உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புலனாய்வு நடவடிக்கைகள் மீது கத்தோலிக்க மக்கள் திருப்தியடையவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘ முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த தாக்குதல்கள் தொடர்பில் அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டன. என்றாலும் பாதுகாப்பு பிரிவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான காரணங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை எந்தத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாகத் தெரியவில்லை. வெளியிடப்பட்டுள்ள புலனாய்வு அறிக்கைகள் உண்மையான தகவல்களை மக்களுக்கு மறைப்பதாக உள்ளதாகவே நாம் சந்தேகிக்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் முழுமையாக ஆராயப்பட வேண்டும். விசாரணை செய்யப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற உண்மையை நாம் அறிய வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கி யார் தூண்டுதல்களாக இருந்துள்ளார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும்.
இத்தாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்கள் மற்றும் இத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு யார் கடமையில் தவறியிருக்கிறார்கள், அப்பாவி மக்களைக் காப்பாற்றத் தவறியிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். அவர்கள் உயர் பதவிகளில் உள்ளவர்கள் அல்லது சாதாரண தரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது எமக்குப் பிரச்சினையில்லை. அவர்கள் இனங்காணப்பட வேண்டும்.
இத்தாக்குதல் தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். சிலர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவ்வாறான சம்பவங்கள் எமக்குப் போதுமானதாக இல்லை. இவற்றினால் நாம் திருப்தியடையப் போவதில்லை.
முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு புலனாய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆரம்பம் முதல் இறுதிக் கட்டம் வரை இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் அறியப்படவேண்டும். இதனுடன் தொடர்புபட்டவர்கள் இதற்கான பின்னணியை மூடிமறைக்க முற்படுகின்றனர். இந்த சம்பவத்தை வேறு நபர்கள் மீது சுமத்த முயற்சிக்கிறனர். அதனால் முழுமையாக இச்சம்பவம் ஆராயப்பட வேண்டும்.
விசாரணைகள் நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு மீது நாம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அதேவேளை இவ்விவகாரத்தில் முழுமையான கவனம் செலுத்தப்படவில்லை. சில சம்பவங்கள் இதன் பின்பு இடம்பெற்றுள்ளன. சில சந்தேகத்துக்கு இடமான நபர்கள் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். அவர்கள் நீர்கொழும்பில் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விஜயம் செய்து வீடியோ பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமே இலங்கையில் இருந்துள்ளார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் இலாபம் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் தற்போது இது தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இத்தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள், தாக்குதலை தடுக்கத் தவறியவர்கள் தொடர்பான தகவல்களை மக்கள் முன்வைக்குமாறு ஜனாதிபதியை வேண்டிக்கொள்கிறேன்.
இத்தாக்குதல் பற்றி ஆராயும் பொறுப்பினை ஆணைக்குழுக்களின் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் பொறுப்பிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது என்றார். -Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்