எமது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் நல்லதொரு தலைவரை நாட்டுக்குத் தந்திருக்கிறான்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த 14.02.2020 வெள்ளிக்கிழமை ஆற்றிய குத்பா பிரசங்கத்தின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறோம்.
நாம் இந்த நாட்டுடைய 72 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந் நாட்டு பிரஜைகள் நாம். இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்டு மண்ணில் மரணிக்கக்கூடியவர்கள் நாம். மதீனத்தில் மௌத்தாக வேண்டும் என்று எங்களுடைய உள்ளத்தில் நிய்யத் இருக்கலாம். அல்லாஹ்வுடைய பாதையில் மரணம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம். ஆனால் நாம் இந்த நாட்டை நேசிக்கக் கூடியவர்கள். அதனால்தான் இலங்கையுடைய ஜனாதிபதிக்கு நாம் ஒரு முக்கியமான செய்தியை தெரிவித்தோம்.
இலங்கையில் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீங்கள் (ஜனாதிபதி) ஆற்றிய உரைக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. அந்த உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரையாக அமைந்திருந்ததுடன் இந்நாட்டு மக்களின் உரிமைகளை இன மத பேதமின்றி பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நாட்டு மக்களது சுதந்திரத்தையும் ஜனநாயக பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய தூர நோக்கு கொண்ட ஒரு தலைவரை பெற்றிருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். எவ்வித இன, மத பேதமின்றி அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாக செயல்படுவதாக நீங்கள் உங்கள் உரையில் குறிப்பிட்டதை பாராட்டுகிறோம். மேலும் உங்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தில் முஸ்லிம் சமூகம் தனது அனைத்துவித பங்களிப்பையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது. இலங்கையிலுள்ள அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாத்து நடப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.
உங்களது பணியை நல்ல முறையில் செய்து நாட்டை அபிவிருத்தியடையச் செய்வதற்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் நாம் பிரார்த்திக்கிறோம் என்ற ஒரு முக்கியமான செய்தியை அ.இ.ஜ. உலமா முன்வைக்கிறது.
இந்த 72 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் எம்மீது ஒரு கடமை இருக்கிறது என்ற அடிப்படையில் இந்நாட்டு மக்கள் சார்பாகவும் இந்நாட்டு முஸ்லிம்கள் சார்பாகவும் அவர் ஆற்றிய உரை பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
நாம் இந்த நாட்டில் மிகக் காத்திரமாக வாழ்ந்தவர்கள். நாம் 72 வருடம் சுதந்திரத்திற்கு பின் மட்டும் வாழ்ந்தவர்கள் அல்ல. நாம் 1300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர்கள். அரேபியர்கள் இந்த நாட்டிற்கு புதிதல்ல. அரபு மொழி 2500 வருடங்களுக்கு மேல் இந்த நாட்டில் புழக்கத்தில் உள்ளது. நாம் இதை படிக்கவில்லை. நாம் இதை அறிமுகப்படுத்தவில்லை. நாம் சரியாக எடுத்து செயற்படுத்தவில்லை என்பது தான் இதிலிருக்கின்ற குறைபாடு. நாம் இதை கற்பிக்க வேண்டும். மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அரபிகள் இந்த நாட்டிற்கு வந்து, 2000 வருடங்களுக்கு முதல் அனுராதபுர பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் ஓர் உண்மை. அத்தோடு 1300 வருடங்களாக முஸ்லிம்கள் இந்த நாட்டுடன் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது நபியவர்களுடைய காலம் தொட்டு அதற்கு பிறகு ஹஸ்ரத் உமருடைய காலம் தொட்டு பல வரலாற்று பதிவுகள் இங்கு பதியப்பட்டிருக்கின்றன.
அதனால் நாம் இந்த நாட்டை நேசிக்கக் கூடியவர்கள். இதை வெளிப்படுத்துவது எங்களுடைய கடமை. நாம் இந்த நாட்டுக்கு ஒரு நாளும் எந்த வகையிலும் அநியாயமோ துரோகமோ செய்தவர்கள் அல்ல என்பதில் முஸ்லிம்கள் என்றுமே உறுதியாக இருக்கிறோம்.
