வவுணதீவு பொலிஸார் படுகொலையின் பின்னணியில் ‘தேசத்தின் வேர்கள்’ அமைப்பு
அதன் தலைவரை தேடி வேட்டை; மாவீரர் தின அலங்காரங்களை அகற்றிமைக்கு பழிவாங்கவே தாக்குதல்?
- எம்.எப்.எம். பஸீர்
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸாரை படுகொலை செய்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு அம்மாள் வீதியைச் சேர்ந்த ‘தேசத்தின் வேர்கள்’ எனும் அமைப்பின் தலைவர் என கருதப்படும் கணேசன் பிரபாகரன் எனும் நபரை தேடி சீ.ஐ.டி.யினரும் உளவுத்துறையினரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட புலிகளின் அஜந்தன் படைப்பிரிவின் புலனாய்வு உத்தியோகத்தரான ஜயந்தன் என்பவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படைப் பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதான இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன் என்பவர் சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் நிலையிலேயே, கணேசன் பிரபாகரனைத் தேடி கூட்டு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பகுதியில் தேசத்தின் வேர்கள் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் தின அலங்கரிப்புக்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கொண்டாட்டத்துக்கு முதல் அவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தியிருந்த நிலையில், அதற்கு பழிதீர்க்கும் வகையில், பொலிஸார் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு சந்தேகிக்கும் நிலையிலேயே அவரை தேடி இந்த விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கிளிநொச்சயில் வைத்து கைதுசெய்யப்பட்ட இமையன் எனப்படும் ராசலிங்கம் சர்வானந்தன் கொலைகளுக்கு முந்தைய தினம் அதாவது நவம்பர் 29 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து கணேசன் பிரபாகரனின் வீட்டுக்கு வந்துள்ளமையும் அவரை ஜயந்தனே அழைத்து வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையிலேயே இந்த கூட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.
கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்குட்பட்டு சேவையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து இது குறித்த விசாரணைகளை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவில் முதலில் கிழக்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகரவின் நேரடி மேற்பார்வையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. எனினும் பொலிஸ்மா அதிபர் சி.ஐ.டியின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், தேசிய உளவுத்துறை பிரதானிகள் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு சென்று நேரடி மேற்பார்வைகளை மேற்கொண்ட நிலையில் அந்த விசாரணைகளை சிஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
அதனையடுத்து சி.ஐ.டி. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் நேரடி கட்டுப்பாட்டில் அதன் பிரதி பொலிஸ்மா அதிபர் சுகத் நாகஹமுல்லவின் நேரடி மேற்பார்வையில், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்க தலைமையிலான குழுவினர் மட்டக்களப்புக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கொலைகள் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸாரினால் ஜயந்தன் எனும் சந்தேக நபர் பொறுப்பில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அதன்படியே, பல தகவல்களை வெளிப்படுத்திக்கொண்ட சி.ஐ.டி. குழு கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த ராசலிங்கம் சர்வானந்தனை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தது.
அதன் பலனாக கிளிநொச்சி பொலிஸார் ஊடாக அவர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டு விசாரணைகளின்படி பாதுகாப்பு உயர்மட்டத்திலிருந்து கிடைக்கும் தகவல் பிரகாரம் வவுணதீவில் மாவீரர் தின அலங்காரங்களில் பொலிஸார் அகற்றும் சீ.சி.டீ.வி. காணொலிகளை முன்னாள் போராளிகள் சிலர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலொன்றிலிருந்து பெற்று பார்வையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அதனால் ஏற்பட்ட கோபம் மற்றும் பழிதீர்க்கும் எண்ணத்தின் அடிப்படையில் இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களது கைத்துப்பாக்கிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதன் அடிப்படையிலேயே இந்நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள கணேசன் பிரபாகரன் என்பவரைத் தேடி பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் சார்ஜன்ட்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli