இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், தேசிய சுதந்திரதின நிகழ்வின் போது சிங்கள மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், தேசிய கீதம் இசைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழியில் பாடமுடியும் என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது தேசிய கீதம் இசைத்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் சுதந்திர தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடர்பில் தெரிவித்த அவர்,
‘ பாதுகாப்பான தேசம் – சௌபாக்கியமான நாடு ‘ என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவை அனுமதியுடன் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய குழுவினால் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மத வழிபாடுகள்
பெப்ரவரி 2 ஆம் திகதி இரவு 9.30 மணிமுதல் மறுநாள் (பெப்ரவரி 3) காலை 5.30 மணி வரை மத வழிபாடுகள் இடம்பெறும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ என்போரும் ஏனைய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள். பௌத்த சாசன அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தன்று (பெப்ரவரி 4) பௌத்த மத வழிபாடுகள் காலை 7.30 மணிக்கு கொள்ளுபிட்டி – தர்மகீர்த்திராம விகாரையிலும், இந்து மத வழிபாடுகள் கொழும்பு 7, மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும், கத்தோலிக்க மத வழிபாடுகள் காலை 6.15 க்கு பம்பலபிட்டி புனித மரியாள் தேவாலயத்திலும், இஸ்லாம் மத வழிபாடுகள் காலை 6.25 க்கு கொழும்பு – 03 கொள்ளுபிட்டி ஜும்ஆ பள்ளிவாசலிலும் இடம்பெறவுள்ளன.
நிகழ்வில் கலந்து கொள்வோர்
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விஷேட உறுப்பினர்கள் 2500 பேர் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு பொதுமக்கள் 1000 பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
விஷேட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளப்போவதில்லை. எனினும் இலங்கைக்கான தூதரங்கள் இல்லாத நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு
சுதந்திர தினத்தன்று இடம்பெறவுள்ள மரியாதை அணிவகுப்பில் 4325 இராணுவத்தினரும், 868 கடற்படையினரும், 815 விமானப்படையினரும், 1382 பொலிஸாரும் , 515 சிவில் பாதுகாப்புப் பிரிவினரும், 355 தேசிய மாணவரணியினரும் பங்குபற்றவுள்ளனர்.
கலாசார அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய இளைஞர் சேவை மன்றம், மாகாணசபை மற்றும் கலாசார மத்திய நிலையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 451 கலைஞர்கள் பங்குபற்றுவார்கள்.
டீ.எஸ்.சேனாநாயக்காவின் நினைவுதினம்
டீ.எஸ்.சேனாநாயக்காவின் நினைவு தினம் சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தினத்தன்று காலை 08.8 க்கு அனுஷ்டிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவினால் மலர்வளையம் வைக்கப்பட்டு அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்படும்.
தேசிய கொடியேற்றல் -மின்விளக்கு அலங்காரம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை அரச திணைக்களங்கள் போன்றவற்றில் ஒரு வார காலத்திற்கு தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும். மேலும் பெப்ரவரி 3, 4 ஆம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்கள் சிலவற்றில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் மரநடுகை
சுதந்திர தினத்தன்று நாடளாவிய ரீதியில் மரங்களை நடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.-Vidivelli