இலங்கையில் வசிக்கும் அனைத்து சீனப் பிரஜைகளுக்கும் கருணை காட்டுங்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என கருணை உள்ளம் கொண்ட இலங்கை மக்களை வேண்டிக்கொள்கிறேன்’’என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரதன தேரர் அண்மையில் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
முழு உலகையும் இன்று பீதிக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸின் பரவல் தினமும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் உயிர்கனைப் பலியெடுத்து வருகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி சனிக்கிழமை வரை 812 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
37 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 30 உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்ட சீனப்பெண் ஒருவர் இலங்கையிலும் இனங்காணப்பட்டார். இலங்கையில் அவருக்கு பூரண சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அந்தப் பெண் பூரணமாகக் குணமடைந்து விட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. என்றாலும் அவர் அங்கொடை தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் (ஐ.டி.எச்) தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் மரபணு மாதிரி மேலதிக பரிசோதனைக்காக ஹொங்கொங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குட்பட்டு இலங்கையில் இனங்காணப்பட்ட சீனப் பெண் குணமடைந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் என்றாலும் கொரோனா வைரஸ் பரவும் பீதி எம்மிடமிருந்து இன்னும் அகலவில்லை.
இந்நிலையிலேயே இலங்கையில் தொழில் புரியும் மற்றும் வதியும் சீனப் பிரஜைகள் குறித்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். சீனப் பிரஜைகள் மீது கருணை காட்டுமாறும் அவர்களுக்கு உதவி செய்யுமாறும் கோரியுள்ளார்.
சீனர்கள் என்றால் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்கள், அவர்களுடன் நாம் உறவாடக் கூடாது, அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என எம்மில் பலர் கருதுகிறார்கள் எமது நாட்டில் நாம் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறோம். மலேரியா, டெங்கு என்பவற்றை இவற்றில் குறிப்பிட்டுக் கூறலாம். இந்த நோய்கள் பரவாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பது எமது மக்களுக்குத் தெரியும். கொரோனா வைரஸ் தொடர்பிலும் நாம் இது போன்றே செயற்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் சீன நாட்டிலிருந்தே பரவியதென்பதற்காக முழு சீன நாட்டவர்கள் மீதும் எம்மால் பழி சுமத்த முடியாது. நோயொன்று பரவியமைக்காக ஒரு நாட்டவரை நாம் புறக்கணிப்பது, குற்றம்சாட்டுவது தவிர்க்கப்படவேண்டும்.
இவ்வாறான இக்கட்டான நிலையில் துயரத்தில் ஆழ்ந்துள்ள இலங்கையில் வாழும் சீனர்களுக்கு நாம் கருணை காட்ட வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டும். உதவிகள் புரியவேண்டும். பிரார்த்திக்க வேண்டும். இஸ்லாம் இதையே போதிக்கிறது.
சீனர்களுக்கு சகோதர உணர்வுடன் உதவி புரியுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் கோரிக்கை விடுத்துள்ளார். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். அனைவரும், சர்வதேசமும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸை அழிப்பதற்கு செயற்பட வேண்டும்.
சீனாவுக்கு இலங்கையையும் இலங்கை மக்களுக்கு சீன மக்களையும் ஒரு போதும் மறக்கமுடியாது. எமது இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பல நூற்றாண்டு வரலாறு கொண்டதாகும். சமய உறவு மற்றும் பொருளாதார உறவினை குறிப்பிட்டுக் கூறலாம். சர்வதேச ரீதியிலான பிரச்சினைகளின் போது சீனா எமக்குப் பக்கபலமாக இருந்துள்ளது.
எமது நாட்டின் நிர்மாணத் துறையில் பெரும்பாலான சீனர்கள் பணியாற்றுகிறார்கள். பல்வேறு பாரிய திட்டங்களை சீன அரசும், நிறுவனங்களும் பொறுப்பேற்று செயற்படுத்தி வருகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக எமது நாட்டிலும் சீனர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை தவிர்க்கப்பட வேண்டும். இங்குள்ள சில உணவகங்கள் சீனர்களுக்கு கதவடைத்துள்ளமை கவலைக்குரியதாகும்.
அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இடமில்லை என உறுதி செய்துள்ள நிலையில் நாம் தொடர்ந்தும் அச்ச உணர்வோடு இலங்கையிலுள்ள சீனர்களை புறந்தள்ளுவதற்கு முயற்சிக்கக் கூடாது.
அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரரின் அறைகூவலுக்கு அமைய சீனப்பிரஜைகள் மீது கருணை காட்டுவோம். அவர்களை அரவணைப்போம்.-Vidivelli