பிரதமர் பதவியிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியிலும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை முன்னெடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால தடை விதித்தது.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வகித்த 28 பேருக்கும் இராஜாங்க அமைச்சர் பதவியை வகித்த 13 பேருக்கும் பிரதி அமைச்சர் பதவி வகித்த 8 பேருக்கும் அந்த பதவிகளில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள கோ வொறன்டோ நீதிப் பேராணை மனு மீதான பூர்வாங்க விசாரணைகளை நடாத்தி, கடந்த வெள்ளியன்றும், நேற்றும் சுமார் 8 மணி நேர வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த பின்னரேயே மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்தது. தாம் குறித்த பதவிகளை வகிப்பதற்கான அதிகாரபூர்வ தன்மையை உறுதி செய்யும் வரை இந்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்தது.
பிரதிவாதிகளாக குறித்த கோ வொறன்டோ நீதிப் பேராணை மனுவில் பெயரிடப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. உள்ளிட்ட 49 பேர் சார்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்தும், மனுதாரர் தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரனின் வாதங்களை ஏற்றுக்கொண்டுமே நீதிபதிகள் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தனர்.
இதன்போது அரசியலமைப்பின் 72 ஆம் உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றில் எந்தவொரு முடிவும் பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளதாக தமது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், பாராளுமன்றில் இருக்கும் 225 உறுப்பினர்களில் 122 பேர் முன் வைத்துள்ள மனுவில் பெரும்பான்மை ஆதரவுடன் நம்பிக்கை இல்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை தெளிவாவதாகவும், அதனால் அரசியலமைப்பின் 48(2) ஆம் உறுப்புறுப்புரைக்கமைய அரசாங்கம் கலைந்துவிட்டதாக கருதுவதை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
இதனைவிட மஹிந்த உள்ளிட்டவர்களுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிப்பதன் ஊடாக நாட்டுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாரிய பாதிப்புக்களை சந்திக்க வேண்டி வரும் என அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகள் முன் வைத்த வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.
பொறுப்புக் கூறத்தக்க தரப்பு தனக்குரிய அதிகாரபூர்வ தன்மையை உறுதி செய்யாது அப்பதவிகளில் செயற்படுவதால் ஏற்படும் பாதிப்புக்களுடன் ஒப்பீடு செய்யும் போது அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியது.