முஸ்லிம்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும்

0 1,042

இலங்கை முஸ்­லிம்­களின் வாழ்வும் அர­சி­யலும் இந்த நாட்டின் வர­லாற்றில் முன் எப்போதும் இல்­லா­த­வாறு இப்­போது பெரும் பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ளன. அவர்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம், தொழில் வாய்ப்­புகள், பொரு­ளா­தார முன்­னேற்றம், மத வழி­பாடு, கல்வி அபி­வி­ருத்தி, சமூகப் பண்­பா­டு­களும் கலா­சா­ரமும் என்ற இன்­னோ­ரன்ன துறை­க­ளி­லெல்லாம் பாரிய பிரச்­சி­னைகள் பெரு­கிக்­கொண்டு போகின்­ற­ன­வே­யன்றி குறை­வ­தாகத் தெரி­ய­வில்லை.

முஸ்லிம் தலை­மைத்­து­வமோ இப்­பி­ரச்­சி­னை­க­ளைப்­பற்றி பொது மேடை­க­ளிலே ஒப்­பாரி வைக்­கி­றதேயன்றி இவற்­றிற்கு என்ன பரி­காரம் என்­ப­தைப்­பற்றி உருப்­ப­டி­யான சிந்­த­னை­க­ளையோ திட்­டங்­க­ளையோ இது­வரை முன்­வைத்­த­தாகத் தெரி­ய­வில்லை. அவர்கள் சொல்­வதை எல்லாம் கூட்­டிக்­க­ழித்­துப் ­பார்த்தால் ஒன்­றே­யொன்று புலப்­ப­டு­கின்­றது. அதா­வது, எங்­களை எப்­ப­டி­யா­வது நாடா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­புங்கள், நாங்கள் உங்­களின் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டுவோம் என்­ப­தாகும். அவ்­வாறு அவர்­களை அனுப்­பி­னாலும், அவர்கள் போரா­டப்­போகும் உரி­மைகள் எவை என்­ப­தை­யா­வது பட்­டி­ய­லிட்டு இது­வரை பகி­ரங்­கமாக கூறி­யி­ருக்­கி­றார்­களா? அல்­லது, இது­வரை அவர்கள் சமூ­கத்­துக்­காகச் சாதித்­த­தென்ன என்­ப­தை­யா­வது வெளி­யி­டு­வார்­களா? இன்­று­வரை ஏமாற்­றி­ய­வர்கள் நாளையும் ஏமாற்­ற­மாட்­டார்கள் என்­ப­தற்கு என்ன உறுதி? எனினும், ஏமா­று­ப­வர்கள் இருக்­கும்­வரை ஏமாற்­று­ப­வர்­களும் இருக்­கத்தான் செய்­வார்கள். இந்த ஆஷா­ட­பூ­தி­களை நம்பி முஸ்­லிம்கள் இன்னும் காலங்­க­டத்த வேண்­டுமா?

மேற்­கூ­றி­ய­வற்றைப் பின்­பு­ல­மா­கக்­கொண்டு இக்­கட்­டுரை முஸ்­லிம்­களை அண்­மிக்கும் இன்­னு­மொரு பேரா­பத்­தைப்­பற்றி விப­ரிக்க முனை­கின்­றது. இது முஸ்­லிம்­களை மட்­டு­மல்ல, தமி­ழி­னத்­தையும் எதிர்­நோக்­கி­யுள்­ளது. 1950களி­லி­ருந்து அர­சி­ய­லுக்குள் புகுந்த பௌத்தம் படிப்­ப­டி­யாக அர­சி­ய­லா­திக்கம் பெற்று 2009இல் உள்நாட்டுப் போர் முடி­வுற்­ற­துடன் ஓரு பேரா­திக்க வெறி­யாக வளர்ந்து வரு­கின்­றது. ஆதிக்­கத்­துக்கும் பேரா­திக்­கத்­துக்கும் இடை­யே­யுள்ள வேறு­பாட்டை உணர முடி­யு­மானால் முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் எதிர்­நோக்கும் பேரா­பத்தை அறிந்து கொள்­ளலாம்.

