ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் நேற்றுக் காலை ஜெனிவாவில் ஆரம்பமாகியது. நேற்று ஆரம்பமாகிய இக்கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலின்படி இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் 2019 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததையடுத்து இக்கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அறிவிப்பை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மனித உரிமைகள் பேரவையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையில் கடந்த 17 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின்போது இந்த கூட்டத்தொடரில் 2015 அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 2019 மார்ச் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 40/1 யோசனைகளிலிருந்து இலங்கை விலகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இத்தீர்மானம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருந்த பிரேரணை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பிரேரணைக்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமையே அப்போதைய சூழலில் திரும்புமுனையாக அமைந்தது. அதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட அனைத்துப் பிரேரணைகளையும் பதவியிலிருந்த அரசாங்கம் நிராகரித்திருந்தது. இந்தப் பின்னணியிலேயே 30/1 என்ற பிரேரணை முக்கியத்துவம் பெறுகிறது.
என்றாலும் 2017 மார்ச் மாதம் வரையும் 30/1 என்ற பிரேரணை முழுமையாக அமுல் நடத்தப்படவில்லை. அதனால் 34/1 என்ற தலைப்பில் திருத்தப் பிரேரணை மீண்டும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. இப்பிரேரணை 2019 மார்ச் மாதத்துக்குள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இப்பிரேரணை அமுல்படுத்தப்படவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் மட்டுமே நிறுவப்பட்டது. 34/1 என்ற தலைப்பில் மீள் புதுப்பிக்கப்பட்ட ஜெனிவா பிரேரணை 2019 ஆம் ஆண்டு வரையில் அமுல்படுத்தப்படாமையினால் மீண்டும் 40/1 என்ற தலைப்பில் 2 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. இச் சூழலிலே இலங்கை அரசு பிரேரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பிரேணை மூலம் நீதி வழங்கப்படும் என சர்வதேச சமூகம் எதிர்பார்த்தது. ஐக்கிய நாடுகள் சபையில் நம்பிக்கை வைத்தது. ஆனால் நிலைமை மாற்றம் கண்டுவிட்டது. எந்தவொரு பரிந்துரைகளும் முழுமையாக அமுல்படுத்தப்படாத சூழலில் பாதித்த மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கி பிரேரணையிலிருந்தும் விலகுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
கடந்த புதன்கிழமை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தார். ‘அமைதியான சமூகத்தை உருவாக்கவும் அனைத்து மக்களுக்கும் நிரந்தர முன்னேற்றத்தை வழங்கவும் 30/1 என்ற ஐ.நா. பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்’ என அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
‘மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கண்காணிப்புகள், சித்திரவதைகள், பழி வாங்கல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கி அதற்குப் பதிலாக சர்வதேச தரத்துக்கு அமைவான சட்டத்தை கொண்டுவர முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, அரசாங்கம் இந்தப் பிரேரணையிலிருந்தும் விலக முடியாது. உலகளாவிய நியமனங்களில் இலங்கைக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. அவற்றிலிருந்தும் இலங்கை விலக வேண்டும். அவ்வாறு விலகினால் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்கும் இலங்கை சர்வதேச சட்டங்களுக்கு இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் இம்மக்களுக்கான நீதியை நிலை நிறுத்த வேண்டும். அனைத்து மக்களும் சமமாக கருதப்படுவார்கள் என்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் உறுதி வெறும் வார்த்தைகளாக மாறி விடக்கூடாது.
இது விடயத்தில் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகம் என்பன பொறுப்புடன் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.-Vidivelli