இன்று சீனாவை பாரிய அழிவுக்குள்ளாக்கி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொவிட்–19 எனும் கொரோனா வைரஸ் பற்றியே எல்லோர் மத்தியிலும் பேசுபொருளாகவுள்ளது. இந்நோய்ப் பீதியே எல்லோர் மனங்களிலும் உறைந்துள்ளது. ஆனால் இந்நோயினால் இதுவரை இலங்கைக்கு எத்தகைய பாதிப்புக்களும் எற்படவில்லை என்று எமது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் ஓரளவு ஆறுதலடைய முடிகிறது. ஆனால் கொரோனா பேச்சு அடிபட ஆரம்பித்தவுடனே இங்கிருந்த டெங்குப் பீதி எங்கோ ஓடி மறைந்துவிட்டதென்றே கூறலாம்.
இந்நாட்டை அடிக்கடி அச்சுறுத்தி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் ஆட்கொல்லிதான் டெங்கு. எனவே இந்நோய் தொற்று குறித்து நாம் அசட்டையாக இருக்கக்கூடாது. கடந்த வருடமும் நாடு டெங்குவால் பெரிதும் பாதிப்புக்களை எதிர்கொண்டது.
அரச வைத்தியதிகாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் 99,120 டெங்கு நோயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர்.
இவர்களுள் 128 மரணங்கள் சம்பவித்துள்ளன. இதிலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மேல் மாகாணத்தின் மாவட்டங்களிலேயே கூடுதலான டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அந்த வகையில் மேல்மாகாணம் முதலிடம் பெறுகிறது என்று அந்த அறிக்கை மூலம் அறியமுடிகிறது.
1960 ஆம் ஆண்டே டெங்கு இந்நாட்டில் பரவலாக தலைகாட்டியதாக கணிக்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை வருடந்தோறும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கூடியும் குறைந்தும் வந்துள்ளன. ஆனாலும் முற்றிலும் இழிவு நிலையடைந்ததாக இல்லை என்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
இலங்கையில் டெங்கு மிகவும் கோர விளைவை ஏற்படுத்திய வருடமாக 2017 ஆம் ஆண்டே வரலாறு படைத்துள்ளது. அவ்வாண்டில் 1,86,101 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களுள் 500 க்கும் மேற்பட்டோர் இறக்க நேரிட்டதாகவும் மேற்படி வைத்திய சங்க அறிக்கை கூறுகிறது.
‘இந்நாட்டிலிருந்து டெங்குவை ஒழித்துக் கட்டுவோம்’ என்று பகீரதப் பிரயத்தனத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எமது சுகாதார வைத்தியத்துறைக்கு சவால்விடும் வகையில் டெங்கு நோய் மீண்டும் மீண்டும் தலைதூக்கிக்கொண்டிருப்பது கவலை தருவதாகவுள்ளது.
பொதுவாக இலங்கையில் தென்மேல் பருவப் பெயர்ச்சிகால மழை, வடகீழ் பருவப் பெயர்ச்சிகால மழை ஆகிய இரு பருவ காலங்களையும் தொடர்ந்து வரக்கூடிய நாட்களிலேயே டெங்கு தலைதூக்குவது இயல்பு. ஆனால் கடந்த 2019 ஆம் வருடம் பருவ காலத்திற்குப் புறம்பாக வேறு காலங்களிலும் அதிக மழைவீழ்ச்சி காணப்பட்டது. இதனாலே டெங்கு பாதிப்பும் கட்டுக்கடங்காது தாண்டவமாடியது. இதனால் பல வைத்தியசாலைகளும் டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. வைத்தியசாலை விடுதி அறைக் கட்டில் ஒன்றில் இரண்டு, மூன்று நோயாளிகள் சிகிச்சைக்காகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவற்றுக்கும் மேலால் வைத்தியசாலை வெளிவராந்தாக்களிலும் நோயாளிகள் படுத்துறங்கிய அவலங்களையும் காணக்கூடியதாகவிருந்தது.
2019 ஆம் ஆண்டு முழுநாட்டிலும் காணப்பட்ட 99,120 டெங்கு நோயாளர்களில் மேல் மாகாணத்தில் 43,063 பேர் காணப்பட்டனர். இதில் தெஹிவளை– கல்கிசை, மொறட்டுவ, ஜயவர்தனபுர, கொலன்னாவ, மகரகம, கடுவல, முல்லேரியா உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தில் 19,870 பேர் அடங்குகின்றனர். இதிலும் கொழும்பு நகரில் மாத்திரம் 4,215 பேர் காணப்பட்டனர்.
இந்த 2020 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் முழு நாட்டிலும் 9,510 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 2,544 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 1465 பேரும் கொழும்பு நகரில் 462 பேரும் அடங்குகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை 50 வீதத்தால் குறைந்துள்ளது. இப்போது நிலவும் கோடைகால சூழ்நிலையே இதற்குக் காரணமாகும். தொடர்ந்து வரட்சி நீடிப்பதால் மேலும் படிப்படியாக குறைவு காணும் என்று எதிர்பார்க்கலாம். மழை தொடர்ந்தால் மேலும் தலைதூக்கும் சாத்தியமுள்ளது.
