சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை விவகாரம் சாய்ந்தமருது மக்கள் மத்தியில் மாத்திரமல்ல முழு நாட்டிலும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் சாய்ந்தமருது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நகர சபையை ஐந்து நாட்களின் பின்பு கடந்த 19 ஆம் திகதி பறித்துக் கொண்டது.
சாய்ந்தமருதுக்கான நகர சபை வர்த்தமானி அறிவித்தலை உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டிருந்தார். வர்த்தமானி அறிவித்தலில் சாய்ந்தமருது நகர சபையின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 1 – 17 வரையான கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய நிலப்பிரதேசத்தை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. கல்முனை மாநகர சபையை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி கலைத்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை வழங்கபட்டமை தொடர்பில் கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானி வெளியானதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் பூரித்துப் போனார்கள். கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னால் ஒன்றுகூடி பட்டாசு கொளுத்தினார்கள். பாற்சோறு வழங்கினார்கள். இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்கள். தங்களது பல தசாப்த கால போராட்டங்களுக்கு விடிவு கிட்டி விட்டதாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.
ஆனால் ஐந்து தினங்களின் பின்பு அதிர்ச்சித்தகவல் தங்களை நிலைகுலைய வைக்கும் என அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. 19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சாய்ந்தமருது நகரசபை தொடர்பில் இடம்பெற்ற வாதபிரதிவாதங்களின் பின்பே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி கிடைக்காத காரணத்தினால் சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்ய அமைச்சரவை தீர்மானித்தது. சாய்ந்தமருது பிரதேசத்தை விசேட நகர சபையாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அப்போதைய அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. அதற்கு அமைவாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்தனவின் நியாயப்படுத்தலை சாய்ந்தமருது மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இனவாத அரசியல்வாதிகள் சாய்ந்தமருது மக்கள் மீது பூசிய இனவாத சாயத்தினையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதுக்கு தனியாக நகரசபை வழங்கப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, ஆஷுமார சிங்க, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் இதனை உறுதி செய்கின்றன.
ஒரு பிரதேசத்துக்கு மாத்திரம் உள்ளூராட்சி சபையை இவ்வாறு வழங்காமல் நாட்டில் இவ்வாறாக அவசியம் ஏற்பட்டுள்ள ஏனைய பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மூலம் ஒரே தடவையில் அதற்கான அங்கீகாரத்தையும் அறிவிப்பையும் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்தல குணவர்தன சாய்ந்தமருது மக்களை சமாதானப்படுத்த முயற்சிப்பது வருந்தத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையில் சாய்ந்தமருது மக்களை இன்று துயரத்தில் ஆழ்த்தியுள்ள வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு பின்பு அதனை சில தினங்களில் இரத்துச் செய்த அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்.
வர்த்தமானி அறிவித்தலொன்றினை வெளியிடுவதென்பது மிகவும் பொறுப்பு மிக்க செயலாகும். அமைச்சரவைப் பேச்சாளரின் கருத்துப்படி அமைச்சரவையின் அங்கீகாரமில்லாது அவர் அந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
சாய்ந்தமருதுவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களது பயிற்சிகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இக்காரணிகளினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளை பாதுகாப்பு பிரிவினருக்கு இனங்காட்டியவர்கள் சாய்ந்தமருது மக்களே என்பதை அவர் அறிந்து கொள்ளாமை வேடிக்கையாக உள்ளது.
சாய்ந்தமருது மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படவேண்டும். இனவாதம் இவ்விவகாரத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.-Vidivelli