2020 ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 35 ஹஜ் முகவர் நிலையங்களுக்கே அனுமதிப்பத்திரம் வழங்கவுள்ளது. அரச ஹஜ் குழு முன்னெடுத்துள்ள மூன்று பிரிவுகளிலான ஹஜ் பொதிகளுக்கு (Package) குறிப்பிட்ட கட்டணத்தில் இணக்கம் தெரிவிக்கும் ஹஜ் முகவர் நிலையங்களே இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
கடந்த வருடம் 50 கோட்டாவும் அதற்கு மேலும் பெற்று ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுத்த ஹஜ் முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே இவ்வருடம் அனுமதிப் பத்திரம் வழங்கப்படும். அத்தோடு ஹஜ் முறைப்பாடுகளை விசாரணை செய்த ஹஜ் குழுவினால் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களாக அவர்கள் இருக்கக்கூடாது எனவும் அவர் கூறினார். தற்போது இயங்கிவரும் இரு ஹஜ் முகவர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை மாலை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஹஜ் முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் தீர்க்கமான முடிவினை அறிவிக்காத நிலையிலேயே அவரால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு தினங்களில் 35 ஹஜ் முகவர் நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு கோட்டா பகிர்ந்தளிக்கப்படும். அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழு வழங்கியுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பவர் களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வருடம் ஹஜ் ஏற்பாடுகளில் மோசடி– ஊழல்கள் புரிந்தவர்கள் ஹஜ் விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட்டு அந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை நாம் ஆராய்ந்து வருகிறோம். அந்த அறிக்கையின்படி சேவையிலிருந்தும் நீக்கப்படவுள்ள ஹஜ் முகவர் நிலையங்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்