மிலேனியம் செலன்ஞ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால்: ஈராக்குக்கு ஏற்பட்டிருக்கும் நிலையே எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஏற்படும்
இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டால் ஈராக்குக்கு ஏற்பட்டிருக்கும் நிலையே எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஏற்படும். அதனால் அமெரிக்காவுடன் செய்துகொள்ளவிருக்கும் ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கம் விரைவாகத் தீர்மானமொன்றை எடுக்கவேண்டுமென ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிஷ மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் அமெரிக்காவுக்கு தெரிவித்திருக்கின்றது. அமெரிக்காவுக்கு துணைபோகும் அரசாங்கமே ஈராக்கில் இருந்துவருகின்றது. என்றாலும் தற்போது அங்கு இடம்பெற்றிருக்கும் முறுகல் நிலை காரணமாகவே அந்நாட்டு பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி அதற்கு மறுப்புத் தெரிவித்து, தற்போதுள்ள நிலைமையில் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தை திருப்பி அழைக்க முடியாதெனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த மறுப்பு அறிவிப்பானது ஈராக்கின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும். அத்துடன் ஈராக்கின் அதிகாரம் டொனால்ட் ட்ரம்பின் பாதணிகளுக்கு கீழ் இருப்பதுபோலவே அவரின் கூற்று அமைந்திருக்கின்றது. ஈராக்கில் எந்த ராணுவம் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது ஈராக்கா அல்லது அமெரிக்க ஜனாதிபதியா?.
அதனால்தான் மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் போன்ற உடன்படிக்
கைகள் தொடர்பாக நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம். எம்.சீ.சீ. ஒப்பந்தமோ அல்லது வேறு எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அதனூடாக அமெரிக்க ராணுவத்துக்கு இந்நாட்டில் தற்காலிகமாகவேனும் தங்குவதற்கு இடமளித்தால், அது பாரிய அச்சறுத்தலாகும். தற்போது ஈராக்கில் இடம்பெறும் விடயங்களில் இருந்து அதனை நல்லமுறையில் உணர்ந்துகொள்ளலாம். அதனால் எந்த நாட்டு சர்வதேச ராணுவத்துக்கும் எமது நாட்டில் தற்காலிகமாக ஒரு அடியையேனும் வைப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதிலும் உலக நாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா ஏனைய நாட்டு அரசாங்கங்களில் தலையிடும் மிகவும் மோசமான அரச பலத்தை கொண்டிருக்கின்றது. உலக அமைதியை இல்லாமலாக்கி, யுத்தமொன்றுக்கு அடித்தளமிடும் அவ்வாறான அரசாங்கம் ஒன்றின் ராணுவத்துக்கு எமது எல்லைக்குகூட வருவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
அத்துடன், இவ்வாறான நிலையில் அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்போவதாக தெரிவிக்கும் எம்.சீ.சீ. ஒப்பந்தம் தொடர்பாகவும் விரைவாகத் தீர்மானமொன்றை எடுக்குமென மக்கள்
எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இல்லாவிட்டால் தற்போது ஈராக்குக்கு ஏற்பட்டிருக்கும் நிலையே எதிர்காலத்தில் எமக்கு ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் விடுக்க விரும்புகின்றேன் என்றார்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்