுத்துங்கள். அத்தோடு குறிப்பிட்ட அறிக்கை மற்றும் பத்திரிகைச் செய்திகள் தவறானவை என திருத்தம் செய்யுங்கள் என அன்புடன் வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்