இனவாத பிடியிலிருந்து இந்த அரசால் மீளமுடியாது
சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் உறுதியாகியுள்ளது என்கிறார் இம்ரான்
இனவாதப் பிடியிலிருந்து இந்த அரசால் மீளமுடியாது என்பது சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் உறுதியாகியுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் இந்த அரசால் அப்பிரதேச மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நீண்டகாலக் கோரிக்கையான தனியான நகரசபையை வழங்குவதாக வர்த்தமானி வெளியிட்டபின் அந்த வர்த்தமானியை இரத்து செய்வதாகக் கூறுவது இந்த அரசு இனவாத நிகழ்ச்சிநிரலை தாண்டி செயற்பட முடியாதென்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இவ்வாறாக இனவாதிகளின் பிடியிலுள்ள இந்த அரசு கேட்பதை போல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோ ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையோ கிடைத்தால் சிறுபான்மையிருக்கு அந்த அரசில் என்ன நடக்குமென்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
எமது அரசின் காலத்திலும் நுவரெலியாவில் புதிதாக ஆறு சபைகளை உருவாக்கினோம். அப்பொழுதும் எமக்கு இனவாதிகளிடமிருந்து அழுத்தங்கள் வந்தன. அதற்காக நாங்கள் அதை இரத்து செய்யவில்லை.
அதேபோன்று எமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறுவீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்பதே எனது நிலைப்பாடு. சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை வழங்கும்போது கல்முனை நகருக்குப் பாதிப்பேற்படாத விதத்தில் சிறந்த தீர்வொன்றை பெறவே அன்றைய எமது அரசு முயற்சி செய்து அதற்கான எல்லை பிரிப்பையும் செய்தது. அதை வர்த்தமானியில் அறிவிக்க காலம் தாழ்த்தியமையே எமது அரசு விட்ட தவறு. இந்த நகரசபை விடயத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கண்டிக்கத்தக்கன. இது தொடர்பான உண்மைத்தன்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலங்களில் இவ்வாறான கருத்துக்களை அவர்கள் வெளியிடமாட்டார்களென நம்புகிறேன் என தெரிவித்தார்.-Vidivelli
- கிண்ணியா நிருபர்