தேசிய இளைஞர் மன்றத்தின் செயற்றிட்டத்திற்கமைய இளைஞர் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றன. இதில் 38 முஸ்லிம் இளைஞர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
331 பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக 1005 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
இதில் 159 முஸ்லிம் வேட்பாளர்களும் நாட்டின் பல்வேறு பிரதேச பிரிவுகளிலும் போட்டியிட்டிருந்தனர்.
இலத்திரனியல் ரீதியில் இடம்பெற்ற வாக்குப்பதிவுகள் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை நான்கு மணிவரை 331 பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்றன.
ஒட்டுமொத்தமாக நாடளாவிய ரீதியில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை பேருவளை தொகுதியில் போட்டியிட்ட முஹம்மது சாதிக் அஹமதும் (870 வாக்குகள்) இரண்டாவது அதிகப்படியான வாக்குகளை கிண்ணியாவைச் சேர்ந்த ரஹ்மதுல்லாஹ் முஹம்மது சபானும் (740 வாக்குகள்) பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் மாத்திரமே நாடளாவிய ரீதியில் 700 க்கும் அதிகமான வாக்குகளை பெற்றவர்களாவர்.
அத்துடன் மாவனெல்லை தொகுதி, முசலி தொகுதி என்பவற்றில் அதிகமான முஸ்லிம் வாக்குகள் பதியப்பட்டிருந்தாலும் அங்கு அதிகமான முஸ்லிம் இளைஞர், யுவதிகள் களமிறங்கி வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையால் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், கெக்கிராவை தொகுதியில் போட்டியிட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஒரு வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அங்கும் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
கிழக்கு மாகாணத்தில் கூடுதலான முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறப்பட்டுள்ளது. இதுதவிர கிழக்கிற்கு வெளியே அனுராதபுர மாவட்டத்தில் அதிக இளைஞர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். பொலன்னறுவை, மொனராகலை, பதுளை, குருநாகல், கண்டி, மாத்தளை, புத்தளம் மாவட்டங்களில் பிரதிநிதித்துவம் பெறப்பட்டுள்ளது.-Vidivelli
- எஸ்.என்.எம்.ஸுஹைல்