நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக மேற்பார்வை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் ஜயதிலக தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு தனது அறிக்கையை கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்திருந்தது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையும் பரிந்துரைகளும் முஸ்லிம் சமூகத்தின் மீதான கடுமையான விதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளன. முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிகாப் போன்ற ஆடைகள் தடைசெய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளதுடன் இந்த ஆடைகளை அணிந்திருப்போர் அவற்றை அகற்றாவிட்டால் அவர்களை பிடியாணையின்றி கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய சிபாரிசுகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புர்கா, நிகாப் போன்ற ஆடைகளைப் குறிப்பிட்டு தடைசெய்வது ஓரினத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருப்பதனால் அப்பெயர்களைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ஒருவரின் முகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளாத மற்றும் சிரமமான முக மறைப்புக்கள், தலைக் கவசங்களை தடைசெய்ய வேண்டுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு தனது பரிந்துரையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதுமாதிரியான அரேபிய ஆடைகளுக்கு பெரும்பான்மை சமூகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆடைகளுக்கு வெளிநாடுகள் பலவும் தடை விதித்துள்ளதையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம் எனவும் அவ் அறிக்கை தெரிவிக்கிறது.
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து அமுலுக்கு வந்த அவசரகால சட்டத்தின் கீழேயே தடைவிதிக்கப்பட்டது. அவசர கால சட்டம் நீக்கப்பட்டதும் அத்தடையும் நீங்கியது. முஸ்லிம் பெண்களின் முகத்தை மறைப்பது நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ் தடை செய்வதற்கு சட்டம் வகுக்கப்படவேண்டும் என இனவாதிகளினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதை அடுத்து கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ‘முகத்தை மறைத்தலை தடைசெய்தல்’ என்ற தலைப்பில் அப்போதைய நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினால் அமைச்சரவைப் பத்திரமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவையில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் வெளியிட்ட எதிர்ப்பினால் அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் எவரும் உள்வாங்கப்படவில்லை. இந்நிலையில் முஸ்லிம் சமூகம் சார்ந்த இவ்வாறான பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றே கருத வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையிலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக்குழு முஸ்லிம் சமூகத்தின் மீதான பல அழுத்தமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இக் குழுவில் இரு முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகிக்கின்றபோதிலும் அவர்களது சம்மதத்துடன்தான் இந்த சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டனவா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.
இதிலுள்ள பல பரிந்துரைகள் முஸ்லிம் சமூகத்தை ஓர் இறுக்கமான கட்டமைப்புக்குள் உட்படுத்தும் வகையிலேயே முன்மொழியப்பட்டுள்ளன. 16 வயது பூர்த்தியானவர்களே மத்ரஸா கல்வியில் உள்வாங்கப்படவேண்டும். இன, மத, மற்றும் சமுதாய அடையாளங்களை வெளிப்படுத்துகிற பெயர்களுடன் கூடிய பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்படவேண்டும்.
அத்தோடு பள்ளிவாசல்களில் இடம்பெறும் அனைத்து பிரசாரங்களையும் ஒலிப்பதிவு செய்யவேண்டும். முஸ்லிம்களின் இன விகிதாசாரத்திற்கு அமைய பள்ளிவாசல்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் முஸ்லிம்களின் மத விவகாரங்கள் சவாலுக்குட்படுத்தப் பட்டுள்ளதை உணரமுடிகிறது. பள்ளிவாசல்கள் மக்களை நல்வழிப்படுத்துவற்காகவும் மத்ரஸாக்கள் சமயக் கல்வியைப் போதிப்பதற்காகவுமே நிறுவப்படுகின்றன என்பதை அராசங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தான் பதவியேற்றபோது ஆற்றிய கன்னி உரையில் அனைவருக்கும் மத சுதந்திரம், கலாசார சுதந்திரம் வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார். இவ்வாறான நிலையில் அரசினால் நிறுவப்படும் குழுக்கள் கூட இனவாத செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றமையை அனுமதிக்க முடியாது.
இவ்விகாரங்களில் ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு உரிய தீர்வுகளை முன்வைக்கவேண்டும்.-Vidivelli