பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணையொன்றினை சமர்ப்பித்திருந்தாலும் அதற்கு ஆதரவு கிடைக்கப்போவதில்லை. அந்த தனிநபர் பிரேரணை தோல்வியிலேயே முற்றுப்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத் தரப்பிலும் இதற்கு ஆதரவு கிடைக்காது.
தங்களது வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்வதற்காகவே இனவாத நோக்குக் கொண்டவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
இனவாதக் கொள்கைகளைக் கொண்டுள்ளவர்கள் எல்லா தரப்பிலும் இருக்கிறார்கள். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா புலனாய்வு பிரிவின் முக்கிய பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தவறாகும். தகுதியானவர்கள் எந்தச் சமூகத்தில் இருந்தாலும் நியமிக்கப்படவேண்டும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்