ஏப்ரல் 21 இன் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சம்பிரதாய வாழ்வியலை மீள்பரிசீலிக்க வேண்டியுள்ளது
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
நாட்டில் குறுகிய மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. அடுத்தகட்ட அரசியலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை மூடிய அறைக்குள் இருந்துகொண்டு தீர்மானிக்க முடியாது. இந்த விடயங்களில் தூரநோக்குடைய சாணக்கியமான அணுகுமுறைகளை கையாள வேண்டும். அதற்காக எங்களிடம் நிறைய படிப்பினைகள் இருக்கின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எஸ்.எச்.எம். ஆதம்பாவா மௌலவி எழுதிய ‘பனூ உமையா’ நூல் வெளியிட்டு விழா கடந்த வியாழக்கிழமை தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கட்சியிலிருந்து பிரிந்துசென்று ஆளும்தரப்பில் சேர்ந்துகொண்டு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில், நான் அஷ்ஷெய்க் அகார் முஹம்மதின் மாவனல்லை வீட்டுக்கு சென்றிருந்தேன். நான் அப்போது அமைச்சராக இல்லாவிட்டாலும் அமைச்சர் என்றுதான் என்னை வரவேற்றார்.
அப்போது அவர் என்னிடம் கூறிய ஒரு விடயம் மிகவும் வேதனையாக இருந்தது. கட்சியில் இருப்பதாக பைஅத் எனும் உறுதிமொழி செய்தவர்கள், பதவிமோகத்தில் அதை மறந்துவிட்டு செல்கின்றனர். பைஅத்தின் மகிமை தெரிந்தவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். அதன் மகிமை குறித்து உங்களது கட்சியின் உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொடுங்கள் என்று என்னிடம் சொன்னார். பைஅத் குறித்து அவர் கூறிய விடயங்களை மிகவும் ஆவர்த்துடன் கேட்டிக்கொண்டிருந்தேன்.
அகார் முஹம்மத் என்னிடம் ஓர் உதாரணத்தை சொன்னார். முஆவியா (ரழி) அவர்களின் மரணத்தின் பின்னர் யசீதின் கைகளுக்கு ஆட்சி கைமாறும் சந்தர்ப்பத்தில், அந்த ஆட்சி மதீனாவிலிருந்து டமஸ்கஸுக்குப் போய்விட்டது என்று எல்லோருக்கும் தெரியும். மதீனாவிலிருந்த ஸஹாபாக்களிடம் பைஅத் வாங்கவேண்டும் என்பது முஆவியா (ரழி) அவர்களின் விருப்பமாகும். முதிர்ச்சியடைந்த ஸஹாபாக்கள் பைஅத் செய்தனர். ஆனால், ஒருசில ஸஹாபாக்கள் பைஅத் செய்வதற்கு மறுத்துவிட்டனர்.
காலப்போக்கில் யசீதின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாக மாறிக்கொண்டிருந்தது. அப்போது, பைஅத் செய்யாத ஸஹாபாக்கள், பைஅத் செய்த ஸஹாபாக்களைப் பார்த்து நையாண்டி செய்தனர். எனினும், நாங்கள் பைஅத் செய்து கலீபாவாக ஏற்றுக்கொண்டு விட்டோம். எனவே, கொடுத்த வாக்குறுதியிலிருந்து மாறமுடியாது என்பதில் பைஅத் செய்தவர்கள் பிடிவாதமாக இருந்தனர் எனக் கூறிவிட்டு, என்னைப் பார்த்து கொடுங்கோல் யசீதை விடவா நீங்கள் கடுமையானவர் என்று நகைச்சுவையாகக் கேட்டார்.
அலி (ரழி) அவர்களின் பின்னர் ஹஸரத் முஆவியா (ரழி) அவர்களிடத்தில் ஆட்சி போகின்ற விவகாரம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள் என்பது சாதாரண விடயமல்ல. முஆவியா (ரழி) அவர்கள் ஒரு மிகுந்த ஆளுமையுள்ள கலீபா என்றால் அது மிகையாகாது.
உமர் (ரழி) அவர்களின் காலத்திலிருந்தே, முஆவியா (ரழி) ஷாம் தேசத்தின் ஆளுநராக 20 வருடங்கள் நியமனம் பெற்றிருந்தார். சிரியாவிலிருந்து டமாஸ்கஸ் பிரதேசத்தை ஆண்ட ஒருவராக அவர் இருந்தார். பல யுத்தங்களுக்குத் தலைமை தாங்கி சிரியாவுக்கும் அதற்கு வெளியிலும் இஸ்லாமிய சாம்ராச்சியத்தை வியாபிக்கச் செய்த புகழுக்குரிய கலீபா என்ற அடிப்படையிலும் அவரின் மகிமை வித்தியாசமானது.
அதேநேரம், இந்தக் கோத்திரங்களுக்கிடையில் பனூ ஹாஷிம்கள், உமையாக்களுக்கிடையில் இந்த ஆட்சிப் பொறுப்பு மாறுகின்றது. அது மாத்திரமல்ல, உமையாக்களுடைய காலம் என்பது வாரிசுரிமை அரசியல் ஆரம்பித்த காலம்.
தந்தைக்குப்பின் தனயன், தனயனுக்குப்பின் அவருடைய தனயன் என்று ராஜ பரம்பரையாக கிலாபத் உருமாறிய காலமும் அதுதான். அந்தக் காலத்தில் நடந்த பித்னாக்கள், பஸாதுகள் என்று நிறைய விடயங்கள் இருக்கின்றன.
வரலாறுகள் என்றாலே ஆளுக்காள் கொலை செய்வது, ஆட்சியாளர்களை கொலை செய்வது, அதற்குப்பின் படையெடுப்பது, நாடுகளை கைப்பற்றுவது என்பதாகத்தான் இருக்கிறது. இந்த நாட்டிலும் அப்படித்தான் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. மகாவம்சம் நூலில் இருப்பதெல்லாம் இப்படியான வரலாறுகள்தான். எந்த நாடாக இருந்தாலும் இவற்றை வைத்துத்தான் நாட்டின் வரலாற்றை பேசுகின்றனர்.
பித்னாக்களின் காலம் என்றால் பெரிதும் உமையாக்களின் காலம்தான். முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் குலபாஉர் ராஷிதீன்களுடைய காலமும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளென நினைக்கின்றேன். அந்த ஆண்டு காலத்துக்குள், ஆட்சியின் அடிப்படை எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி அனைத்து விடயங்களையும் முழு உலகுக்கும் அறியத்தந்த மார்க்கம் இஸ்லாமாகும்.
அதன்பின்னர் உமையாக்களின் 90 ஆண்டுகளில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ஐரோப்பாவின் ஸ்பெயினையும் தாண்டிய வரலாறு இருக்கின்றது. இப்படியாக இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் வியாபித்தபோதும் ஜமல் யுத்தம், ஸிப்பீன் யுத்தம் போன்றவைகள்தான் கூடுதலாக பேசப்படுகின்றன. எங்கெல்லாம் பித்னா நடந்ததோ அதைப் பற்றித்தான் பேசுவோம். ஆயிஷா (ரழி) அவர்கள்கூட யுத்தத்துக்கு சென்றவிடயம், நடந்த விடயம் என்றெல்லாம் பேசியிருக்கிறோம்.
ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர், இதற்கு முன்பிருந்த காலங்களை விடவும் மிகவும் வித்தியாசமான காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதற்கு சாட்சியாக நாங்கள் எல்லோரும் இருந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டத்தில் எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டிய விடயம், எங்களது சம்பிரதாய வாழ்வியலை 2019 ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் மீள்வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நமது அரசியலாக இருக்கட்டும், ஆன்மிகமாக இருக்கட்டும், சமூகத் தொடர்பாடலாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் முழுமையாக மீள்வாசிப்புக்கு உட்படுத்தி வேண்டியுள்ளது. பல்லினத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் எங்களுக்கான இடத்தை கௌரவமாக வகுத்துக்கொள்வது என்பது சாதாரணதொரு போராட்டமாக இருக்கப் போவதில்லை.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக அநியாயம் நடக்கின்றபோது, நியாயத்துக்காக அனைத்து சமூகங்களும் வீதியில் இறங்கி ஒன்றாகப் போராடுகின்றனர். ஆனால், நாங்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். இதனை தனியாகப் போராடி வெற்றிகொள்வது சாதாரண விடயமல்ல. எனவே, எங்களுடைய உறவுப்பாலங்களை இன்னும் தாராளமாக மனம்திறந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
நாட்டில் இன்னும் குறுகிய மனப்பாங்கு மாறவில்லை. இப்போது சுவர்களில் சித்திரம் வரைந்தால் தங்களுடைய சமயம், கலாசாரம் என்பன பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். இப்போது எல்லா சுவர்களிலும் சித்திரங்கள் வரையப்படுகின்றன. இதனால் நாங்களும் ஏதாவது படம் வரையவேண்டிய தடுமாற்ற நிலைக்கு ஆளாகிறோம். இந்த தடுமாற்றம் எங்கள் மத்தியில் தொடர்ந்து நீடிக்கமுடியாது.
