இற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய நாம் உலகில் ஏனைய நாடுகளின் வீதி அபிவிருத்தி தொடர்பாக ஆச்சரியப்பட்டோம். இவற்றில் மேம்பாலங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன நம்மவர்க்குப் பார்த்து இரசிப்பதற்காகவே இருந்தன. நாம் தூரப் பிரதேசங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும்போது நமக்கும் இவ்வாறான சொகுசான பாதைகளில் இலகுவில் சென்று வரக்கூடியதாக இருந்தால் எவ்வளவு சுலபமாகவும் வசதியாகவும் இருந்திருக்கும் என்று கருதிய தடவைகள் ஏராளம்.
இந்தக் கனவை நனவாக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் போக்குவரத்து துறையில் புதியதோர் அத்தியாயத்தை தோற்றுவிக்கும் வகையில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் இத்திட்டத்திற்கு தமது காணிகளை வழங்குவதற்கு ஆரம்பத்தில் தயக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். இதனால் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பத்திலிருந்தே ஸ்தம்பிதமடைந்தன.
இருந்தாலும், அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தில் உறுதியாகவிருந்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம், இலங்கையின் வரலாற்றிலும் போக்குவரத்துத் துறையின் வரலாற்றிலும் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வகையில் 2006 ஆம் ஆண்டு கொட்டாவையிலிருந்து மாத்தறை வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தது.
உலகில் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் வரலாற்றில் 1922 வரையிலான காலப்பகுதி வரை நீண்டு செல்வதோடு, உலகின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இத்தாலியில் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையில் 2006 ஆம் ஆண்டு வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை தோற்றுவிக்கும் வகையில் கொட்டாவையிலிருந்து மாத்தறை வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 126 கிலோ மீற்றர்களை கொண்ட இப்பாதையின் நிர்மாணப் பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. 2011 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதற் பகுதி கொட்டாவையிலிருந்து காலி வரையிலான பகுதி மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டது. காலியிலிருந்து மாத்தறை வரையிலான இரண்டாவது கட்டம் 2014 மார்ச் மாதம் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கேற்ப இப்பாதை தொடர்பாக மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்ததோடு, நாளாந்தம் இப்பாதையைப் பயன்படுத்துவோர் தொகையும் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் தென் பிராந்தியத்திற்கு மாத்திரம் உரித்தான இந்த அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை நாடு பூராவும் விஸ்தரிக்குமாறு அரசாங்கத்திடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனடிப்படையில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வரை மற்றும் கொழும்பிலிருந்து கண்டி வரையிலான அதிவேக நெடுஞ்சாலை திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
கொழும்பிலிருந்து மாத்தறை வரையிலான கரையோர பிரதான பாதையினூடாக பிரயாணத்தை மேற்கொண்ட ஒருவருக்கு ஐந்து மணித்தியாலங்கள் அல்லது அதற்கு கூடுதல் நேரம் சென்றதோடு, அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒருவருக்கு அதை ஒன்றரை மணி நேரத்தில் கடக்கக் கூடியதாக உள்ளது. இதனால் அதிகமானோர் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதற்கு முன்வந்தனர். இதனால் இவர்களின் நேரம் சேமிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு வருமானமும் கிடைத்த வண்ணமிருந்தது.
றுஹுணு பிரதேச மக்கள் மாத்தறையிலிருந்து வெளியேறி கதிர்காமம் வரை பழைய பாதைகளையே பயன்படுத்தி வந்தனர். இதனால் இவர்கள் இந்த தூரத்தைப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே மேற்கொண்டு வந்தனர்.
இதனால் இந்த சிரமங்களை போக்கும் வண்ணம் மாத்தறை வரை நீடிக்கப்பட்ட இப்பாதை ஹம்பாந்தோட்டை வரை நீடிக்காதா என்ற ஏக்கத்திலிருந்து வந்தனர்.
இவர்களின் தேவையை அறிந்த அரசாங்கம் நாட்டு மக்களின் தேவைக்கு முன்னுரிமை வழங்கி ருஹுணு மாகம் பிரதேச மக்களின் மத்தளை வரையில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனவை நனவாகியுள்ளது. மாத்தறை – மத்தளை அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் 2015 ஜுலை மாதம் 04 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 96 கிலோ மீற்றர் நீளத்தை கொண்ட இந்தப் பாதையின் அகலம் 24.4 மீற்றர்களாகும். நான்கு லேன்களை கொண்டு இப் பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொட்டாவையிலிருந்து மாத்தறை வரையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி சூழல் பேணும் திட்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்பும் இப்பாதை நிர்மாணத்தின் போதும் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதோடு இவை அனைத்திற்கும் தீர்வைப் பெற்றுக் கொடுத்து இப்பாதை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. விசேடமாக இப் பாதை நிர்மாணத்தின் போது சுற்றாடல் பேணல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இத்தோடு இதனூடாக நில்வளா கங்கை பெருக்கெடுப்பதினால் ஏற்படும் வெள்ள நிலைகளிலிருந்து தாழ்வான பிரதேசங்களை பாதுகாக்கும் வகையில் இப்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாதையின் இருமருங்கிலுமுள்ள காடுகள், வயல் நிலங்கள், நீர் ஊற்றுக்கள் போன்றவற்றிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் இவற்றை பாதுகாத்து இப்பாதையில் பயணிக்கும் மக்களுக்கு இயற்கையை இரசிக்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதும் விசேட அம்சமாகும்
மாத்தறையிலிருந்து மத்தளை வரையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கென 252.5 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டதோடு இதனை சீன நாட்டு எக்ஸிம் வங்கி இரண்டு சதவீத சலுகை வட்டி அடிப்படையில் கடனாக வழங்கியது. இது நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரை 30 கிலோ மீற்றர்களும், பெலியத்தையிலிருந்து வெடிய வரையிலான 26 கிலோ மீற்றர்கள் இரண்டாவது கட்டமாகவும், வெடியவிலிருந்து அந்தரவெவ வரையிலான 15 கிலோ மீற்றர்கள் மூன்றாவது கட்டமாகவும் அந்தரவெவவிலிருந்து ஹம்பாந்தோட்டையினூடாக மத்தளை வரையில் நான்காவது கட்டமாகவும் 25 கிலோ மீற்றர்கள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கிடையில் பரிமாற்ற நிலையமாக திகழும் அந்தரவெவ பரிமாற்ற நிலையம் இலங்கையில் எமக்குப் புதியதோர் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. சீன தேசிய இரோ டெக்னொலொஜி சர்வதேச பொருளியல் கூட்டுத்தாபனம், சீன அரச நிர்மாணக் கம்பனி மற்றும் சீன துறைமுக கம்பனி ஆகிய கம்பனிகள் நிர்மாணத்தை மேற் கொண்டதோடு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு என்பனவற்றின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நில்வளா கங்கைக்கு மேலால் பயணிப்பதற்கு அதன் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு 10 கிலோ மீற்றர்களை கொண்ட தூரம் பாலங்களினூடாக மேலால் செல்லக் கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்றே வளவை கங்கைக்கு குறுக்காக பெதிகம்தொட பிரதேசத்தில் 600 மீற்றர் நீளம் கொண்ட ஒரு பாலமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிறு பாதைகளுக்கு செல்வதற்காக அதிவேக நெடுஞ்சாலைக்கு மேலால் ஏழு பாலங்களும் கீழால் முப்பது பாலங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்தோடு விவசாய நிலங்களுக்கும், வயல்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
ஹம்பாந்தோட்டையில் யானைகள் அதிகரித்து காணப்படுவதால் யானைகளுக்கும் பயணிகளுக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவிதத்தில் பஹல அந்தரவெவ பிரதேசத்தில் இரண்டு இடங்களில் யானைகள் மாறுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு இப்பிரதேசங்களினூடாக மேம் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு பயணிகளுக்கு புதியதோர் பயண அனுபவம் ஏற்படும் விதத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் யானைகளுக்கு எவ்வித தடைகளுமின்றி பழைய விதத்தில் பயணத்தை மேற் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதனூடாக மிருகங்களினது செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படுவதில்லை.
