உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த னப்[நபருக்கு மீண்டும் விளக்கமறியல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை மீண்டும் மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது சந்தேக நபரை மீண்டும் எதிர்வரும் மே 6 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
விசாரணையின் போது மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்தே மீண்டும் சந்தேகநபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம் கைதான குறித்த சந்தேக நபர் அண்மையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இருந்த போதிலும் தற்போது மீண்டும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.-Vidivelli
- பாறுக் ஷிஹான்