அடுத்தகட்ட அரசியலை எப்படி எதிர்கொள்வதென்று வர்த்தகப் பிரமுகர்கள் உட்பட அநேகர் இன்று அடிக்கடி கூடிக் கதைத்துக்கொண்டிருக்கின்றனர். நாங்கள் மூடிய சுவர்களுக்குள் இருந்துகொண்டு இதற்கு முடிவெடுக்க முடியாது. இந்த விடயங்களில் தூரநோக்குடைய, தெளிவான, சாணக்கியமான அணுகுமுறைகளை நாங்கள் கையாள வேண்டும். அதற்காக நாங்கள் நிறைய படிப்பினைகளை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
நடந்த சம்பவம் குறித்த மீள்வாசிப்பு என்பது, பல அதிர்ச்சியான விடயங்களை எங்களுக்கு காட்டித்தரும். நாங்களே பார்க்காத எத்தனையோ பக்கங்கள் இருக்கின்றன. ராஜன் ஹூல் என்ற பேராசிரியர் இந்த சம்பவம் தொடர்பில் ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். நாங்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நடத்திய விசாரணைகளை அடிப்படையாக வைத்து, அவர் அதற்குமேல் ஒரு விசாரணை செய்கின்றார். அதிலிருந்து பல அதிர்ச்சியாக விடயங்களை தொட்டுப் பேசுகிறார்.
Sri Lanka’s Easter Sunday: When the deep state gets out of its depth என்ற அவரது நூலை எல்லோரும் வாசிக்க வேண்டும். தாக்குதலின் பின்னாலுள்ள சதிகுறித்து மிகவும் திட்டவட்டமாகப் பேசுகிறார். கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய பல விடயங்களை நூலாசிரியர் ஆதாரபூர்வமாக கேள்விக்குட்படுத்தியிருக்கிறார். அதிலுள்ள விடயங்களை நான் பேசினால், என்னைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். ஏனென்றால், நாம் அப்படியான காலகட்டத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நாங்கள் பாராளுமன்றத்தில் நடத்திய தெரிவுக்குழு விசாரணைகளை அடிப்படையாக வைத்து, அதிலுள்ள தகவல்களை திரட்டி, கடந்த காலங்களில் நடந்ததைத் தொகுத்துப் பார்க்கின்றபோது இப்படித்தான் இந்த விடயங்கள் அரங்கேறியிருக்கின்றன என்பது புலனாகும். ஈஸ்டர் தாக்குதல் திட்டமிட்ட சதி என்பது குறித்து, நூலாசிரியர் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். அது ஒருவருடைய பார்வையாக இருந்தாலும், இப்படி பல கோணங்களில் இருந்தும் விடயங்கள் அணுகப்பட வேண்டும்.
தாக்குதலின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, யதார்த்தபூர்வமாக இந்தப் பிரச்சினைகளுக்கு எப்படி முகம்கொடுப்பது என்பதில் இன்னும் கூர்மையான சிந்தனைகளோடு, பக்குவப்பட்ட அணுகுமுறைகளுடன் இந்த விடயங்களை கையாளவேண்டும்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் அவர் தெரிவித்த எங்களுக்கு உடன்பாடில்லாத விடயங்களை பாராளுமன்றத்தில் பேசியிருந்தேன். எடுத்ததற்கெல்லாம் சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்தவர்களை தீவிரவாதிகள் என்கிறார். தீவிரவாதிகளுடன் தொடர்புகள் இனித் தேவையில்லை என்கிறார். பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெல்ல முடியாது என்ற சிந்தனையை நாங்கள் மாற்றியிருக்கிறோம் என்ற வெற்றிக்களிப்பில் அவர் பேசியிருந்தார்.
அதுகுறித்து நான் பாராளுமன்றத்தில் பேசும்போது அதில் எந்தப் பிழையும் ஆச்சரியமும் இல்லையென்று சொன்னேன். நாட்டிலுள்ள ஒரு சமூகத்தவர்கள் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிகபட்சமாக வாக்களித்தார்கள் என்பது ஜனநாயகத்தில் ஆச்சரியமானதோ அல்லது பிழையான விடயமோ அல்ல. அதில் எந்த தவறும் இருக்க முடியாது. அதுதான் ஜனநாயகத்தின் ஒரு முக்கியமான அம்சம். ஜனாதிபதி இதை சொல்லிக் காட்டியதன் மூலம் அவர் என்ன சொல்லவருகிறார், அதில் தொக்கிநிற்கும் விடயம் என்பனதான் எங்களுக்கு சங்கடமானவை. தன்னுடன் இல்லாதவர்கள் தனது விரோதிகள் என்ற அவரின் நிலைப்பாடு, தனக்கு வாக்களிக்காத அனைவரும் தனது விரோதிகள் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்துவிடக்கூடாது. இதனால் சில விடயங்களை பக்குவமாக சிங்கள மொழியில் தெளிவாக சொல்லியிருந்தேன்.
நான் கூறிய விடயங்களை ஜனாதிபதி புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கு போதுமான சிங்கள பௌத்த மக்கள் வாக்களிக்கவில்லை என்றால், அதற்காக மக்களை குறைகூற முடியாது. ஏன் அந்த வாக்குகள் கிடைக்கவில்லை என்று ஐ.தே.க. சுயவிமர்சனம் செய்யவேண்டும். அதேபோல, ஜனாதிபதிக்கு போதுமான சிறுபான்மையினர் வாக்களிக்கவில்லை என்பதையும் அவர் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன் என்றார்.-Vidivelli