சாய்ந்தமருது புதிய நகரசபை உருவாக்கம் முஸ்லிம் வாக்குகளை கவரும் தந்திரமே
அரசாங்கத்தை சாடுகிறார் மரிக்கார் எம்.பி.
கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருது நகரசபையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளமை பொதுத்தேர்தலின் போது முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். இவ்வாறு வாக்குகளை பெற்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாட்டின் சுயாதீனத் தன்மையை இல்லாதொழிக்கும் முயற்சியிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருது நகரசபையை உருவாக்குவதற்கான அதிவிசேட வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதனூடாக சாய்ந்தமருதை தனியொரு இராச்சியமாக்கும் முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அதேபோல், கொழும்பு மாநகர சபையையும் பிரித்து மத்திய கொழும்பிற்கும் தனியொரு மாநகர சபையை எதிர்காலத்தில் உருவாக்கும் நடவடிக்கைளை முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
சாய்ந்தமருதிற்குத் தனியாக நகரசபையை உருவாக்குவதன் ஊடாக பொதுத் தேர்தலின்போது முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியிலேயே இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
பௌத்தர்களின் வாக்குகளாலேயே ஆட்சிக்கு வந்ததாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம், இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்றால் இந்த விவகாரம் தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஏனெனில், நாட்டு மக்களின் வாக்குகளின் ஊடாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டு ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மையை இல்லாதொழிக்கும் நோக்கிலேயே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அவருடைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவே ஆட்சிபீடமேறினார். ஆயினும் அந்த திட்டங்களை ஜனாதிபதி திறன் பட நிறைவேற்றுவதற்கான வாய்ப்பையளிக்க மஹிந்த தரப்பினர் தயாராயில்லை.
கடந்த 2015 இல் இல்லொதொழித்த மஹிந்த தரப்பின் குடும்ப ஆட்சியே மீள ஆரம்பித்துள்ளது. ஆகையால் ஜனாதிபதியால் அவருடைய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது போகும் நிலைமை உருவாகியுள்ளது. -Vidivelli