இலங்கை பல்­லி­ன­மக்கள் வாழும் ஒரு வள­முள்ள நாடு. அந்த பல்­லினக் கல­வைக்குள் பௌத்­தர்கள் பெரும்­பான்­மை­யினர். அதே பௌத்த பெரும்­பான்­மைக்குள் அடங்கி இருப்­ப­வர்கள் நூற்­றுக்குத் தொண்­ணூற்­றொன்­பது வீதத்­தினர் சிங்­கள இனத்­தவர். இந்த யதார்த்­தத்தை மற்ற எல்லா இனங்­களும் ஏற்­றுக்­கொள்­கின்­றன. ஆகவே, அர­சி­ய­ல­டிப்­ப­டையில் பெரும்­பான்மைப் பலத்தைக் கொண்டு பௌத்­தர்­களால் தமது மதத்­துக்கும், கலா­சா­ரத்­துக்கும், இனத்­துக்கும் அதிக நன்­மை­களைப் பெறு­வதைத் தவிர்க்க முடி­யாது. மக்­களின் பிர­தி­நி­தி­களைக் கொண்ட ஒரு ஜன­நா­யக ஆட்­சி­மு­றையில் எந்தக் கட்சி ஆட்­சிக்கு வந்­தாலும் அது பௌத்த ஆதிக்­கத்தைப் பாதிக்கப் போவ­தில்லை. மதச்­சார்­பற்ற இட­து­சா­ரி­களே அர­சாங்கம் அமைத்­தா­லுங்­கூட பௌத்­தத்தின் அர­சியல் செல்­வாக்­கினை தடுக்க முடி­யாது. சிங்­கள மொழி உத்­தி­யோ­க­பூர்வ மொழியாய் இருப்­பதும், யாப்­பிலே பௌத்தம் முதன்மை இடத்தை பெற்­றி­ருப்­பதும் இப்­ப­லத்­தி­னா­லேயே. ஓர் இட­து­சாரி அமைச்­சர்தான் அவர் வரைந்த யாப்­பிலே பௌத்­தத்­துக்கு முதன்மை இடத்தை வழங்­கினார் என்­பது இதனை உறு­திப்­ப­டுத்­த­வில்­லையா?

இருந்தும் இன்று பூதா­க­ரமாக வளர்ந்­து­வ­ருதோ வேறொன்று. பௌத்த பெரும்­பான்­மையை அடித்­த­ள­மா­கக்­கொண்டு பௌத்த பேரா­திக்­க­வாதம் தலை­தூக்­கி­யுள்­ளது. இது பேரா­பத்­தான ஒரு விளைவு. இப்­பே­ரா­திக்­கத்தை உரு­வாக்க வேண்­டு­மென முயற்­சிப்­போரின் நோக்கில் இலங்­கையில் பௌத்­தமே ஒரே மதம், பௌத்த சிங்­க­ள­வர்­களே ஒரே இனம், அவர்­களின் மொழியே ஒரே மொழி, அவர்­களின் சட்­டமே ஒரே சட்டம் என்ற நிலைப்­பாடு வேரூன்­றி­யுள்­ளது. சுருக்­க­மாகக் கூறினால் பேரா­திக்­க­வா­தி­களின் கருத்தில் பௌத்த சிங்­க­ள­வர்­களே இந்­நாட்டு மன்­னர்கள். அவ்­வா­றாயின் சிறு­பான்­மை­யினர் கதி? அவர்கள் வெறு­மனே பௌத்த பெரும்­பான்­மையின் தயவில் வாழும் சாதா­ரண குடி­யா­ன­வர்கள் மட்­டுமே. வேறு­வி­த­மாகக் கூறின், வீட்­டுக்குச் சொந்­தக்­காரர் பௌத்த சிங்­க­ள­வர்கள், அதிலே வாட­கைக்குக் குடி­யி­ருப்­ப­வர்கள் சிறு­பான்மை இனத்­தவர். அவர்கள் கொடுக்கும் வாடகை பெரும்­பான்­மை­யி­ன­ருக்குக் குற்­றேவல் புரி­வது.

இக்­கொள்­கை­களின் தொனியை வெளிப்­ப­டை­யா­கவே பேரா­திக்­க­வாதி ஞான­சார தேரர் கடந்த வருடம் கண்டி மாந­கரில் நடை­பெற்ற ஒரு பொதுக் கூட்­டத்தில் நூற்­றுக்­க­ணக்­கான அவ­ரது சக­து­ற­வி­களின் மத்­தியில் மீட்டி வாசித்­ததை வாச­கர்கள் பத்­தி­ரி­கை­களில் படித்­தி­ருக்­கலாம். இப்­பே­ரா­திக்­க­வா­தத்தின் ஒரே நோக்கம் இந்த நாட்டை அதன் சர்வ துறை­க­ளிலும் பௌத்­த­ம­ய­மாக்­கு­கின்­ற­தாகும். இன்று நாடா­ளு­மன்­றத்­திலே முஸ்­லிம்­களின் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தினை முற்­றாக நீக்­க­வேண்­டு­மென்ற பிரே­ர­ணையை ரதன தேரர் கொண்­டு­வந்­தி­ருப்­பதும் இந்த நோக்­கத்­தி­னா­லேயே. அதிஷ்­ட­வ­ச­மாக, இவர்­களின் வலைக்குள் இந்­நாட்டின் எல்லா பௌத்த மக்­களும் சிக்­க­வில்லை. தேசப்­பற்றும், மனி­தா­பி­மா­னமும், ஜன­நா­யக வேட்­கையும், யதார்த்த சிந்­த­னையும் கொண்ட இலட்­சக்­க­ணக்­கான பௌத்த சிங்­கள மக்கள் இன்னும் இந்த நாட்டில் வாழ்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளையும் தம்­வ­லைக்குள் சிக்­க­வைக்க பேரா­திக்­க­வா­திகள் துடியாய்த் துடிக்­கின்­றனர்.

இப்­பே­ரா­திக்­க­வா­தி­களின் கனவு நன­வா­குமா? நன­வா­கக்­கூ­டிய ஒரு சந்­தர்ப்பம் இப்­போது உரு­வா­கி­யுள்­ளது. இதை முஸ்­லிம்கள் உணர்ந்து அதற்­கேற்ப செயற்­படல் வேண்டும். அதற்கு முன்னர் இன்­னொரு உண்­மை­யையும் விளங்கிக் கொள்­ள­வேண்டும்.

நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜ­பக் ஷ அடைந்த வெற்றி பேரா­திக்­க­வா­தி­களின் வெற்றி என்­பதை அத்­தேர்­தலை நுணுக்­க­மாக ஆராய்ந்­த­வ­ரெ­வரும் மறுக்க முடி­யாது. ஐம்­பத்­தி­ரண்டு சத­வீத வாக்­கு­க­ளைப்­பெற்று அமோக வெற்­றியை அவர் ஈட்­டி­ய­போதும், அந்த வாக்­குளில் மிகப் பெரும்­பான்­மை­யா­னவை சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளா­யினும், அந்த வாக்­கு­களைத் திரட்டிக் கொடுத்­த­வர்கள் பௌத்த பேரா­திக்­க­வா­தி­களே. தான் சிங்­கள மக்­களின் வாக்­கு­களைக் கொண்­டுதான் வெற்­றி­பெற்றேன் என கோத்­தா­பய கூறி­னாலும் அந்தக் கூற்­றுக்குள் ஒளிந்து கொண்­டி­ருப்­பது பேரா­திக்­க­வா­தி­களின் ஆத­ரவு என்­பதை அவரால் மறுக்க முடி­யுமா?

இப்­பே­ரா­திக்­க­வா­திகள் உண்­மை­யி­லேயே ஒரு சிறு­பான்­மை­யினர். ஆனால் அவர்கள் செல்­வமும் செல்­வாக்கும் நிறைந்த அதி­கா­ர­ப­ல­முள்ள ஒரு சிறு­பான்­மை­யினர். அவர்­களின் வலைக்­குள்­ளேயே ஜனா­தி­பதி கோத்­தா­பய இன்று சிக்­கி­யுள்ளார். எவ்­வாறு அன்­றைய பிர­தமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்­டா­ர­நா­யகா, சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் வலைக்குள் சிக்­கி­னாரோ அதே­போன்று இன்­றைய ஜனா­தி­பதி பௌத்த பேரா­திக்­க­வா­தி­களின் வலைக்குள் சிக்­கி­யுள்ளார்.

