இவ்வருட ஹஜ் கடமைக்காக பதிவுக்கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் தாங்கள் விரும்பும் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள ஹஜ் முகவர்களைத் தொடர்புகொண்டு இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என அரச ஹஜ் குழு அறிவித்துள்ளது.
ஹஜ் முகவர்களுக்கு 50க்கு மேலதிகமான கோட்டாவே வழங்கப்படும், 50 க்கும் குறைவான கோட்டா வழங்கப்படமாட்டதெனவும் குறிப்பிட்டுள்ளது. இவ்வருட ஹஜ் விவகாரம் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் அஹ்கம் உவைஸ் விடிவெள்ளிக்குக் கருத்து தெரிவிக்கையில், ஹஜ் விண்ணப்பதாரிகள் தாம் விரும்பும் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள ஹஜ் முகவர்களைத் தொடர்புகொண்டு, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளமுடியும். இதேவேளை கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது.
அரச ஹஜ் குழு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் ஹஜ் வழிமுறை (Guide Lines) களை அமுல்படுத்தும் பணியையே மேற்கொள்கிறது. இவ்வருடம் இதுவரை இலங்கைக்கு 3500 கோட்டாவே கிடைத்துள்ளது. 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் அவர்களது பதிவிலக்க வரிசைக்கிரமப்படியே தெரிவு செய்யப்படுவார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளார்கள் என்றார்.
அரச ஹஜ் குழு உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளருக்குமிடையில் நேற்று ஹஜ் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்