ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றுக் கிடையில் நிலவும் முரண்பாடுகளைத்தீர்த்துக் கொள்வதற்கான கலந்துரையாட லொன்று நாளை பிற்பகல் 6.30 மணிக்கு கொழும்பு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் பொதுஜனபெரமுன கட்சியின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக் ஷ மற்றும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ள நிலையில் இந்த உடன்படிக்கைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பொதுஜன பெரமுனவின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கருத்து வெளியிட்டு வருவதால் இதற்குத் தீர்வு காணும் முகமாக கலந்துரையாடலொன்றினை ஏற்பாடு செய்யும்படி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியைக் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கைக்கு அமைவாகவே நாளை குறிப்பிட்ட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுமக்கள் முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கு சின்னம் தொடர்பில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் முரண்பாடான கருத்துகள் தொடர்பில் நாளைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஆகியோருக்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றுள்ளது.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்