ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் என இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக் ஷ்மன் கிரியெல்ல, மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கிடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத் தீர்மானம் குறித்து நாளை (இன்று) நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் சின்னமாக அன்னம் சின்னத்தை உறுதிப்படுத்தும் வகையில் விரைவில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் அன்னம் சின்னத்திலேயே போட்டியிட்டிருந்த போதிலும் இம்முறையே முதல் தடவையாக பொதுத் தேர்தலில் இச் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli