இளம் பராயத்தினரான சிறுவர்கள் ஒரு குடும்பத்தினுடைய ஏன்? சமூகத்தினுடைய வருங்கால சொத்துக்களாகும். அவர்களை உரிய காலத்தில் சமூகமயமாக்கலுக்கு ஏற்றவாறு வழிகாட்டி, ஒளியூட்டி சமைத்தெடுப்பது பெற்றோரின் பொறுப்பு வாய்ந்த கடமையாகும்.
குறிப்பாக, முஸ்லிம் சமூகம் முதற்கட்டமாக இறைவேதமான புனித அல்குர்ஆனை கற்றுக்கொள்வதிலும் அதனோடு இணைந்த சூறாக்கள், துஆக்களை படிப்பதிலும் பாடமாக்குவதிலும் தமது குழந்தைகளை ஈடுபடுத்துவது வழக்கமாகும். தற்போது மக்தப் என்ற அமைப்பின் மூலம் மிகவும் அழகாகத் திட்டமிட்டு தூரநோக்கோடு நடத்தப்படுவது வரவேற்கத்த விடயமாகும்.
இவ்வாறு தமது பிள்ளைகள் விடயத்தில் கரிசனை காட்டும் பெற்றோர் தமது குழந்தைகளை பள்ளிவாசல்களுக்கு அழைத்துச்சென்று தாம் செய்யக்கூடிய அமல்களின்பக்கம் பயிற்றுவிப்பதை நடைமுறைகளில் காணமுடிகின்றது.
சில பிள்ளைகள் தகப்பன் இல்லாதவர்கள். இவர்களும் தாய்மார்களின் தூண்டுதலால் பள்ளிவாசல்களுக்கு வந்துபோகின்றார்கள். தமக்குத் தெரிந்த முறையில் வுழூச் செய்து, வந்த வேகத்தில் கைகட்டி குனிந்து நிமிர்ந்து பெரியவர்கள் தொழுவது போல் தொழுதுவிட்டு அவசரமாக ஓடி விடுவார்கள்.
வேறு சில பிள்ளைகள் பருவமடையாப் பாலகர்கள். பெற்றோரை அடம்பிடித்து பள்ளிக்கு வந்து தகப்பனுக்கருகில் நின்று அவர் செய்வதைப் பார்த்து இவரும் செய்வார். அங்குமிங்கும் பார்ப்பது, இரு கைகளாலும் அடிக்கடி முகத்தைத் தடவுதல், தலையைத் தடவுதல், சொரிச்சல், கொட்டாவி விடுதல் என ஏதோ செய்து விட்டு ஸலாம் கொடுப்பார்.
இப்படி சிறுபிள்ளைகள் பள்ளிவாசலுக்குள் நடந்துகொள்வது பலருக்கு வெறுப்பாகவும், வேதனையாகவும் அமைகின்றது. ஆனால் பெற்றோர் இது விடயத்தில் அலட்டிக் கொள்வதில்லை. சில பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள்.
அவர்கள் தந்தை தொழுது முடிக்கும்வரை பள்ளிக்குள் ஓடியாடி விளையாடுதல், சத்தமிடுதல், ஜன்னல், கதவுகளை மூடுதல், திறத்தல் கடகடவென அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
இச்செயல்களின் சாதக பாதகங்களை ஒவ்வொருவரும் தெரிந்து, புரிந்து நடந்து கொள்வது மிகவும் பொருத்தமாக அமையுமென்று நினைக்கிறேன்.
பிள்ளைகளின் வருகை
பொதுவாக மஸ்ஜிதிற்குள் அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது. அங்கு வருவோரும், போவோரும் அதனை அடைந்துகொள்கிறார்கள். அருளைச் சுமந்து செல்கிறார்கள். அந்த வகையிலே பெற்றோர்களும், பெரியோர்களும் பரக்கத்திற்காக தமது பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை பள்ளிவாசல்களுக்கு அழைத்து வருகின்றார்கள்.
இவ்வாறு வந்து பழகிய பிள்ளைகள் நாளடைவில் தனியாக வந்து போகவும், அமல்கள் புரியவும் ஆரம்பித்து விடுகின்றார்கள். ஏழு வயதில் தொழவேண்டும். பத்து வயதாகியும் தொழாவிட்டால் அடி கொடுத்தாவது தொழவைக்குமாறு மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்களில் தொழுகை மட்டுமல்ல கற்றல்கள், கற்றுக்கொடுத்தல், மார்க்க விளக்கங்கள், பயான்கள், ஒன்று கூடல்கள், முக்கிய நிகழ்வுகள் என பல விடயங்கள் நடைபெறுகின்றன. அவற்றை அவர்கள் அறிந்து கொள்ளவும், தமது எதிர்கால வாழ்வில் பின்பற்றி நடைமுறைப்படுத்தவும் வேண்டிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றார்கள்.
சிறுவயதில் இவ்வாறு வந்து பழகத்தவறிய சிலர் பெரியவர்களான பின்பும் பள்ளிவாசலுக்குள் வர வெட்கம், பயம் என கூச்சப்படுகிறார்கள். அதனால் முஸ்லிம்களில் ஏராளமானோர் பள்ளித் தொடர்பே இல்லாது தொழுகையில்லாமலே வாழ்கின்றார்கள். சிலர் கபுறுகளுக்கும் சென்று விட்டார்கள்.
பிள்ளைகளிடம் அன்பு காட்டுவோம்
இன்றைய சிறுவர்கள்தான் நாளைய உலகின் நாயகர்கள். வருங்காலச் செல்வங்கள் விடுகின்ற தப்புத் தவறுகளுக்காக அவர்களை விரட்டுவது பாவமான செயலாகும். பிள்ளைகளை ஏசி விரட்டக்கூடாது. சத்தமிட்டு அதட்டவும் கூடாது.
தொழுகை நேரங்குறிக்கப்பட்ட அமல். அவ்வல்தக்பீருடன் தொழுவதுதான் ஏற்றம். “நபி(ஸல்) அவர்களிடம் யாரஸூலுல்லாஹ் அமல்களில் சிறந்தது எது? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். “தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது தான்” என்று கூறினார்கள்.
ஆனால், பல பள்ளிவாசல்களில் இகாமத் சொல்லும்போது பெரியவர்கள் முன்ஸப்பில் வந்து சேருவதில்லை. சிலர் சிறிது தாமதமாகவே வந்து சேருவார்கள். அதற்கிடையில் முன்ஸப்பில் ஒருசில சிறுபிள்ளைகள் சேர்ந்து விடுவார்கள். அவர்களை தோட்பட்டையில் பிடித்து இழுத்து பின்ஸப்புக்கு தள்ளிவிடும் செயலை சிலரிடம் காணக்கூடியதாக உள்ளது.
தரம் ஒன்பது, எட்டு படிக்கும் பிள்ளைகளையும் சிலர் விரட்டுவது கவலையான விடயமாகும். அவ்வாறு விரப்பட்டவர்கள் பெரியவர்களான பின்பும் மறவாமல் அதனை நினைவு கூருவதுண்டு. இந்த நினைவுகள் பசுமரத்தாணிபோல் பிஞ்சு மனங்களில் பதிந்துவிடும். தள்ளிவிடும்போது அப்பிள்ளையின் பெற்றோர் இதைக்கண்டால் தொழுகை முடிந்ததும் பள்ளிக்குள் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும்.
ஒரு மஸ்ஜிதில் பஜ்ர் தொழுகையில் பக்குவமான பெரியவருக்குப் பக்கத்தில் முன்ஸப்பில் ஒரு சிறுவன். பெரியவர் அவனைத் தள்ளிவிட்டார். தகப்பன் தான் மகனை தனக்கருகில் வைத்திருந்தார். தொழுகை முடிய தந்தை சப்தமிட்டுப் பேசினார். பெரியவர் மெளமாகி விட்டார்.
