சீனாவிலிருந்து பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த வைரஸ் காரணமாக ஆசிய நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று மாலை வரை 56 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனாவின் வூஹான் மாநிலத்திலேயே ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம் மாகாணத்தின் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டு மக்கள் அங்கு நுழைவதும் வெளியேறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அந்த மாகாணத்தில் வாழும் வெளிநாட்டவர்களை வெளியேற்றி தமது நாடுகளுக்கு அனுப்புமாறு குறித்த நாடுகள் சீனாவிடம் கோரியுள்ளன. குறிப்பாக அமெரிக்கர்களை அழைத்துவர பல விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று வூஹான் மாநிலத்தில் உள்ள 32 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக இலங்கையில் இருந்து விசேட விமானம் ஒன்றை அந்த மாநிலத்துக்கு அனுப்ப சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வைரஸ் இலங்கையிலும் பரவலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் சுகாதாரத் துறை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் 22 பேர் கொண்ட தேசிய செயற்குழுவொன்று சுகாதார அமைச்சினால் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் உணவு குறித்து தீவிர பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரும் விமான பயணிகளை விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 4 ஸ்கேனர் இயந்திரங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன
எப்படியிருப்பினும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டு மக்களை அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காய்ச்சல், இருமல், தடிமல், சுவாசிப்பதில் சிரமம், இயற்கை கழிவு நீராக வெளியேறுதல், தலைவலி, தொண்டையில் வலி, உடம்பு வலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.
இவை ஏற்படும் பட்சத்தில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த புதிய கொரோனா வைரஸினால் பாதிப்பு ஏற்பட்டால் நிமோனியா காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட மோசமான நிலைமை ஏற்படக்கூடும்.
கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் அல்லது விசக்கிருமிகளை அழிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துதல், இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டையை பயன்படுத்துதல், பயன்படுத்திய ரிசுவை உரிய கழிவு தொட்டியில் போடுதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கொழும்பில் சன நெரிசலுள்ள பகுதிகளில் நடமாடுவோரை முக பாதுகாப்பு கவசத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் இந்த கொடிய வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது பொது மக்களது பொறுப்பாகும். இது விடயத்தில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கை உட்பட உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பு பெற பிரார்த்திப்போமாக.-Vidivelli