அந்த பிர­த­மரோ ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழக மாணவர், ஆங்­கில மொழியில் அழ­குற விவா­தித்துக் கேட்­போரைக் கவரும் வல்­ல­மை­யுள்­ளவர். சம­வு­டமைக் கருத்­துக்­களில் ஈர்ப்­பு­டை­யவர். இருந்தும் அர­சியல் அதி­கார வேட்கை அவரை இன­வா­தி­களின் பிடிக்குள் தள்­ளி­விட்­டது. இன்­றைய ஜனா­தி­ப­தியும் அமெ­ரிக்­காவில் வாழ்ந்­தவர். அந்­நாட்டின் ஜன­நா­ய­கத்தை நேரிலே கண்டு, அதன் நலன்­க­ளையும் அனு­ப­வித்து, அங்கு எவ்­வாறு சகல இனங்­களும் சௌஜன்­ய­மாகக் கலந்­து­ற­வா­டு­கின்­றன என்­ப­தையும் அறிந்­தவர். இரா­ணுவத் தேர்ச்­சி­பெற்று அதன் ஒழுங்கு முறை­களை வாழ்­விலும் கடைப்­பி­டிப்­பவர். படா­டோ­பங்­களைக் களைந்­தெ­றிந்து எளி­மை­யான வாழ்வில் நாட்­ட­முள்­ளவர். தேசமும் தேச­மக்­களும் செழிக்க வேண்­டு­மென்ற அவா­வு­டை­யவர். ஒரு சிறந்த பௌத்தர். அவரோ அவரின் சகோ­தரர் மகிந்­தவோ அல்­லது அவரின் ஏனைய சகோ­த­ரர்­களோ தனிப்­பட்­ட­மு­றையில் இன­வா­தி­க­ளல்லர். இருந்தும் அர­சியல் அதி­கார வேட்கை அவ­ரையும் உற­வி­னர்­க­ளையும் பௌத்த பேரா­திக்­க­வா­தி­களின் வலைக்குள் சிக்­க­வைத்­துள்­ளது. அன்­றைய பிர­த­ம­ருக்கு நடந்­த­கதி இன்­றைய ஜனா­தி­ப­திக்கு நடக்­கக்­கூ­டா­தென அனை­வரும் விரும்­பிப்­பி­ரார்த்­திப்­ப­துடன், அவரை அவ்­வ­லைக்­குள்­ளி­ருந்து விடு­விக்­கவும் யாவரும் பாடு­படல் வேண்டும். எவ்­வாறு?

பேரா­திக்­க­வா­தி­களின் எண்­ணங்­களும் திட்­டங்­களும் நிறை­வேற வேண்­டு­மானால் அவர்­க­ளுக்கு முக்­கி­ய­மாகத் தேவைப்­ப­டு­வது சகல அதி­கா­ரங்­களும் கொண்ட ஒரு ஜனா­தி­பதி ஆட்­சி­முறை. ஓர் அர­சாங்­கத்தின் பல மந்­தி­ரி­களை ஆட்­டு­விப்­ப­தை­விட தனி­யொரு ஜனா­தி­ப­தியை ஆட்­டு­விப்­பது இலே­சல்­லவா? ஆனால், அந்த அதி­கா­ரங்­களை அர­சியல் யாப்பின் 19ஆம் திருத்தம் குறைத்து பிர­த­மரின் அதி­கா­ரங்­களைக் கூட்­டி­யுள்­ளது. ஒரு கட்­சியின் அடிப்­ப­டையில் பிர­தமர் தெரிவு செய்­யப்­ப­டு­வதால் அக்­கட்­சியின் தில்­லு­முல்­லு­களைத் தாண்டி ஒரு பிர­த­மரால் கரு­ம­மாற்ற முடி­யா­தென அறிந்த பேரா­திக்­க­வா­திகள் அந்தத் திருத்­தத்தை நீக்கி மீண்டும் ஜனா­தி­ப­தியின் கைகளில் அதி­கா­ரங்­களைக் குவிக்­க­வேண்­டு­மென விரும்­பு­கின்­றனர். அவ்­வா­றான யாப்­பு­மாற்றம் செய்யும் மசோ­தா­வுக்கு மூன்­றி­லி­ரண்டு வாக்­குகள் நாடா­ளு­மன்­றத்தில் கிடைக்­க­வேண்டும். நடை­மு­றை­யி­லி­ருக்கும் இன்­றைய நாடா­ளு­மன்­றத்தில் அந்த வாக்குப் பல­மில்லை. இத­னா­லேதான் எதிர்­வரும் தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷவின் பொது­ஜன முன்­னணி மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஆச­னங்­களைக் கவ­ர­வேண்­டு­மென்று பேரா­திக்­க­வா­திகள் விரும்­பு­கின்­றனர். அந்த விருப்­பினை ஜனா­தி­ப­தியும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அவர்­களின் விருப்­பப்­படி தேர்தல் முடி­வுகள் இடம்­பெ­று­மானால் கோத்­தா­பய ராஜ­பக் ஷ சர்வ அதி­கா­ரங்­களும் நிறைந்த ஜனா­தி­ப­தி­யாக மாறு­வ­துடன் பேரா­திக்­க­வா­தி­களின் கைப்­பொம்­மை­யா­கவும் மாறுவார். அதற்கு அவர் தயாரா? அவர் தாயா­ரென்­றாலும் இப்­போ­துள்ள அதி­கா­ரங்­களை இழந்து அவற்றை தன் இளைய சகோ­த­ர­ருக்குத் தாரை­வார்த்­துக்­கொ­டுக்க மஹிந்த விரும்­பு­வாரா? ஏற்­க­னவே நடை­மு­றைப்­ப­டுத்­த­பட்ட கோத்­தா­ப­யவின் பல செல­வுச்­சிக்­கன நட­வ­டிக்­கைகள் பிர­த­ம­ரதும் அமைச்­சர்­க­ளி­னதும் படா­டோப வைப­வங்­க­ளுக்கும் நிகழ்­வு­க­ளுக்கும் கட்­டுப்­பாடு விதித்­தள்­ளது. ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் வலு­வ­டைந்தால் இன்னும் என்­னென்ன கட்­டுப்­பா­டுகள் இடம்­பெ­றுமோ? இவை­களால் சகோதரர் உறவும், குடும்ப உறவும் தளர்வடையுமா?

