- ஏ.ஆர்.ஏ. பரீல்
மிகக்குறுகிய காலத்துக்குள் நாம் பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும். பெரும்பான்மைப் பலம் கொண்ட தரப்பினரே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும். பெரும்பான்மை இல்லாத தரப்பினரால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியாது. முதலில் நாம் பொதுத்தேர்தலுக்கான காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
நாட்டில் உருவாகியுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் முதலில் தற்போது முரண்பட்டுக்கொண்டிருக்கும் இருதரப்பினரும் இணக்கப்பாட்டுடன் காபந்து அரசாங்கமொன்றினை அமைத்துக் கொள்வதே சிறந்ததாகும். இவ்வாறு இருதரப்பும் இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலம் நாட்டினைப் பாதிக்கும் விடயங்களுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டை ஆட்சி செய்யவேண்டியவர்கள் யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அதனை அரசியல்வாதிகளினால் தீர்மானிக்க முடியாது. எதிர்வரும் 3 மாதகாலத்துக்குள் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே சிறந்ததாகும்.
நான் தற்போது சுயாதீனமாகவே செயற்படுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை நான் விரும்பவில்லை. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நான் சுயாதீனமாக செயற்படுவற்குத் தீர்மானித்தேன். முழுநாடும் அழிவுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நான் எதிர்க்கிறேன். நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாதளவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்தன. இதற்கு உதாரணமாக சிங்கப்பூர் உடன்படிக்கையைக் குறிப்பிடலாம்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்குப் பிராந்தியத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார்கள். திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டமொன்றினை முன்னெடுத்தார்கள். இத்திட்டத்தில் வெளியிடப்படாத பல இரகசிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் நகர்ப்புறங்களில் பாரிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. திட்டங்களை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இவற்றுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்து சேரவில்லை. இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். மக்களுக்கு உணவுதேவை. அவர்களது வீட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நாட்டுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli