ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை
உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டின் நலன்கருதியே இந்த தீர்மானத்தை அமைச்சு மேற்கொண்டுள்ளது எனவும் அவர் விடிவெள்ளிக்கு குறிப்பிட்டார்.
இந்தப் பல்கலைகழகத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் மத்தியிலிருந்து பாரிய எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வியமைச்சர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
SAITM என்று அழைக்கப்படும் மருத்துவ மற்றும் தொழிநுட்ப கற்கைகளுக்கான தெற்காசிய நிலையத்தை அரசாங்கம் பொறுப்பேற்றது போல் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுடன் கலந்துரையாடப்படவுள்ளது. இந்த தனியார் பல்கலைக்கழம் தனியொரு இனத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரைத் தளமாகக் கொண்டு செயற்படும் அல்–ஜுபைல் நன்கொடை மன்றத்தின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான புணானை பிரதேசத்தில் சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.-Vidivelli
- றிப்தி அலி