கொரோனா வைரஸ் அச்சம்: பாடசாலைகளை மூடவேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை
தேவையாயின் அரசாங்கம் அறிவிக்கும் என்கிறார் பந்துல
பாடசாலை மாணவர்கள் அனைவரும் சுவாசக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டுமென சுகாதார அமைச்சோ, கல்வியமைச்சோ அறிவுறுத்தவில்லை.
தேவையாயின் அரசாங்கமே உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். ஆகவே, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்ய வேண்டிய தேவை தற்போது கிடையாது. பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாமென தகவல் மற்றும் தொடர்பாடல் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றினை ஒரு தரப்பினர் தங்களின் சுயதேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றார்கள். மூக்குப் பகுதியை மறைக்கும் வகையிலான மாஸ்க் அணியுறைகளுக்கான தட்டுப்பாடு தற்போது ஏறபட்டுள்ளது. அரசாங்கம் இதனை இலவசமாக வழங்க வேண்டுமென எதிர்த்தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். மக்களுக்கு மாஸ்க் முகமூடியினை இலவசமாக வழங்குவது ஒன்றும் அரசாங்கத்திற்கு இயலாத காரியமல்ல. மக்கள் அனைவரும் இதனை பாவிக்க வேண்டுமென்ற தேவை தற்போது கிடையாது.
பாடசாலைகளில் இந்நோய் தொற்று அதிகமாக பரவும் என்று வெளியான போலியான செய்தியை கேட்டு பெற்றோர் பீதியடைந்துள்ளார்கள். பெற்றோரின் நிலைமையினை எம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் உண்மைத் தன்மையினையும் அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்றுநோய் தாக்கத்திற்கு இலங்கை பிரஜைகள் எவரும் உள்ளாகவில்லை. ஒரு சீன நாட்டுப் பெண்மணி மாத்திரமே வைரஸ் தொற்றுக்குள்ளாகி முழுமையான சிகிச்சை பெற்று பாதுகாப்பான முறையில் வைத்தியசாலையில் உள்ளார். அத்துடன் சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கமைய அனைத்து செயற்றிட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் தீவிரமான பாதுகாப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலை மாணவர்கள் அனைவரும் மூக்குப் பகுதியை மறைக்கும் விதத்தில் மாஸ்க் அணிய வேண்டுமென்று சுகாதார அமைச்சோ, கல்வி அமைச்சோ குறிப்பிடவில்லை. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும், தற்போது இடம்பெறும் பாடசாலை விளையாட்டு போட்டிகளையோ இடை நிறுத்த வேண்டிய தேவை கிடையாது. பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமென சுகாதார அமைச்சு குறிப்பிட்டால் அதனை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதுடன் மாஸ்க் இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.
கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்த
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அனைத்து பாடசாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொது விடயங்களை முறையாக பின்பற்றுவது அவசியமாகும்.
பாடசாலையில் மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் சுகயீனமடைந்திருந்தால் துரிதமாக வைத்தியசாலையில் அவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம்.
கிரிபத்கொட பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 12ஆம் தர மாணவி ஒருவர் ஆசிரியரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள அக்கல்வி வலயத்தில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களை எல்லைமீறித் தண்டிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்றார்.-Vidivelli