தேங்கும் மழை நீரிலேயே டெங்கு பரப்பும் நுளம்புகள் உள்ளிட்ட நுளம்புகள் பெருகுகின்றன.
கடந்த வருடம் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கவும் டெங்கு மரணங்கள் உயரவும் இன்னொரு பிரதான காரணியும் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, குறிப்பிட்ட நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் முன்னரை விட வீரியம் பெற்றிருப்பதே அக்காரணியாகும். இதனால் முன்னர் பயன்படுத்திய மருந்து சிகிச்சை முறை இப்போது வீரியமடைந்துள்ள வைரஸால் தாக்குப்பிடிக்க முடிகிறது. இதனால் நோய்த்தாக்கம் தொடரவே செய்கிறது. பலம் பெற்றுள்ள வைரஸை கட்டுப்படுத்துவதற்குரிய பிரத்தியேக மருந்து தயார் பண்ணுவதற்கிடையிலே நோய் வேகமாகப் பரவியமையே நோயாளர் அதிகரிப்புக்கும் மரண வீதம் உயர்வுக்கும் காரணமென்று தெரிவிக்கப் படுகிறது.
நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில் மனிதன் படித்து முன்னேறுவது போல விலங்கினங்கள் உள்ளிட்ட வைரஸ்களும் காலத்திற்கேற்றவாறு தன்னிலையை மாற்றியமைத்து முன்னேறி வருவதையே மேற்படி நிலை எமக்கு உணர்த்துகிறது. சிகுன்குன்யா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை உண்டு பண்ணும் W–N1, H1 என்ற வைரஸும் காலத்துக்கு காலம் தன்னை வீரியப்படுத்திக்கொண்டு வருவதை வைத்திய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ் வைரஸ் இரண்டாம் கட்டத்தில் W–N1, H2 என்றும் இதற்கான மருந்தைத் தாக்கம் பிடிப்பதற்காக மேலும் பலம் பெற்று W–N2, H2 என்று மாறி இப்போது W–H2, H3 என்று வீரியம் பெற்று மனிதனைத் தாக்கிக் கொண்டிருப்பதாகவும் வைத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்றே நுளம்புகளின் முன்னேற்றம் குறித்தும் மற்றோர் ஆய்வை முன்வைக்க முடிகிறது. நுளம்புச் சுருள்களை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
அதற்கும் தாக்குப் பிடித்துக் கொள்வதால் நாம் நுளம்புச் சுருள் ரகத்தையும் மாற்றி வருகிறோம். இப்போது அவற்றுக்கும் தாக்குப் பிடித்து நுளம்புகள் கைவரிசையைக் காட்டி வருவதைக் காண்கிறோம். இதே போன்றுதான் எம்மைத் தீண்டுவதிலும் நுளம்புகள் பாடம் படித்திருப்ப தையும் காணமுடிகிறது. எமது கையால் தாக்கியழிக்க முடியாதவாறு நுளம்புகள் எமது நடு முதுகுப் பகுதியையோ அல்லது கைக்கெட்டாத தோள்பட்டைப் பகுதியையோ தீண்டுவதை எங்களால் அவதானிக்க முடிகிறது.
மறுபுறத்தில் டெங்கு வைரஸும் நான்கு வகைகளில் வளர்ச்சி கண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் ரகம் 1,2,3,4 என்பனவே அவையாகும்.
கடந்த வருடம் தாக்கம் செலுத்திய வைரஸ்–3 ரகத்தைச் சேர்ந்ததாகும். சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் இந்த வைரஸ் தலைகாட்டியுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இதன் வீரியத்தன்மையுடன் போராடுவதற்குரிய எதிர்ப்புச் சக்தி மனித உடம்பில் இல்லாமையாலே நோய் மனிதனைத் தொற்றி வேகமாகப் பரவுவதற்கு காரணமாகியுள்ளது.
டெங்கு வைரஸைக் காவிவரும், ஈடிஸ் ஈஜிப்டஸ், அல்போபிக்டஸ் ஆகிய இரு வகை நுளம்புகளாலேயே டெங்கு பரப்பப்படுகின்றது. சுகதேகியொருவரை குறித்த நுளம்பு தீண்டும்போது அதன் குடுக்கையிலுள்ள டெங்கு வைரஸ் அவரது உடலினுள் செலுத்தப்படுகிறது. அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் பட்சத்தில் அவர் நோய்க்கிலக்காகி விடுகிறார்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவுள்ள சிறார்கள், முதியோர், இதர நோயுள்ளோர் மற்றும் கர்ப்பிணிகள் இலகுவில் டெங்குக்கு இலக்காகிவிடுகிறார்கள்.