21 ஏப்ரல் 2019 எமக்கு தலைகுனிவைத் தந்த நாளாக அமைந்திருந்தது. அதை செய்தது நாங்கள் அல்ல. அதை சில வழிகேடர்கள், இஸ்லாம் என்ற பெயரில் அதற்கு விலை போயிருக்கிறார்கள் என்பதை இதற்கு முன்பிருந்த ஜனாதிபதியும் பலரும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதனால், இந்த காலகட்டத்தில் குர்ஆனையும் ஹதீஸையும் இஸ்லாமிய அடிப்படைகளையும் மிகத் தவறாக வழிநடத்தும் ஒரு கும்பல் உலகில் தோன்றியிருக்கிறது. இதை முறியடிப்பது எங்களுடைய பாரிய பொறுப்பாக இருக்கிறது.
நாம் எல்லோரும் ஒன்றுபட்டு முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்த நாட்டில் வாழக்கூடிய எல்லா மக்களும் ஒன்றுபட்டு இந்த ஜனாதிபதிக்காக பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்விடத்தில் மன்றாடினோம். குனூத்துகள் ஓதினோம். யா அல்லாஹ் நல்லொதொரு தலைவரைத் தா என்று கேட்டோம். அல்லாஹ் தந்திருக்கிறான். அதற்கு நன்றியுடையவர்களாக துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். அடுத்த மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதி இந்த பாராளுமன்றத்தைக் கலைத்து விடக்கூடும்.
பாராளுமன்றத்தைக் கலைத்த பின்னர் ஏப்ரல் மாதம் 25 இல் தேர்தல் நடக்கலாம். அது எங்களுடைய நாட்டில் முதல் நோன்பாக அல்லது இரண்டாவது நோன்பாக இருக்கலாம். அந்த நேரத்தில் தேர்தல் வருவதற்குரிய வாய்ப்புக்கள் இருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் இப்போதிருந்தே அல்லாஹ்விடத்தில் மன்றாடி துஆச் செய்ய வேண்டும். வெறுமனே, துஆவுடன் மட்டும் நிற்காது மேலும் சில நகர்வுகளையும் செய்வது மிக அவசியமாகும். அதில் சிலவற்றை இங்கு உங்களுக்கு என்னுடைய அபிப்பிராயமாக சொல்ல விரும்புகிறேன்.
இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வரக்கூடிய தேர்தலில் வாக்களிக்க இப்போதே தயாராக வேண்டும். இலங்கையில் 1.5 மில்லியன் முஸ்லிம்களுடைய வாக்குகள் இருக்கின்றன. அதில் 12 இலட்சம் வாக்குகளை நாங்கள் அளிப்போம்.
2004 டிசம்பர் 26 இல் சுனாமியின் போது 37000 மனிதர்கள் உயிரிழந்த போது 30 ஆம் திகதி இதே மிம்பரில் நான் பேசியதை மறந்திருக்கமாட்டீர்கள். 2006 இல் மூதூரில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்தும் 1989 இல் மன்னாரிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் மக்கள் விரட்டப்பட்ட நேரத்திலும் இதே மிம்பரில் நாம் பேசியிருக்கிறோம். அதேபோன்றுதான் இப்போதும் சொல்கிறேன். இந்த விடயத்தை நான் ஒரு அமானிதமாக முன்வைக்கிறேன். நான் இன்று மௌத்தாகலாம்.. ஆனால் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு சொல்ல வேண்டியதை சொன்னீரா என்று அல்லாஹ் என்னிடத்தில் கேட்டால் ஆம் நான் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்வதற்காக நான் இதனை ஓர் அமானிதமாக எடுக்கிறேன்.
