ஜனாதிபதியின் நல்ல வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கின்றோம். அதேபோன்று சிறுபான்மை சமுதாயம் மற்றும் சிறுபான்மை கட்சிகளை பிழையான கண்கொண்டு பார்ப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோமென அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தற்போது ஆரம்பித்துள்ள நல்ல விடயங்களுக்கு நானும் எனது கட்சியும் ஆதரவளிக்கத் தயாராக இருக்கின்றோம். என்றாலும் சிறுபான்மை சமுதாயம் மற்றும் சிறு கட்சிகளை பிழையான கண்கொண்டு பார்ப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சிறுகட்சிகளை வெளியேற்றுகின்ற சிந்தனை இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயலாகும்.
அத்துடன் ஜனாதிபதியின் உரையில் நீண்டகால யுத்தத்துக்கு முகம்கொடுத்த வடகிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவோ நிரந்தமான தீர்வு சம்பந்தமாகவோ பல பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்திருக்கின்றபோதும் அது தொடர்பில் எந்த வார்த்தையும் தெரிவிக்கப்படாமலிருந்தது கவலையளிக்கின்றது. அதேபோன்று வடகிழக்கு மக்களின் தீர்க்கப்படவேண்டிய காணிப்பிரச்சினை இருக்கின்றது. இதுதொடர்பாகவும் எந்த அறிவிப்பையும் காணவில்லை.
அத்துடன் நாங்கள் சிறுபராயத்தில் தேசிய கீதத்தை தமிழில் பாடியிருக்கின்றோம். ஆனால் இன்று தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாதென அமைச்சர் ஒருவர் தெரிவித்திருப்பது வேதனையளிக்கின்றது. இவ்வாறான சம்பவங்கள் 1956ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவங்களை மீண்டும் எண்ணத்தூண்டுகின்றது. அதனால் இதுதொடர்பாக தெளிவான பதிலொன்றை தரவேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
மேலும், இஸ்லாமிய அடிப்படைவாதம் என தெரிவிக்கின்றனர். இஸ்லாத்தில் அடிப்படைவாதம் என்றதொன்று கிடையாது. இஸ்லாத்தின் பெயரால் யாரோ ஒருவர் செய்த தவறை கண்டித்ததோடு அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை காட்டிக்கொடுத்து அவர்களுக்கு பூரண தண்டனையை பெற்றுக்கொடுக்கின்ற விடயத்தில் எமது சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றது.
அத்துடன் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது தவறென சரத் பொன்சேகா சபையில் தெரிவித்திருந்தார். ஸஹ்ரான் என்ற ஒரு கயவன் செய்த அந்தக் கொடிய செயலுக்காக, 22இலட்சம் முஸ்லிம் மக்களையும் பிழையான கண்கொண்டுபார்ப்பது தவறான செயலாகும். அவ்வாறான சிந்தனைகள் மாற்றப்படவேண்டும்.
அதேபோன்று வைத்தியர் ஷாபியின் விடயத்தில் மீண்டும் அநீதி இழைக்கப்படுகின்றது. அவர் தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்த பின்னரும் மீண்டும், அவர் விசாரிக்கப்பட வேண்டுமென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கோருவது எந்த வகையில் நியாயமானது? குற்றமிழைத்தால் தண்டிக்கப்பட வேண்டுமேதவிர, இஸ்லாமியர் என்பதற்காக அவர் தண்டிக்கப்படக் கூடாது.
அத்துடன் அண்மையில், நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்னால் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளார்கள். அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றார்.-Vidivelli
- ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்