சவூதி அரேபியா அஸீஸியாவில் இருக்கும் சிலோன் ஹவுஸ் (இலங்கை இல்லம்) இலங்கை முஸ்லிம்களின் சொத்தாகும். சவூதி அரேபிய நீதிமன்றில் நடைபெற்ற நஷ்டஈடு வழக்கில் இலங்கை தூதரகம் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. தனி நபர் ஒருவரே தனித்து செயற்பட்டார் என இலங்கையின் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதர் இப்றாஹிம் அன்சார் தெரிவித்தார்.
சிலோன் ஹவுஸ் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
முன்னாள் தூதர் இப்றாஹிம் அன்சார் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘சிலோன் ஹவுஸ் தொடர்பாக விமர்சிக்கப்பட்டு வருவதால் இலங்கையின் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு விசாரணைக் குழுவொன்றினை நியமித்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.
2002 ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலப் பகுதியில் பதவியிலிருந்த இலங்கையின் சவூதி அரேபியாவுக்கான தூதர்கள் கொன்சியூலர் ஜெனரல்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
சிலோன் ஹவுஸ் தொடர்பான விபரங்கள் அடங்கிய கோவைகள் வெளிநாட்டமைச்சிலும் ரியாதிலுள்ள இலங்கை தூதராலயம் மற்றும் ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் ஜெனரல் காரியாலயத்திலும் இருக்கின்றன. இது தொடர்பாக நானறிந்த தகவல்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன்.
மக்கா விரிவாக்கலின்போது அகற்றப்பட்ட 3 மாடிகளைக் கொண்ட சிலோன் ஹவுஸுக்கு நஷ்டஈடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தமை பற்றியும் ஆராயப்பட வேண்டும என்றார்.
முன்னாள் கொன்சியுலர்
ஜெனரல் எம். இனாமுல்லாஹ் சவூதி அரேபியாவின் முன்னாள் கொன்சியுலர் ஜெனரல் எம். இனாமுல்லாஹ் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
‘சிலோன் ஹவுஸுக்கு நம்பிக்கையாளர் சபையொன்றினை உருவாக்கி அச்சபை மூலம் உத்தியோகபூர்வமாக காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். இது தொடர்பில் கடிதப் பரிமாறல்கள் அரசாங்கம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடாக சவூதி அரசுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சவூதி– இலங்கை சட்ட திட்டங்களுக்கு அமைய பொறிமுறையொன்றின் கீழ் சிலோன் ஹவுஸின் புதிய காப்பாளராக சவூதி அரேபிய குடியுரிமை பெற்றுள்ள சாதிக் ஹாஜியாரையோ சவூதி அரேபிய குடியுரிமை பெற்றுள்ள வேறொரு இலங்கையரையோ கொன்சியுலர் ஜெனரல் காரியாலய அல்லது கலாசார உத்தியோகத்தர் ஒருவரையோ நியமிப்பது குறித்து முறையாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்