யானைகள் அதிவேக நெடுஞ்சாலைக்கு நுழைவதைத் தடுப்பதற்காக அதிசக்திவாய்ந்த மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டு பாதையின் இரு பகுதிகளிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை கொடகமவிலிருந்து ஹம்பாந்தோட்டையினூடாக மத்தளை வரை எட்டுப் பரிமாற்று நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
கொடகம, அபரெக்க, பெலியத்தை, கசாகலை, அங்குனுகொலபெலஸ்ஸ, வெடிய, சூரியவெவ மற்றும் அந்தரவெவ ஆகியன இவையாகும். இத்தோடு சர்வதேச தரத்திலான சேவை நிலையமும் பெலியத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சாரதிகளுக்காக ஓய்வெடுக்கும் இரண்டு ஓய்வு நிலையங்களும் இப் பாதையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பாதை நிர்மாணத்தினூடாக கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு மூன்றரை மணித்தியாலங்களில் செல்ல முடியும் இத்தோடு கொட்டாவையிலிருந்து ஹம்பாந்தோட்டை – மத்தளை வரையிலான 222 கிலோ மீற்றர்களையும் இரண்டரை மணித்தியாலங்களில் செல்லக் கூடியதாக உள்ளது. மத்தளை சர்வதேச விமான நிலைய பாதையினூடாக லுனுகம்வெஹெரைக்கு வருகை தந்து அங்கிருந்து லுனுகம்வெஹெரை நீர்த்தேக்கத்திற்கு கீழால் நான்கு லேன்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாதையினூடாக கதிர்காமம் கம்உதாவ பிரதேசத்திற்கு ஒரு மணித்தியாலயத்திற்கும் குறைந்த நேரத்தில் செல்லக் கூடியதாக உள்ளது. இதனூடாக கொழும்பிலிருந்து சொந்த வாகனத்தில் கதிர்காமத்தை வழிபட வருவோருக்கு மூன்றரை மணித்தியாலங்களில் கதிர்காமத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டு மாலையில் வீடு திரும்புவதற்கான வசதி தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தோடு யால தேசிய சரணாலயம், பூந்தலை பறவைகள் சரணாலயம், உடவளவை யானைகள் சரணாலயம், ரன்மிஹிதென்ன லெரிசினிமா கிராமம் ஆகியவற்றிற்கும் இலகுவில் சென்று வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றோடு மத்தளை சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை ராஜபக் ஷ சர்வதேச துறைமுகம், உலர் வலய தாவரப் பூங்கா, ரிதியகம மிருகங்கள் சபாரி, சூரியவெவ சர்வதேச விளையாட்டு மைதானம் ஆகியவற்றிற்கும் இலகுவில் சுற்றுலாவை மேற் கொள்வதற்கான சந்தர்ப்பமேற்பட்டுள்ளதோடு, தென் பிராந்திய சுற்றுலாத்துறையின் புதியதோர் திருப்பு முனையாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
இவற்றோடு பிரதேச விவசாயிகளுக்கும் தமது விவசாய உற்பத்திகளை தலைநகருக்கும் நாட்டின் ஏனைய பிரதேச சந்தைகளுக்கும் எடுத்துச்சென்று புதிய சந்தை வாய்ப்புக்களை பெறவும் வாய்ப்பாக அமைந்து காணப்படுவதோடு அரச அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இரண்டரை மணி நேரத்திற்குள் தலைநகருக்கு சென்று தனது அலுவல்களை கவனித்து திரும்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அம்பாறை, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களும் இதனூடாகப் பயன் பெறவுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்பாதையின் நிர்மாணப் பணிகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தமையால் மக்கள் அதிருப்தியில் இருந்ததோடு புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மிகுதியாகவிருந்த நிர்மாணப் பணிகள் துரித வேகத்தில் நிறைவு செய்யப்பட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான பகுதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரினால் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டதினூடாக, அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தில் மற்றுமொரு புதிய அத்தியாயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli
- எம்.இஸட்.எம். இர்பான் ஸகரியா