ராகம வைத்தியசாலை தொழுகை அறை, கிராண்ட்பாஸ் பள்ளியை மீள திறக்க நடவடிக்கை எடுக்குக
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை
ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களையடுத்து மூடப்பட்ட ராகம வைத்தியசாலையில் இயங்கிவந்த தொழுகை அறையை மீளத்திறப்பதற்கும், பல வருடங்களாக மூடப்பட்டுள்ள கிராண்ட்பாஸ் மோலவத்த பள்ளிவாசலை மீளத்திறப்பதற்கும் உடனடியாக ஏற்பாடுகளைச் செய்யுமாறு கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் கருத்து தெரிவிக்கையில், பல வருடங்களாக கிராண்ட்பாஸ் மோலவத்த பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல்வாதிகளிடம் கோரிக்கைகள் விடுத்தபோது விரைவில் ஏற்பாடு செய்வதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
ஆனால் தீர்வு வழங்கப்படவில்லை. எனவே இப்பகுதி மக்களின் நலன்கருதி உடனடியாக பள்ளிவாசல் திறக்கப்படவேண்டும்.
அத்தோடு கடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலையடுத்து ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் இன்று வரை ராகமை வைத்தியசாலையின் தொழுகை அறை மூடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு சுமுகநிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் விரைவில் தொழுகை அறை திறக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா உறுதியளித்துள்ளார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்