72 ஆவது சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய
ராஜபக் ஷ நிகழ்த்திய உரை மிகவும் சிறப்பானதாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, உரையில் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் சிறந்த உரைகளை நிகழ்த்திய நன்நோக்கம் கொண்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இது செயற்படுத்தப்பட வேண்டிய தருணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நேற்று செவ்வாய்க் கிழமை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நாட்டின் 72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, ‘இலங்கையின் பிரஜைகள் அனைவருக்கும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. அதேபோன்று அவர்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரமாக சிந்தித்தல், தனிப்பட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் ஆகிய உரிமைகளை உறுதிசெய்வதற்கு நாம் முனைப்புடன் செயலாற்றுவோம்’ என்று உறுதியளித்ததுடன், மேலும் பல விடயங்கள் குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் உரை தொடர்பில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
‘இன்றைய தினம் (நேற்று) ஜனாதிபதியின் உரை மிகவும் சிறப்பானதாக இருந்தது. தற்போது அவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். மிகவும் கடினமான தீர்மானங்களை ஒரு ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்தக் கூடியவரே சிறந்த வலுவான தலைவராவார். 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் சிறந்த உரைகளை நிகழ்த்திய நன்நோக்கம் கொண்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இது செயற்பட வேண்டிய தருணமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். -Vidivelli