ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணிவரும் நிறுவனங்கள் தொடர்பான அறிக்கையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய குடியேற்றங்களுடன் தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற முடிவுக்கு வருவதற்கான நியாயமான காரணங்களைக் கொண்டுள்ள 112 வர்த்த நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந் நிறுவனங்களில் 94 இஸ்ரேலிய நிறுவனங்களாகும். ஏனைய 18 நிறுவனங்களும் வேறு ஆறு நிறுவனங்களைச் சேர்ந்தவையாகும்.
பட்டியலிடப்பட்ட அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, லக்சம்பேர்க், தாய்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவையாகும். இவற்றுள் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் வாடகை குடியிருப்புகளைப் பகிர்வு செய்யும் Airbnb நிறுவனமும் ஒன்றாகும்.
இந் நிறுவனங்களின் செயற்பாடுகள் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளன என ஐ.நா. அலுவலகம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினைகள் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு எதிர்காலத்தில் நிகழவுள்ளவைகளும் கவலைகளை ஏற்படுத்தவுள்ளன என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பெண் உயர்ஸ்தானிகரான மைக்கேல் பாச்லெட் தெரிவித்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலுள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களிலுள்ள பட்டியலை நீக்கவுள்ளதாக Airbnb நிறுவனம் கடந்த 2018 நவம்பர் மாதம் அறிவித்தது. எனினும் அடுத்த ஏப்ரல் மாதத்தில் திட்டமிட்ட பட்டியல் நீக்கத்தை செயல்படுத்துவதில்லை எனவும் பிராந்தியத்திலிருந்து கிடைக்கும் முன்பதிவுகள் மூலம் பெறப்படும் வருமானங்கள் சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் எனவும் அறிவித்தது.
ஏனைய நிறுவனங்களாக பயணம் தொடர்பான தளங்களான எக்ஸ்பீடியா மற்றும் டிரிப் அட்வைசர், தொழில்நுட்ப நிறுவனமான மோட்டோரோலா, நுகர்வோர் உணவு தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மில்ஸ் மற்றும் பிரான்சின் எகிஸ் ரெயில் மற்றும் பிரித்தானிய நிறுவனமான ஜே.சி. பாம்போர்ட் அகழ்வு நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டட மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ள பலஸ்தீன வெளிநாட்டமைச்சர் றியாத் அல் மல்கி சர்வதேச சட்டத்திற்குக் கிடைத்ததொரு வெற்றி என வர்ணித்துள்ளார்.
குடியேற்றங்களோடு தொடர்புபட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை சர்வதேச சட்டம் மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என அல்-மல்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனங்கள் குடியிருப்புக்களில் மேற்கொள்ளும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சிபார்சுகளையும் அறிவுத்தல்களையும் வெளியிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பான குறிப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களினதும் தரவுத்தளத்தை 2016 யு.என்.எச்.ஆர்.சி தீர்மானத்தின் மூலம் கோரப்பட்டதற்கு அமைவாக அதற்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையினால் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
47 நாடுகள் அங்கம் வகிக்கும் மனித உரிமைகள் பேரவை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களை பகுப்பாய்வு செய்யும் விதமான இதற்கு முன்னர் ஒருபோதும் இத்தகைய பட்டியலொன்றைக் கோரியதில்லை.
இந்த தகவல்தளத்தைத் தொகுப்பது மிகவும் சிக்கலான விடயமாக இருந்தது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகம், நாடுகள், அறிஞர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் குறித்த நிறுவனங்களுடனான பரந்துபட்ட கலந்துரையாடல் இதில் தொடர்புபட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக சர்வதேச ரீதியான சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக அச்சுறுத்தல் விடுத்துள்ள பலஸ்தீனப் பிரதமர் மொஹமட் ஷ்தாயே, அந் நிறுவனங்கள் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களுக்குள் காணப்படும் தமது தலைமையகங்களையும் கிளைகளையும் உடனடியாக மூட வேண்டும், ஏனெனில் அவை சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு முரணானவை எனவும் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தில் மனித உரிமை மீறல்களில் பங்குபற்றியதற்காக சர்வதேச சட்ட நிறுவனங்கள் மற்றும் அந் நிறுவனங்களின் நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் சட்டபூர்வமாக அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக நாம் வழக்குத் தொடருவோம் என ஷ்தாயே தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எமது நிலங்களை அவர்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்கெதிராக பலஸ்தீனர்கள் நட்டஈட்டைக் கோருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இத் தரவுத்தளத்தை வெளியிட்டமையினை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைமையதிகாரியான புரூனோ ஸ்டேன்கோ வரவேற்றுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றங்களுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது போர்க்குற்றங்களுக்கு உதவுவதாகும் என்பதை அனைத்து நிறுவனங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த அறிக்கை சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது, சர்வதேச சட்டத்தின் கீழ் மேற்குக் கரையிலுள்ள குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என்பதே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகும் என மேற்கு ஜெரூசலத்திலுள்ள அல்-ஜெஸீரா பெண் ஊடகவியலாளர் ஸ்ரீபனீ டெக்கர் தெரிவித்தார்.
இவ்வாறான நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டரீதியான எந்தவித ஏற்பாடுகளும் இல்லை எனினும், புறக்கணிப்புச் செய்வதற்கும் பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்குமான சாத்தியத்திற்கான வழிகளை இவ்வறிக்கை திறந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்ச்சியாக அப் பட்டியலில் இருக்காது. குறித்த நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்திக் கொண்டதாகவோ அல்லது தொடர்ந்தும் சேவையினை வழங்கவில்லை என்றோ நம்பத்தகுந்த காரணங்கள் இருக்கும் பட்சத்தில் குறித்த நிறுவனங்கள் தொடர்ந்தும் அப்பட்டியலில் இருக்காது எனவும் அவர் தெரிவத்தார்.
தரவுத்தளம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் என அறிக்கை பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்தப் பணியைக் கண்காணிக்க சுயாதீன நிபுணர் குழுவை நியமிக்க வேண்டுமெனவும் மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ளது.
1967 ஆம் ஆண்டு ஆறு நாள் யுத்தத்தின்போது இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையினையும் கிழக்கு ஜெரூசலத்தையும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. இக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவையாகக் கருதப்படுவதோடு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாகவும் காணப்படுகின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சுமார் 600,000 இஸ்ரேலியர்கள் வாழ்கின்றளர், இஸ்ரேலினால் இணைக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெரூசலத்தில் 2.9 மில்லியன் பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர்.
இந்த அறிக்கை தொடர்பில் முதலில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் வெளிநாட்டமைச்சர் காட்ஸ், இந்த பட்டியலை வெளியிடுவது இஸ்ரேலை காயப்படுத்த விரும்பும் நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் ‘வெட்கக்கேடான சரணடைதல்’ என வருணித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை பக்கச் சார்பானது எனவும் பயனற்ற அமைப்பு எனவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு புதன்கிழமை தெரிவித்தார்.
மனித உரிமைகள் தொடர்பில் செயற்பட வேண்டிய இவ்வமைப்பு இஸ்ரேல் மீது களங்கம் ஏற்படுத்த முனைகின்றது. நாம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய வாரங்களில், நெட்டன்யாகு மேற்குக் கரையில் இஸ்ரேலின் 100 இற்கும் மேற்பட்ட குடியேற்றங்களை இணைப்பதாக உறுதியளித்துள்ளார், இதற்கு அமெரிக்காவும் பச்சைக் கொடி காட்டியுள்ளது. பலஸ்தீனிய அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய மறுநாள் இவ்வறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.ஐ.அப்துல் நஸார்