உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று முதலாவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளன. இந்நினைவு தின நிகழ்வுகளில் இலங்கை மக்கள் அனைவரும் இன, மத பேதங்களின்றி கலந்து கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.
நினைவு தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க திருச்சபையினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம், 17 ஆம், 18 ஆம் திகதிகளில் அனைத்து தேவாலயங்களிலும் இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.
19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புனித ஜோசப் வித்தியாலயத்தில் தியானம் மற்றும் ஆராதனைப் பாடல்கள் இடம்பெறவுள்ளன. அத்தோடு பலியானவர்களின் ஆத்மசாந்திக்காக இலத்தீன் மொழியிலான பாடல்களும் இசைக்கப்படவுள்ளன. சுமார் 2000 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கு கொள்ளவுள்ளனர்.
19 ஆம் திகதி மாலை 4 மணிக்கு மாதம்பிட்டி மயானத்திலும், 5 மணிக்கு கனத்தை மயானத்திலும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூபிகள் திறக்கப்படவுள்ளன. 20 ஆம் திகதி தொடக்கம் கொச்சிக்கடை மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயங்களில் விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. 20 ஆம் திகதி காலை 8.45 மணியளவில் ஆரம்பிக்கப்படும் நிகழ்வுகள் 21 ஆம் திகதி காலை 8.45 மணிவரை இடம்பெறவுள்ளன. பின்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிமுக நிகழ்வு இடம்பெறுவதுடன் இதனையடுத்து உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் 2 நிமிட மெளன அஞ்சலியும் இடம்பெறவுள்ளது. இலங்கை மக்கள் அனைவரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும் ஆலயங்களிலும் பெளத்த விகாரைகளிலும் மணிகளை ஒலிக்கச் செய்யுமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டியுள்ளார். சீயோன் தேவாலயத்திலும் இவ்வாறான நினைவுதின நிகழ்வுகளை மேற்கொள்ளு மாறும் அறிவித்துள்ளார்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்