சஜித் வென்றிருந்தால் கிழக்கு மாகாணம் இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தெரிவிப்பு
“சஜித் வென்றிருந்தால் கிழக்கு மாகாணம் இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும். ஈரானுக்கு இன்று நடந்திருப்பதைப் பாருங்கள். போலி அரசியலுக்கு பின்னால் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் இழுத்துச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். சமூக நலன் கருதாமல் நானும் ஒரு சாதாரண அரசியல்வாதியாக இருந்திருந்தால் கல்முனையில் இருந்து சாய்ந்தமருது என்றோ பிரிந்திருக்கும். அதில் இருக்கின்ற நன்மை, தீமைகள் பற்றி ஆலோசித்திருக்கமாட்டோம்” என்று தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
எம்.எச்.எம்.இப்ராஹிம் எழுதிய ‘நான் எய்த அம்புகள்’ நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக கலைபீட பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில், கலைஞர் ஏ.எல்.அன்ஸாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்;
“கல்முனையில் இன்று பல பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழர்கள் பிரதேச செயலகம் கேட்கிறார்கள். சாய்ந்தமருது மக்கள் நகர சபை கேட்கிறார்கள். நான் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்காமல் சுயநல அரசியல் செய்கின்ற ஒருவனாக இருந்திருந்தால் கல்முனையில் இருந்து சாய்ந்தமருது பிரிவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை கருத்தில் கொள்ளாமல் சாய்ந்தமருது நகர சபையை எப்போதோ உருவாக்கித் தந்திருக்க முடியும்.
சாய்ந்தமருத்துக்கு நகர சபை வேண்டும் என்ற கோஷம் வந்தபோது அன்றே சொன்னேன். கல்முனை பள்ளிவாசல் நிர்வாகமும் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகமும் தமது நிலைகளில் இருந்து மாற வேண்டும் என்று கூறினேன். இரு தரப்பினரதும் அணுகுமுறைகளில் தவறிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அது செவிமடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் தெளிவாக சிந்தித்து வாக்களித்த வரலாறு கிடையாது. எதற்காக வாக்களிக்கின்றோம் என்று தெரியாமல் வாக்களிக்கின்றீர்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரிப்பதற்காக ஒன்றுபட்டதைத் தவிர வேறு எதற்காவது ஒன்றுபட்டிருக்கிறீர்களா? புத்திஜீவிகளும் கல்விமான்களும் நிறைந்த ஊர் என்று சொல்கிறோம். ஆனால் மக்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லை.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அதுவே ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் பலமாகும். வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் இரு வேறான நிலைப்பாட்டில் இருக்கலாம். அவர்கள் பிரிந்து நின்றாலும் பிரச்சினையில்லை. அவர்களுக்கும் கிழக்கிலிருந்து நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் சிங்கள பேரினவாதத்திற்கும் தமிழ் பேரினவாதத்திற்கும் முகம்கொடுக்க வேண்டிய நிலையில் கிழக்கு முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
சஜித் வென்றிருந்தால் கிழக்கு மாகாணம் இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும். ஈரானுக்கு இன்று நடந்திருப்பதைப் பாருங்கள். போலி அரசியலுக்கு பின்னால் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் இழுத்துச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் அபிவிருத்திகளுக்கும் தேசிய காங்கிரஸ் பாரிய பங்களிப்பை செய்திருக்கிறது. ஆனால் சில பிரதேசங்கள் எனது அபிவிருத்திகளை வேண்டாம் என்று புறக்கணித்திருந்தன. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
முஸ்லிம் தனியார் சட்டம் ஒழிக்கப்படப் போகிறது என்று சிலர் ஓலமிடுகிறார்கள். முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று நம்மில் சிலர் கோரியபோது நான் மட்டும் சொன்னேன். அதற்கான தருணம் இதுவல்ல என்றும் நாம் அவ்வாறு செய்ய முற்பட்டால் பேரினவாத சக்திகள் அதனை முற்றாக ஒழித்து விடுவதற்கு புறப்படுவார்கள் என்றும் அழுத்தமாக சொன்னேன். ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா போன்றோருக்கு கடிதம் எழுதினேன். எவரும் கேட்கவில்லை. இன்று என்ன நடக்கிறது. பாராளுமன்றத்திற்கு நீங்கள் வாக்களித்து அனுப்பிய எம்.பி.க்கள் தான் முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்சினையை பார்த்துக்கொள்ள வேண்டும்.
5 வெட்டுப் புள்ளி 12.5 வீதமாக அதிகரிக்கப்படப்போகிறதாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் 5 வீத வெட்டுப்புள்ளியால் முஸ்லிம்கள் ஒருபோதும் நன்மையடையவில்லை. அது சிறிய கட்சிகளுக்கு பொதுவான வரப்பிரசாதமாகும்.
ஏதோ இந்த 5 வீதத்தினால் முஸ்லிம்கள் நன்மையடைந்தது போன்று கத்துகிறார்கள். இப்பிரச்சினையையும் ஹக்கீம், ஹரீஸ் போன்றோர் பார்த்துக்கொள்ளட்டும்” என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் சிராஸ் யூனுஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம்.ஏ.ஜவாத், ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸ்ஸாக், கைத்தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.நஸீர், உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் ஆகியோரும் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
அறிஞர் சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் தலைவர் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா, நூல் பற்றிய திறனாய்வுரையையும் பேராதனை பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் முபிஷால் அபூபக்கர், கலாபூஷணம் ஏ.பீர்முஹம்மத் ஆகியோர் கருத்துரைகளையும் நிகழ்த்தினர்.
சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக் நூலின் முதல் பிரதியையும் இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.சி.எம்.இக்பால் முதன்மைப் பிரதியையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் கல்விமான்கள், வர்த்தகர்கள், கலை, இலக்கியவாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்பு பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.-Vidivelli
- அஸ்லம் எஸ்.மௌலானா