பசுக்களை இறைச்சிக்காக கொலை செய்வதை நிறுத்த இந்து மற்றும் பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் அழைப்பு
தைப்பொங்கல் பண்டிகையின் கருப்பொருளை மையமாகக் கொண்டு தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தமிழ் – சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர், பசுக்களை கொல்வதற்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட இந்து பௌத்த மக்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
சூரிய நமஸ்காரம் என்பது பண்டைய காலத்திலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது. இந்திய கலாசாரத்திற்கமைய சூரிய பகவானுக்கு நன்றிசெலுத்தும் நிகழ்வானது இன்றியமையாத ஒன்றாகும். அந்தவகையில், இந்து -– பௌத்த வழிபாட்டு முறைகளில் சூரியன் முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் தைப்பொங்கல் தினத்தை புதுவருடமாக அனுஷ்டிக்கின்றனர். சிங்கள புதுவருடம் போன்றதொரு தினத்தையே தமிழ் மக்களும் தைப்பொங்கல் தினத்தில் கொண்டாடுகின்றனர். அதேபோன்று சில நாட்களுக்கு இந்தப் பண்டிகை நீடிக்கும். அதன்போது உழவுத்தொழிலுக்கு கைகொடுக்கின்றமைக்கு நன்றிகூறும் வகையில் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் பசுக்கள் கொல்லப்படுகின்றமை மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும். இவ்வாறாக பசுக்களை கொல்வது மரணதண்டனைக்கு நிகரான குற்றமாகும். ஆகவே, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிருகவதை எதிர்ப்பு சட்டத்திற்கமைய இவ்வாறு பசுக்களை இறச்சிக்காக கொலை செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்தேன்.
ஆயினும் எந்த அரசாங்கமும் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. ஆகவே, இந்து –- பௌத்த மக்கள் ஒன்றிணைந்து பசுக்களை கொலை செய்வதை நிறுத்துவதற்கு நடவடிக்கைளை எடுக்கவேண்டும். இந்துக்கள் பசுக்களை கடவுளாக வழிபடுகின்றனர்.
ஆகவே, அந்தக் கலாசாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது முறையற்ற விடயமாகும். அத்துடன், மற்றைய மதத்தவரின் கலாசாரத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு மதிக்க கற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்துக்கள் கடவுளாக வழிபடும் பசுக்ளை கொலை செய்யும் நடவடிக்கையை முற்றிலுமாக நிறுத்தக் கூடியதாகவிருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.-Vidivelli