குறித்த வைரஸ் உடலினுட் புகுத்தப்பட்ட பின்னர் நோய் அறிகுறியாக காய்ச்சல் ஏற்படும். பொதுவாக இன்புலுவன்ஸா, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் பலவும் தற்போதுள்ளன. எனவே குருதிப் பரிசோதனை மூலமே டெங்குவா அல்லது வேறு வைரஸ் தொற்றா என்பதைக் கண்டறியலாம்.
காய்ச்சலோடு கடும் தலைவலி, கண் சிவத்தல், கண்களுக்குக் கீழ்ப்பகுதியில் வலி, சதைகளில் வலி, மூட்டுக்களில் வலி, ஒக்காளம், வாந்தி, தோலில் மேல் பகுதியில் சிவப்பு பள்ளங்கள், அதிக குருதி அழுத்தம் போன்ற குணங்குறிகள் காணப்படுமாயின், உடனே அருகிலுள்ள வைத்தியரையோ, அரச வைத்தியசாலையையோ நாடவேண்டும். ஏனெனில் நோய் முதிர்ச்சியடைவதற்குள் இனங்காணப்படுவதன் மூலம் உரிய சிகிச்சைகளைப் பெற்று நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
குறித்த நோய்வாய்ப்பட்டவர், இயன்ற வரையில் ஓய்வு நிலையிலிருக்க வேண்டும். அதிகளவில் நீராகாரம் அருந்த வேண்டும். இளநீர், பழச்சாறுகள் ஏற்றதாகும். எப்படியும் வைத்தியரின் ஆலோசனைப்படியே செயற்பட வேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு டாக்டரால் கோரும் பட்சத்தில் அவ்வாறே நடந்துகொள்வது அவசியமாகும்.
தற்போது வீரியம் பெற்றுள்ள டெங்கு நுளம்புகள் காலை 5 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியிலும் மாலை வேளையிலும் 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடமாடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே குறித்த மேற்படி நேரங்களில் நுளம்பு தீண்டுவதில் நின்றும் பாதுகாத்துக்கொள்வது அவசியம். திறந்த மேனியோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட கை, காற்சட்டைகள் அணிவது ஏற்றமாகும். குறிப்பிட்ட நேரங்களில்தான் டெங்கு வைரஸ் உள்ள நுளம்புகள் நடமாடுகிறபோதிலும் இதர நோய்களைப் பரப்பும் ஏனைய நுளம்புக் கடிகளில் இருந்தும் தவிர்ந்துகொள்ள எல்லா சந்தர்ப்பங்களிலும் கூடிய அவதானத்துடன் நடந்துகொள்வது தேகாரோக்கியத்திற்கு நல்லது.
பெரும்பாலான நோய்கள் நுளம்புகளாலேயே காவு கொள்ளப்பட்டு வருவதால் பொதுவாக நுளம்பு பெருகும் எல்லா இடங்களையும் இல்லாமல் செய்ய வேண்டும். வீட்டையும் சுற்றுச் சூழலையும் சுத்தமாக வைத்திருப்பதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்படவேண்டும். மழை நீரோ, வீட்டுக்கழிவு நீரோ தேங்கியிருக்க விடாது வடிந்தோடச் செய்ய வேண்டும். ஒரு துளி அளவோ அல்லது பெரும் கிடங்கு, சாக்கடை குழிகளிலோ நீர் தேங்குவதைத் தடுக்கவேண்டும்.
தென்னஞ்சிரட்டை, குரும்பைக் கோம்பை அல்லது பாவனையின் பின்னர் அப்புறப்படுத்தும் நீர்தங்கும் நிலையில் உள்ள பாத்திரங்கள், போத்தல், மூடிகள், வாகன டயர்கள், பொலித்தீன் பைகள், பூச்சாடிகளிலும் கூட தங்கியுள்ள சிறுஅளவு நீரிலும் நுளம்புகள் முட்டையிட்டுப் பெருகும் வாய்ப்பு நிறையவே உள்ளன. இவற்றைக் கருத்திற்கொண்டு வாரம் ஒரு முறையோ அல்லது அடிக்கடி துப்புரவு செய்வது உயிராபத்திலிருந்து தடுத்துக்கொள்ள உதவும்.
ஒவ்வொருவரும் தனது வீட்டையும் சூழலையும் மாத்திரமின்றி அயலகப் பகுதிகளையும் சுத்தம் பேணுவது சமூகத்தைக் காக்கும் பணியாக அமையும்.
இதற்காக சுகாதாரப் பகுதியையோ தமது பிரதேச ஆட்சி மன்றங்களையோ எதிர்பார்க்காது தம் கடமை என்ற உணர்வோடு காரியமாற்றினால் டெங்குப் பாதிப்பிலிருந்து குறைந்த பட்சமாவது பாதுகாத்துக்கொள்ள முடியும்.-Vidivelli
- ஏ.எல்.எம்.சத்தார்