இலங்கையில் தினமும் 64 புதிய புற்று நோயாளர்கள் கண்டறியப்படுகின்ற அதேவேளை தினமும் 38 பேர் புற்று நோயினால் மரணிப்பதாகவும் தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிக மரணங்கள் சம்பவிப்பதற்கான இரண்டாவது காரணியாக புற்று நோய் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்சமயம் இலங்கையில் மொத்தமாக 56054 புற்று நோயாளர்கள் உள்ளனர். 2018 இல் மொத்தமாக 23530 புற்று நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் இவர்களில் 14013 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்விபரங்கள் வெளியிடப்பட்டன.
உண்மையில் இன்று முஸ்லிம் சமூகத்திலும் தினசரி புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பலர் மரணித்து வருவதை நாம் காண்கிறோம். அத்துடன் மேற்படி விகிதாசாரத்திற்கேற்ப முஸ்லிம் சமூகத்திலிருந்தும் பலர் தினமும் புதிய புற்று நோயாளர்களாக கண்டறியப்படுகின்றனர். நமது உணவுப் பழக்கமே இதற்கான பிரதான காரணம் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புற்று நோய்களில் மூன்றில் ஒன்றை முற்றாக குணப்படுத்த முடியும். ஏனைய புற்று நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் குணப்படுத்த முடியும். நாடளாவிய ரீதியில் 24 அரசாங்க புற்று நோய் சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் மக்கள் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் மார்பு, வாய், நுரையீரல், தைரோயிட், வயிறு, உணவுக்குழாய், கர்ப்பப்பை வாய், கருப்பைகள், கல்லீரல் மற்றும் லியூகேமியா ஆகிய புற்று நோய்களே முதல் 10 இடங்களில் உள்ளதாக குறிப்பிட்ட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா, ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களே பொதுவாக தாக்குவதாகவும் பெண்களுக்கு மார்பு மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்களே பொதுவனது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். அதிலும் பெண் புற்றுநோயாளர்களில் நால்வரில் ஒருவர் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இவ்வாறு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதென்பது இலகுவானதல்ல. அத்துடன் மிகுந்த பணச் செலவுமிக்கதுமாகும். அரசாங்க வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சையளிக்கப்படுகின்ற போதிலும் அதற்காக காத்திருக்க வேண்டியேற்படுகின்றது. தனியார் வைத்தியசாலைகளுக்குச் சென்றால் மில்லியன் கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது.
புற்று நோய்களை ஆரம்பத்திலேயே இனங்கண்டால் குணப்படுத்த முடியும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் மக்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு போதாதுள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
தேசிய புற்று நோய் வைத்தியசாலைக்கு மிகப் பெறுமதியான ஸ்கேன் இயந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதில் முஸ்லிம்கள் குறிப்பிட த்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் புற்று நோயாளர்களைப் பராமரிப்பதற்கான முதலாவது இலவச நிலையம் கடந்த சுதந்திர தினத்தன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவை வரவேற்கத்தக்க விடயங்களாகும். இதுபோன்று புற்று நோய் தொடர்பில் களச் செயற்பாடுகளில் ஏனையோரும் அக்கறை செலுத்த வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்காக மாத்திரமன்றி சகல இன மக்களுக்காகவும் நமது சேவைகளை விஸ்தரிக்க வேண்டும். புற்று நோய்க்கெதிராக போராட அனைவரும் முன்வர வேண்டும்.-Vidivelli