எல்லாவற்றிற்கும் மேலாக எவ்வளவு தூரம் ஜனாதிபதியினால் பேராதிக்கவாதிகளின் தாளத்துக்கு ஆடமுடியும்? பேராதிக்கத்துக்கெதிராக உள்நாட்டில் எழும்பும் எதிர்ப்புகளை பாதுகாப்புத்துறையினால் அடக்க முடியுமெனினும் சர்வதேச எதிர்ப்புகளையும் நெருக்குதல்களையும் எவ்வாறு சமாளிப்பது? அவற்றின் பொருளாதாரத் தாக்கங்களை எவ்வாறு எதிர்கொள்வது? ஆகவே பேராதிக்கவாதிகளின் கோரிக்கைள் எல்லை மீறும்போது அவரால் தொடர்ந்தும் தலையசைக்க முடியுமா? அவ்வாறு மறுக்கும்போது ஜனாதிபதியின் கதி? பண்டாரநாயகாவின் அரசியல் வாழ்வு கற்பித்த பாடங்களை அவர் மறந்திருக்கமாட்டார். எனவே ஜனாதிபதியை பேராதிக்கவாதிகளின் வலைக்குள்ளிருந்து விடுவிக்கவேண்டும். அதற்கு ஒரே வழி எதிர்வரும் தேர்தலில் பொதுஜன முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி கிடைக்காமல் செய்வதே.

இன்று எதிர்க்கட்சிக்குள் நடை பெறும் சண்டைகளும் போட்டியும், சிறுபான்மை இனங்களுக்குள் நடைபெறும் தலைமைத்துவப் போட்டிகளும் கூட்டணித் தந்திரங்களும் மஹிந்தவின் கட்சி வெற்றிபெறுவதற்கு வழிவகுத் துள்ளன. ஆனால் அந்த வெற்றியின் அளவைச் சிறுபான்மையினரால் கட்டுப்படுத்தலாம்.

இந்த அடிப்படையிலேயே முஸ்லிம் வாக்காளர்கள் செயற்படவேண்டும். இதனையே தமிழினமும் உணரவேண்டும். உணர்வார்களா?-Vidivelli

  • கலாநிதி அமீர் அலி,
    மேர்டொக் பல்கலைக்கழகம்,
    மேற்கு அவுஸ்திரேலியா

Leave A Reply

Your email address will not be published.