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமை. தெரிவு. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நாம் ஒரு வேளை தவறாக வழிநடத்தப்படுகிறோமா என்பதையும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்த நாட்டு மக்கள் பாகிஸ்தானை விடவும் படிப்பறிவில் கூடியவர்கள். இந்த நாட்டினுடைய கல்விப் புள்ளிவிபரங்களை எடுத்து நோக்கினால் அல்ஹம்துலில்லாஹ், முஸ்லிம்களும் மற்றவர்களும் அல்லாஹ்வுடைய அருளினால் நல்ல அறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள். உலகக் கல்வியையும் அல்லாஹ் தந்திருக்கிறான் . மார்க்கக் கல்வியையும் தந்திருக்கிறான். உலமாக்களையும் தந்திருக்கிறான். தொழிலாளிகளையும் தந்திருக்கிறான். புத்திஜீவிகளையும் தந்திருக்கிறான். நல் மக்களையும் தந்திருக்கிறான்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரசியல் தொடர்பான தங்களது பாரம்பரிய முறையை மாற்றியமைத்தல் வேண்டும். பாரம்பரியமாக இப்படித்தான் செய்து வந்தோம் என்பது அல்ல. காலத்தின் தேவை என்ன என்பதை ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு ஊரிலுள்ள உலமாக்களும் ஒவ்வொரு ஊரிலுள்ள முக்கியஸ்தர்களும் ஒவ்வொரு ஊரிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் சிந்திக்க வேண்டும். இப்பொழுது பாராளுமன்றிலுள்ள 20 முஸ்லிம் உறுப்பினர்களிடமும் நான் மிகப்பணிவாக முஸ்லிம்கள் சார்பாக உலமாக்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன். ஒற்றுமையாகுங்கள். விட்டுக் கொடுங்கள். தூர நோக்குடன் நடந்து கொள்ளுங்கள். கால சூழல் என்ன? உலகத்துடைய சூழல் என்ன? என்பதை மிக அவதானமாக பாருங்கள். விட்டுக் கொடுங்கள். எனக்கு இப்பதவி வேண்டாம் என்று சொல்லுங்கள். அல்லாஹ் உங்களை உயர்த்துவான். இந்த இடத்திற்கு வேறொருவர் தான் வர வேண்டும் என்றால் அவரை நீங்கள் நியமியுங்கள்.
முஸ்லிம்கள் சிதறி வாழும் பிரதேசங்களில் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்களுடன் இணைந்து தேசிய கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தாக வேண்டும். முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழக் கூடிய பகுதிகளிலும் முஸ்லிம்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
80% பௌத்தர்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டில் நாங்க 10% முஸ்லிம்கள் வாழ்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். நல்ல சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம்.
ஆனால் நாங்கள் சற்றுத் தூரமாக இருக்கிறோம். அந்த தூரமான இடைவெளியை நிரப்புவோம். அதற்கு அரசியல் ரீதியாக என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும். சில வேளைகளில் களுத்துறைக்கு உள்ளதல்ல கொழுப்புக்கு, கொழும்புக்கு உள்ளதல்ல கண்டிக்கு, கண்டிக்கு உள்ளதல்ல மட்டக்களப்புக்கு . மட்டக்களப்புக்கு உள்ளதல்ல திருகோணமலைக்கு .. திருகோணமலைக்கு உள்ளதல்ல குருநாகலுக்கு… ஒவ்வொரு மாவட்டத்திலும் வித்தியாசமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டி இருக்கும் என்பதையும் எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட பிரதேச (உலமா சபை) கிளைகள் தத்தமது பகுதிகளில் தேவையான பொருத்தமான பயன்மிக்க வழிகாட்டல்களை அப்பகுதி வாழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த 2010 இலிருந்து நாம் சில சோதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதை முறியடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டத்தில் பலதை விட்டுக் கொடுத்திருக்கிறோம். நாங்கள் ஒரு பெரும்பான்மை சமூகத்தோடு வாழும்போது சில சில விடயங்களை மார்க்கம் அனுமதித்த சில விடயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். அந்த விட்டுக் கொடுப்பு எதற்காக? பெரியதொரு விடயத்தை அடைந்து கொள்வதற்காக.
அடுத்ததாக, உலகத்துடைய பூகோள அரசியல் பற்றி கவனம் செலுத்த வேண்டும். இஸ்லாமோபோபியா (இஸ்லாம் பற்றிய பயம்) தான் அதனுடைய சந்தைப்படுத்தல் உற்பத்தி. அதில் நானும் நீங்களும் தான் இரையாகிறோம். இந்த நாட்டு பெரும்பான்மை மக்கள் நல்ல மக்கள். எல்லா பகுதிகளிலும் ஒரு சிலர் சில சில குறைபாடுகள் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள், அதனை சகித்துக் கொண்டு துஆவோடு பணிவோடு அஹ்லாக்குடன் நாம் வாழ வேண்டும்.