சிறு பிள்ளைகளால் பக்குவமாகத் தொழுபவர்களுக்கு இடைஞ்சல் தான். ஆனால், ஸப்பில் நின்ற சிறுவர்களை விரட்டுவது பிழையான விடயமாகும். மாநபியின் மடியிலே மகளார் பாத்திமாவின் செல்வங்களான ஹஸன் (ரழி) ஹுஸைன் (ரழி) ஆகியோர் விளையாடி மகிழ்வார்கள். தொழும்போது சுஜூதுடைய நிலையிலும் மேலே ஏறிக்கொள்வார்கள். கடிந்து கொள்வதேயில்லை.
ஒருமுறை மகள் ஸைனபின் மகன் உஸாமா (ரழி) என்ற சிறுவன் தொழுகை நடாத்தும் போது சுஜூதுடைய நிலையில் ஏறிக் கொண்டார்கள். அவர் இறங்கும் வரை தாமதித்து பின்னரே ஸலாம் கொடுத்ததாக ஸஹாபாக்கள் மூலம் அறிய முடிகின்றது.
எனவே, சிறுவர்கள் விடயத்தில் அன்பு காட்டுவோம். அவர்களை விரட்டுவதன் விளைவு பள்ளிவாசல்கள் ஒரு தலைமுறையையே இழக்க வேண்டிவரும் என ஓர் ஆய்வுமூலம் காணக்கிடைக்கிறது.
சிறுவர்களின் பெற்றோர் அறிய வேண்டியவை
பிள்ளைகளைத் தான் அழைத்து வந்தால் தனக்கருகில் ஓரமாக வைத்து அடுத்தவர்களின் தொழுகையின் பக்குவம் குலையாத அளவுக்கு கவனித்துக்கொள்ள வேண்டும். பள்ளிவாசலில் நடந்து கொள்ளும் முறைகளை பிள்ளைகளுக்கு ஆலோசனையாகக் கூறவேண்டும். மற்றவர்களின் நச்சரிப்பிற்கு பிள்ளைகளை ஆளாக்கிவிடக்கூடாது. அவ்வாறு ஏதும் தவறு நடந்தாலும் அதனைப் பெரிதுபடுத்தாது பொறுமை காக்க வேண்டும்.
சிலர் மூன்று, நான்கு வயதுப் பிள்ளைகளை ஜும்ஆவுக்கும் நன்றாக உடுத்தி கூட்டிவருகின்றார்கள். ஜும்ஆ பயான் முடியும்வரை பிள்ளை மடியிலே தூக்கம். தொழுகையின் போது எழுப்பி ஸப்பில் நிறுத்துகின்றார்கள்.
அப்பிள்ளை எப்படித் தொழுவான். சிலவேளை அதே இடத்தில் சிறுநீரும் கழித்து பள்ளியையும் அசுத்தப்படுத்தி விடுகிறான். பக்கத்தில் நிற்பவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள். வாரத்தில் ஒரு தடவை கிடைக்கும் அழகிய ஜும்ஆவைத் தொழவந்தவர்கள் திருப்தியுடன் திரும்பிச் செல்வார்களா?
இப்படியான செயல்களுக்கு பிள்ளைகளா? அல்லது பெற்றோர்களா காரணம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே தான் எமது வருங்காலச் செல்வங்களை மாநபி காட்டிய வழியில் வழிநடத்தி ஆத்மீக உணர்வும், நல்லொழுக்கமும் கொண்ட பரம்பரையை உருவாக்க ஒவ்வொரு பெற்றோரும் உறுதிகொள்வோம்.-Vidivelli
- என்.எல்.எம்.மன்சூர்
ஏறாவூர்