பிரபலமான இந்திய இஸ்லாமிய பிரசாரகர்களான டாக்டர் சாகிர் நாயிக் மற்றும் பி.ஜெய்னுலாப்தீன் இருவரும் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்பு இலங்கை வந்து பிரசாரங்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை விட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றும் பொய்யானவையாகும். குறிப்பிட்ட இரு பிரசாரகர்களும் இலங்கையில் பிரசாரங்களை மேற்கொள்ளவுமில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லங்காதீப மற்றும் டெய்லி மிரர் பத்திரிகைகளில் குறிப்பிட்ட இரு இஸ்லாமிய பிரசாரகர்களும் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்பு இலங்கைக்கு வந்து அடிப்படைவாத பிரசாரங்களை நிகழ்த்தியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள செய்திகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் ஏப்ரல் 21 ஆம் திகதிய தாக்குதல்களுக்குப் பின்பு எந்த திகதியில் எந்த இடத்தில் அவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படவில்லை. அவர்களுக்கு இலங்கை வர விசா வழங்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்திடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எவ்வித விபரங்களும் செய்தியில் உள்ளடங்கப்பட்டிருக்கவில்லை.
எவ்வித உறுதிப்படுத்தலுமின்றி மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தவறான செய்திகளை வெளியிடுவதனால் இலங்கை முஸ்லிம்கள் மீது மத ரீதியான வெறுப்பினைத் தூண்டிவிடுவதாக அமையும். இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் சட்டத்தை மீறுவதாகும். குறிப்பாக சர்வதேச ICCPR மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளை மீறுவதாகும்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி ஆரம்பத்தில் முகத்திரைக்கு தடை விதிக்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டது. ஏப்ரல் 21 தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் முகத்தை மூடியோ, முகத்திரை அணிந்தோ இருக்கவில்லை. அவர்கள் உயிரைப் பலியெடுக்கும் வெடிகுண்டுகளையே தமது பின்னால் பொதியில் சுமந்திருந்தார்கள்.
முகத்திரைக்கு அல்லது பின்னால் சுமக்கும் பொதிகளுக்கு தடைவிதிப்பதன் மூலம் அல்லது அகற்றுவதன் மூலம் குற்றச் செயல்களைக் குறைத்துவிட முடியாது. மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளின் மூலம் தேசிய பாதுகாப்பினை அடைந்துவிட முடியாது. மக்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து அவர்களை மரியாதை செய்வதன் மூலம், ஐக்கியப்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்தின் மூலமே தேசிய பாதுகாப்பினை அடைய முடியும். அரசாங்கம் முஸ்லிம்கள் இவ்வாறான விடயங்களை முன்வைக்கும்போது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சில தீவிரவாதிகள் முஸ்லிம் பெயரில் மேற்கொள்ளும் கொலைச் செயல்களை முழு முஸ்லிம் சமூகமும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்லாமிய பிரசாரகர் டாக்டர் சாகீர் நாயிக் தற்போது இந்தியாவில் இல்லை. அவர் அங்கிருந்தும் வெளியேறி தற்போது மலேசியாவிலே தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கு வெளிநாட்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் மலேசியாவிலே இருக்கிறார்.
இஸ்லாமிய பிரசாரகர்களான டாக்டர் சாகிர் நாயக் மற்றும் ஜெய்னுலாப்தீன் இருவரும் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்கான எந்த அத்தாட்சிகளும் இல்லை. இலங்கையில் எங்கு பிரசாரங்களை மேற்கொண்டார்கள் என்பதற்கான அத்தாட்சிகளும் இல்லை. இவ்வாறான நிலையில் குறிப்பிட்ட பத்திரிகைகள் தவறான பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளமைக்கு பல சிவில் அமைப்புகளும் கண்டனம் வெளியிட்டுள்ளன.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்