”சமூகம் குற்றங்களை தயார் செய்து வைக்கிறது. குற்றவாளிகள் அதனை செய்து முடிக்கிறார்கள்” என்பது பிரபல ஆங்கில வரலாற்றாசிரியர் ஹென்ரி தோமஸ் அவர்களது கூற்றாகும்.
இலங்கையின் கடந்த ஒரு வார காலத்தினுள் இடம்பெற்ற இள வயதினரின் குற்றங்கள் மற்றும் மரணங்கள் இந்தக் கூற்றை மெய்ப்படுத்துவதாகவே உள்ளன.
பேருவளையிலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றினுள் மாணவத் தலைவர் ஒருவருக்கும் மற்றொரு மாணவருக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில், குறித்த மாணவத் தலைவர் பின்னர் உயிரிழந்தார். இச் சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது ஒரு திட்டமிட்ட கொலைச் சம்பவம் அல்ல; விபத்துதான் என்ற போதிலும் இவ்வாறான சம்பவங்களின் போது சக மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் , பெற்றோர் எந்தளவு தூரம் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு படிப்பினையாகும். பாடசாலைகளினுள் இடம்பெறும் விபத்துகளின்போது அலட்சியமாக இருப்பதோ அல்லது மாணவர்களுக்கு உரிய முதலுதவிகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொடுக்காதிருப்பதோ உயிருக்கே உலை வைக்கும் என்பதை சகலரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மறுபுறம் மாத்தறை, எலவேல்ல பிரதேசத்தில் இரு மாணவர் குழுக்களிடையேயான மோதலில் பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க வீதியில் வைத்தே மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்படுகிறார். இந்தக் குற்றத்தைச் செய்ததும் மற்றொரு மாணவர்தான்.
அதேபோன்றுதான் மொனராகலை – சுமேதவெவ பகுதியில் 22 வயதான தனது காதலியை இளைஞர் ஒருவர் வீதியில் வைத்தே கழுத்து நெரித்துக் கொலை செய்கிறார்.
உண்மையில் மாத்தறை சம்பவத்தில் ஒரு பாடசாலை மாணவனை தனியார் வகுப்பொன்றுக்கு அருகில் வைத்து சம வயதிலான இன்னொரு மாணவன் அல்லது மாணவக் குழு தாக்கும் நேரத்தில், அப்பகுதியில் பலர் இருப்பது அல்லது அந்த பகுதியூடாக பலர் செல்வது சி.சி.ரி.வி. காணொலிகளில் காணக் கிடைக்கின்றது.
அதே போல் மொனராகலை சம்பவத்தில் காதலியை வீதியில், கழுத்து நெரிக்கும் போது, மிகக் கிட்டிய தூரத்தில் இருந்து அதனை கையடக்கத் தொலைபேசியில் இருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் சேர்ந்து படம் பிடிக்கின்றனர். எனினும் இவ்விரு சந்தர்ப்பங்களிலும் எவரும் குற்றம் ஒன்றினை தடுக்க முன்வரவில்லை. அல்லது ஒரு உயிர் கொல்லப்படுகின்றது என நன்கு அறிந்தும் அதனைக் காப்பாற்ற எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை என்பது அச்சம்பவங்கள் தொடர்பிலான காணொலிகளை பார்க்கும் போது தெளிவாகின்றது.
உண்மையில் போக்குவரத்து விபத்தொன்றின் போது, விபத்தொன்றினைத் தடுக்காமை என தனியாக குற்றச்சாட்டு எழுதப்படும் எமது நாட்டில், குற்றம் ஒன்றினை தடுக்க சக்தியிருந்தும், அதனை வேடிக்கை பார்க்கும் சமூகம் ஒன்று உருவாகியுள்ளமை மிக வேதனைக்குரியது.
எனவே இவ்விரு சந்தர்ப்பங்களிலும் குறித்த குற்றங்களை தடுக்க சக்தி இருந்தும் அதனை வேடிக்கை பார்த்தமை, அக்குற்றத்துக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாகவே அர்த்தம் கொள்ளப்படும். குற்றத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்களை மாத்திரம் கைது செய்யாது, அவற்றை வேடிக்கை பார்த்து படம்பிடித்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். எனவே அது குறித்தும் பொலிஸார் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இன்னொரு இடத்தில் இவ்வாறு வேடிக்கை பார்ப்பது தவிர்க்கப்பட்டு குற்றம் ஒன்று தடுக்கப்படும் சூழல் உருவாக்கப்படும். பெறுமதிக்க உயிர்களும் காப்பாற்றப்படும்.
இந்த சம்பவங்கள் நம்மைச் சூழ வாழுகின்ற சமூகத்தின் மனோநிலை தொடர்பான கேள்வியை உரத்து எழுப்புகின்றன. கண் முன்னே உயிர் ஒன்று பறிக்கப்படுகையில் அதனை வேடிக்கை பார்க்குமளவுக்கு நமது சமூகத்தின் மனிதாபிமானம் எங்கே போனது?
அடிப்படையிலிருந்தே நமது சிறார்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் கல்வியறிவூட்டப்பட வேண்டும். இன்றேல் நாளை நமது உயிரும் பறிக்கப்படுகையில் சமூகம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது போய்விடும்.
-Vidivelli