கொரோனா வைரஸ் பரவல்: நாட்டில் பொது மக்கள் அச்சமடைய வேண்டாம்
சகலரும் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை
சீனாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் எந்தவொரு தகவலையும் நம்ப வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார். குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சீனப் பெண் தற்போது தேறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொது மக்களை முகக்கவசம் அணியுமாறு தாம் இதுவரை அறிவுறுத்தவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தொற்று நோயாளர்களையும் அவர்களோடு தொடர்புபடும் வைத்தியசாலை அதிகாரிகளையுமே முகக்கவசம் அணியுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா வைரஸ் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து கேட்டபோதே அவர் ‘விடிவெள்ளி‘க்கு இவ்வாறு தெரிவித்தார்.
குரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஏராளமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை மக்கள் நம்பி அச்சமடையவோ பதற்றமடையவோ தேவையில்லை. சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தகவல்கள் நாட்டிலுள்ள பிரதான ஊடகங்களுக்கு வழங்கப்படும். அந்த வழிகாட்டல்களை மாத்திரம் மக்கள் பின்பற்றினால் போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் அறிக்கை
இதேவேளை நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகிய நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை எனவும் இது பொய் பிரசாரம் எனவும் அரசாங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
கொழும்பு உலக வர்த்தக மத்திய நிலையத்தில் நபரொருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டபோது புகைப்படமெடுத்து சிலர் ஊடகங்களில் செய்தியாக பிரசுரித்திருப்பதும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருப்பதும் பொய்யான, தவறான பிரசாரமாகும். அந்தச் செய்தியில் குறிப்பிட்ட நபர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குட்பட்டவர் என தவறாக பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்கும் வகையில் பரப்பப்பட்டு வருகின்றமை தொடர்பில் அரசின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பொய் பிரசாரங்களுக்கு ஏமாற்றமடைய வேண்டாம் என அரசாங்கம் பொது மக்களைக் கேட்டுக்கொள்கின்றது. வைரஸ் தாக்கத்துக்குட்பட்ட எவராவது ஒருவர், எந்தப் பிரதேசத்திலும் இனங்காணப்பட்டால் அது தொடர்பான விபரங்கள் பொது மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன பெண் தேறி வருகிறார்
இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபராக சீன சுற்றுலா பயணி ஒருவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அதன்படி, குறித்த பெண்ணின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசித்த அத்தநாயக்க கூறினார். குறித்த சீன பெண் அடுத்து வரும் இரு நாட்களுக்குள் பூரண குணமடைவதற்கான அறிகுறிகள் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் ஒருவர் கூறினார். எவ்வாறாயினும் குறித்த பெண்ணிடமிருந்து வேறு எவருக்கேனும் அந்த வைரஸ் தொற்றியுள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான சந்தேகத்தின் பேரில், நேற்று முன் தினம் மாலை வரை ஐ.டி.எச். காய்ச்சல் வைத்தியசாலை என அறியப்படும் அங்கொட தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் மட்டும் 23 பேர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 11 பேர் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாகவும் தற்போது 12 பேருக்கு அங்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறினார். அவ்வாறு சிகிச்சை பெறும் 12 பேரில் 7 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் பரவும் வாய்ப்பு குறைவு
எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாக உள்ளதாக சார்ஸ் எனும் சுவாச ஆட்கொல்லி வைரஸ் தொற்றினை கண்டுபிடித்த இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளமை று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறினார். அவ்வாறு சிகிச்சை பெறும் 12 பேரில் 7 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் பரவும் வாய்ப்பு குறைவு எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாக உள்ளதாக சார்ஸ் எனும் சுவாச ஆட்கொல்லி வைரஸ் தொற்றினை கண்டுபிடித்த இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல் எம்.எப்.எம். பஸீர்