சஜித் தலைமையிலான கூட்டணியில்: பங்காளி கட்சிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று
சின்னம் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார் மத்தும பண்டார
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைசாத்திடப்படவுள்ளது. எனினும், புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் தேர்தல் காலத்திலேயே அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் இன்று காலை 10.00 மணிக்கு தாமரை தடாக அரங்கில் ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் சகல கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியிலும் அங்கம் வகிக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அதற்கமைய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ், சம்பிக ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உருமய , ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மற்றும் சிவில் அமைப்புக்களுடனும் இன்றைய தினம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,
புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் தீர்மானமெடுப்பதற்கு கால அவகாசம் இருக்கிறது. எனவே, அதுகுறித்து கலவரமடையத் தேவையில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு முன்னர் சின்னம் தொடர்பில் அறிவிக்கப்படும்.
பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்கு ஐ.தே.க. செயற்குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. கூட்டணியின் யாப்பை செயற்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. யாப்பில் சிறு சிறு திருத்தங்கள் செய்யப்பட்டன. எவ்வாறிருப்பினும் இப்புதிய கூட்டணியின் ஊடாக பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவோம்.
இந்நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.-Vidivelli