உலமாக்கள், வியாபாரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டு அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து நாட்டுடைய அரசியல் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நேரம் வந்து விட்டது என்பதை நான் இங்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
இந்த அரசியலில் ஈடுபட்டிருக்கக் கூடியவர்களுக்கு அல்லாஹ் கூலியை கொடுக்க வேண்டும். அவர்களும் தாராளத் தன்மைகளோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த முஸ்லிம்களை ஒரு நாளும் தவறான வழியில் யாரும் பயன்படுத்தவிடாமல் தூர நோக்கோடு நடத்த வேண்டும்.
எப்படி ஜம்இய்யதுல் உலமா 2009 இல் இந்நாட்டுடைய அமைப்புக்களை ஒன்றுபடுத்தி ஒற்றுமைப் பிரகடனத்திற்குக் கொண்டு வந்து இந்த நாட்டுடைய எல்லா அமைப்புக்களையும் அவை தரீக்காக்களாக இருக்கலாம், ஜமாஅத்தாக இருக்கலாம் ஒன்றுபட்டிருக்க வழி செய்திருக்கிறோம்.
அரசியல் தலைவர்களே! முதியவர்களே ! அனுபவசாலிகளே! உங்களை அழைக்கிறேன். அல்லாஹ்வுக்காக வாருங்கள். மாறுங்கள். தூர நோக்கோடு செயல்படுங்கள். காலத்தின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் வழிகாட்ட வந்த அடிப்படைகளை ஏற்று நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நிச்சயமாக அமோக வெற்றியை தொடர வைப்பான்.
இன்னுமொரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 9.9.2019 இல் நடந்த ஒரு சோகத்தை சொல்லி முடித்துக் கொள்ள விரும்புகிறேன். 9.9.2019 இல் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வந்திருக்கிறது. அதில் 70 இலங்கை முஸ்லிம்களை சர்வதேச தீவிரவாதிகளாக பதிவு செய்திருக்கிறார்கள். எங்களுக்கு 21.04.2019 எப்படி மிக சோகமான நாளோ அதேபோல இந்த 70 பேரை தீவிரவாதிகளாக வர்த்தமானியில் அறிவித்தமையும் பாரதூரமானதாகும்.
இந்த நிலைமை நீடிக்கக் கூடாது. இதற்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது. தனது மகன் இவ்வாறான கொள்கைகளில் இருக்கிறார் என்றால் அவரை திருத்துவது வழிகாட்டுவது விளங்கவைப்பது தந்தையின் கடமையாகும்.
அதற்கு முடியாவிட்டால் எனது மகன் என்னைச் சார்ந்தவனல்ல என்று நூஹ் (அலை) சொன்னதைப் போன்று நாமும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அப்போதுதான் இந்த நாட்டுடைய கடமைப்பாட்டை சரிவர செய்தவர்களாக நாம் மாற முடியும்.
ஜனநாயக நாட்டில் பல உரிமைகளுடன் வாழ்ந்திருக்கிறோம். இது தொடர வேண்டும். அல்லாஹுத்தஆலா இதை நலவாக்கி பூர்த்தியாக்கி வைத்து இந்தநாட்டுடைய விடயத்தில் அல்லாஹ் கிருபை செய்வானாக! இந்த நாட்டில் அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் மற்றும் இந்த நாட்டுடைய பாராளுமன்றில் இருக்கக் கூடிய அனைவருக்கும் மற்றும் மரணித்தவர்கள் உயிர் வாழக் கூடியவர்களுக்கும் துஆ செய்கிறோம். அல்லாஹ் ஒற்றுமையுடன் இந்நாட்டு பெரும்பான்மை சமூகத் தின் நிலைமைகளை புரிந்து செயற் படக்கூடியவர்களாக எங்களை ஆக்குவானாக.-Vidivelli