முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குக
பொதுக் கட்டளைச் சட்டத்திலும் திருத்தம் வேண்டும்; தனிநபர் பிரேரணையை சபையில் சமர்பித்தார் ரதன தேரர்
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகவே இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1907 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விவாக (பொது) கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றையும் அவர் தனிநபர் சட்டமூலமாக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 1907ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விவாக (பொது) கட்டளைச் சட்டத்தில் மாற்றம் ஏற்படவிருப்பதுடன் முகவுரையில் காணப்படும் முஸ்லிம்களின் திருமணம் தவிர்ந்த என்ற வசனம் நீக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக 2009ஆம் ஆண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இதன் தலைவராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் குழு 9 வருடங்கள் இது தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்களை சேகரித்திருந்ததுடன் 2018ஆம் ஆண்டு தமது பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதன் பின்னர் 2019 ஜுலையில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் அறிக்கையிலுள்ள 14 பரிந்துரைகள் தொடர்பில் இணக்கம் தெரிவித்திருந்தபோதும் பின்னர் அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது சரியாகக் குறிப்பிடப்படாமையே தற்போது நடைமுறையில் உள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இச்சட்டத்தின் 23 ஆவது சரத்தில் 12 வயதுடைய முஸ்லிம் பெண் பிள்ளைகள் காதி நீதிமன்றத்தின் அனுமதியிருந்தால் ஆண் ஒருவரைத் திருமணம் முடிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமூலங்களை முன்வைத்த அத்துரலியே ரதன தேரர் கூறுகையில், முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் காதி நீதிமன்றங்களினால் இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பிலும் அடிப்படைவாதிகளினால் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளினால் எனது சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இச்சபையின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன் என்றார்.-Vidivelli
- ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்