நகரின் கிறிஸ்தவ ஆளுநரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும்போக்குவாத குழுக்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான இந்தேனோசிய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இஸ்லாமியக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடுமையான போட்டியின் பின்னர் மயிரிழையில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அடுத்த வருடத் தேர்தலில் ஜனாதிபதி ஜோகோ விடோடேவை பதவி கவிழ்க்க வேண்டும் என கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருகின்ற இஸ்லாமியவாதிகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ள தேசியவாதியான முன்னாள் ஜெனரல் பிராபாவோ சுபையான்டோவின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பெரும்பாலானவர்கள் வெள்ளை நிற ஆடையுடனும், இஸ்லாமியக் கொடியுடனும் காணப்பட்ட இவ்வார்ப்பாட்டம் அதிகாலை சுமார் மூன்று மணிக்கு அதிகாலைத் தொழுகையினை நிறைவேற்றும் விதமாக ஜகார்த்தாவின் தேசிய நினைவிடத்தில் ஆரம்பமானது.
இஸ்லாம் அனைவரையும் இணைப்பதோடு ஒற்றுமைப்படுத்தவும் செய்கின்றது. அத்துடன் அனைவர் மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்துகின்றது என்பதை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம் என சுபையான்டோ தனது உரையில் தெரிவித்தார்.
ஒழுங்கமைப்பாளர்கள் இதனை மீளிணைப்பு என தெரிவிக்கின்றனர். அல்-குர்ஆனைக் கொச்சைப்படுத்திய சீன கிறிஸ்தவரான ஜகார்த்தா ஆளுநர் பசுக்கி திஜாஹஜ்ஜா பூர்னாமாவை இலக்கு வைத்து 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியென இதனை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-vidivelli