தமிழ் பிரதேச சபை உட்பட மேலும் மூன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்படும்.
தமிழ் மக்களுக்கு அநியாயம் இழைக்கப்படாது என்கிறார் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு எல்லை இடுவதற்கான பிரச்சினை இல்லாமலிருந்ததால் முதலில் சாய்ந்தமருதிற்கான உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு அடுத்ததாக கல்முனைப் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதனைத் தீர்ப்பது எமது தலையாக கடமையாகவும் உள்ளது. கல்முனைப் பிரதேசத்தில் மேலும் மூன்று உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டு அதற்கான பிரதேச செயலகங்களும் அமைக்கப்பட வேண்டும்.
கல்முனையில் தமிழர்களுக்கென்று உள்ளூராட்சி சபை உருவாக்கப்படுகின்றபோது அப்பிரதேசத்தில் தமிழ்த் தலைமையொன்று உருவாக்கம் பெறும் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் அங்கம் வகித்து வந்த ஆரம்ப கால உறுப்பினர்களில் பெருந் தொகையானோர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்து கொண்டனர். இது தொடர்பில், ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள மாற்றுக் கட்சியினைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாற்றுக் கட்சிகளின் உயர் பீட உறுப்பினர்கள், மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் என பெருந் தொகையானோர் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.
இதன்போது முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கல்முனைப் பிரதேசத்தில் நாம் இன்னும் மூன்று உள்ளூராட்சி சபைகளை உருவாக்குகின்றபோது அவர்களுக்காக அப்பிரதேசத்தில் சாய்ந்தமருதுடன் நான்கு பிரதேச செயலப் பிரிவுகள் கிடைத்து விடும்.
கல்முனை தமிழ் மக்களுக்கென்று ஓர் உள்ளூராட்சி சபை வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. தேசிய காங்கிரஸ் கட்சி பல்வேறான விடயங்களை இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்குச் செய்திருக்கின்றது. அதன் அடிப்படையில் முறையான காய் நகர்த்தல்களை நாம் மேற்கொள்ளவுள்ளோம். அவர்களுக்காக உள்ளூராட்சி சபைகளுக்குரிய கட்டடங்கள், அதற்கான வசதி வாய்ப்புக்கள் போன்றவற்றைச் செய்து கொடுப்பதற்கான இதய சுத்தியுடனான சிந்தனையுடன் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் தனியாக நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. இவ்விரண்டு ஆண்டுக்குள் கல்முனையில் உள்ள மீதமாக காணப்படும் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான செயற்பாடுகளை முடுக்கி விட்டிருக்கின்றோம். இதற்கென ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்கான முன்னாயத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
கல்முனைப் பிரதேசத்தில் இவ்வாறு நான்கு சபைகளும் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கம் பெறுகின்றபோது அப்பிராந்திய மக்களுக்கு பல்வேறான நன்மைகள் கிட்டவுள்ளன. வளப் பங்கீடு முதல் அப்பிரதேசங்களுக்கான தலைமைகளும் உருவாக்கம் பெறும். இதுபோன்று பல்வேறான நன்மைகள் அப்பிராந்திய மக்களுக்கு கிடைப்பது ஒரு பேறென்றே கூற வேண்டும்.
கல்முனைப் பிரதேசத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களை நல்ல முறையில் வழிநடத்துவதற்கும், மருதமுனை பிரதேசத்தல் உள்ள முஸ்லிம் மக்களை நல்வழிப்படுத்தக் கூடிய ஒரு தலைமை தற்போதுள்ள சூழ்நிலையில் இல்லாமை பெருங்குறைபாடாகக் காணப்படுகின்றது. இக்குறைபாட்டினை தீர்க்கும் வகையில் அப்பிரதேசங்களில் தனியான உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம் பெறும் போது நல்ல தலைமைகளும் அங்கு உருவாகுவது தற்கால சந்ததியினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.
கடந்த 1987ஆம் ஆண்டுக்கு முன்னர் அப்பகுதியில் நான்கு உள்ளூராட்சி சபைகள் இருந்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அச்சபைகளை ஒன்றாக இணைத்தார். இதன் பின்னர் சாய்ந்தமருது மக்கள் அதனைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை மிக நீண்ட காலமாக முன்வைத்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு உள்ளூராட்சி சபையொன்றினை உருவாக்கிக் கொடுத்து விட்டு நாம் அதில் மகிழ்ச்சியடையவில்லை. அப்பிரதேச மக்களின் தேவை மிக நீண்ட நாளாக தொடர்ந்து வந்து பலரால் அம்மக்கள் ஏமாற்றப்பட்டபோது நாம் அம்மக்கள் மீது பற்று வைத்து பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வந்த வேளையில் எமது முயற்சிகள் இடைநடுவில் சில காலம் தடைப்பட்டிருந்த போதிலும் தற்போது எமது முயற்சிகளுக்காக முடிவு கிடைத்திருக்கின்றது.
கல்முனைப் பிரதேசத்தில் இப்போதிருக்கின்ற எமக்கான பணி மேலும் மூன்று சபைகளை உருவாக்கி அங்குள்ள மக்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்பதே. இச்சபைகளுக்கான எல்லைகளை நிர்ணயிப்பதுதான் இப்போது எம்மத்தியில் காணப்படும் பிரச்சினையாக உள்ளது.
எல்லைகள் என்பது தமிழர்களுடைய முஸ்லிம்களுடைய பிரிவினையினை ஏற்படுத்துவதற்காக தயார்படுத்தும் எல்லையாக அது அமைந்துவிடக் கூடாது. நாம் யுத்தங்களை புரிவதற்காக எல்லைகள் பிரிப்பதுபோல் சிலர் கருத்துக்களை பரப்பிக் கொண்டு வருகின்றனர். உண்மையில் எல்லைகள் என்பது எம்மை முரண்படச் செய்வதற்காக அல்ல. எம்மை வாழ வைப்பதற்காகவும் எதிர்கால சந்ததியினரை நிம்மதியடையச் செய்வதற்காகவும் இவ்வாறான எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் எந்தவொரு அரசியல்வாதிகளும் சுயநலத்திற்காக பிழையாக கருத்துக்களையும் மக்களுக்கான உணர்ச்சிவசப் படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டாம் என நான் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் இப்பிரதேச மக்களை வைத்துக் கொண்டு பல்வேறான வாக்குறுதிகளையெல்லாம் அள்ளி வீசிய அரசியல்வாதிகள் இம்மக்களின் உள்ளூராட்சி கோரிக்கை தொடர்பில் மக்களைக் குழப்பி குளிர்காயும் அரசியலினை செய்து வந்தார்கள். நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருகின்றோம் என்று சொன்னதில்லை என்றார். -Vidivelli
- எம்.ஏ.றமீஸ், பாறுக் ஷிஹான்